கேரள மாநிலத்தின் அரசு மலர் கொன்றை. இந்தப் பூக்கள் விஷு பண்டிகையில் முக்கிய இடம் பிடித்துள்ளது. ‘பேபேசியே’ (Fabaceae) என்னும் தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்த கொன்றை அல்லது சரக்கொன்றை ஒரு பூக்கும் தாவரமாகும். இதன் தாயகம் இந்திய துணைக்கண்டம் மற்றும் அருகில் உள்ள தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஆகும். இந்த மரம் நச்சுக் காற்றை ஈர்த்து வடிகட்டி நமக்குத் தருகிறது.
இம்மலர் குறித்து ஔவை மூதாட்டி, ‘கொன்றை வேந்தன்’ எனும் அறநூலில் குறிப்பிட்டுள்ளார். கொன்றை மலரை விரும்பி அணியும் கடவுள் சிவன் என்று இந்நூலில் பாடப்பட்டுள்ளது. சிவன் கோயில்கள் சிலவற்றில் தல விருட்சமாக விளங்கும் சரக்கொன்றைக்கு இதழி, கடுக்கை, கொன்னை, தாமம் என்ற வேறு பெயர்களும் உள்ளன.
கொன்றை மலரில் பல வகைகள் உண்டு. அவை, சரக்கொன்றை, சிறுகொன்றை, செங்கொன்றை, கருங்கொன்றை, மஞ்சள்கொன்றை, மயில்கொன்றை, புலிநகக்கொன்றை, பெருங்கொன்றை, மந்தாரக்கொன்றை மற்றும் முட்கொன்றை எனப் பல கொன்றைகள் இருந்தாலும், சரக்கொன்றைதான் மிகவும் பிரசித்தி பெற்றது.
கோடை காலமான சித்திரை மாதத்தில் சரம் சரமாகப் பூத்துக் குலுங்குவதால் சித்திரைப்பூ, திருக்கொன்றை, சொர்ண புஷ்பம் என்றும் இதை அழைக்கிறார்கள். கோடையின் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய சரக்கொன்றை மஞ்சள் நிறத்தில் பூத்துக் குலுங்கும். இது ஓரடி நீளத்துக்கும் அதிகமாக வளரக்கூடியது. பூச்சரங்கள் பொன்னிறமாக ஜொலிக்கும். சரக்கொன்றையின் பூ, இலை, மரப்பட்டை என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை.
இம்மலரின் பயன்கள்:
கொன்றை மலரை ஆவியில் வேக வைத்து, அதன் சாறைப் பிழிந்து, அதில் நாட்டுச் சர்க்கரைச் சேர்த்து, கால் லிட்டர் அளவு குடித்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறிவிடும்.
தேமல், சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இம்மரத்தின் இலை மற்றும் விழுதை அரைத்துப் பூசி வருவதன் மூலம் நல்ல பலன் காணலாம்.
கொன்றை மலரை மையாக அரைத்து காய்ச்சிய பசும்பாலுடன் சேர்த்துக் குடித்து வந்தால் உள்ளுறுப்புகள் பலம் பெறுவதோடு, உடலும் ஆரோக்கியம் பெறும்.
கொன்றை பூக்களைக் கஷாயமாக்கிக் குடித்து வந்தால் சர்க்கரை நோய் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் சரியாகும். இதன் வேர்ப்பட்டையை கஷாயம் வைத்து குடிக்க, இதய நோய், காய்ச்சல் போன்றவை குணமாகும்.
கொன்றை இலை மற்றும் மலரை அரைத்து கண்களின் மேல் வைத்துக் கட்டி வந்தால் கண் சம்பந்தமான நோய்கள் வராது.
இம்மரம் கிரகங்களின் கெட்ட கதிர் வீச்சுக்களை இழுத்துக் கொண்டு, நமக்கு நற்பயன்களை அளிக்கும். இம்மரத்தை வீட்டில் வளர்ப்பதினால் அந்த வீடு எப்பொழுதும் தெய்வ கடாட்சம் நிறைந்ததாகக் காட்சி தரும்.