புத்தபிரான் என்ற சாக்கிய முனி!

புத்தபிரான் என்ற சாக்கிய முனி!

னித குலத்தின் துன்பங்களுக்கு எந்த மதமும் இன்று வரை முழுமையான தீர்வு தந்ததில்லை என்ற உண்மையையும், ’கர்மா’ என்ற விதிக்குக் கடவுள் கூட விலக்கு இல்லை என்ற ஹிந்து மதத் தத்துவத்தையும் உணர்ந்து புத்தபிரான் தோற்றுவித்த மதம் பௌத்தம். கர்மா, ஆத்மா மீது நம்பிக்கை, மறுபிறவி, பிரும்மா ஸாகா (இந்திரன்) ஆகிய தெய்வங்கள் மீது நம்பிக்கை, ஹிந்துவாய்ப் பிறந்தாலும் அம்மதத்தின் சில சடங்குகள் மீது நம்பிக்கை இன்மை போன்ற கோட்பாடுகள் அவரைப் பெரிதும் வேறுபடுத்திக் காட்டின! சம்பிரதாயமாக இயங்கி வந்த சனாதன மதம், சரிவைச் சந்திக்காவிடினும் தன்னை சுய பரிசோதனை செய்து கொண்டது!

ஆயினும், அவரை நாளடைவில் இறைவனின் அவதாரமாகப் போற்ற எந்தத் தடையும் எழவில்லை! அவர் இறைவன் என்ற சக்தியின் பொருளைத் தெளிவாகப் புரிந்துரைக்காமலேயே, அஹிம்சை என்ற கோட்பாட்டின் பொருளை மகாவீரரை போல் ஐயந்திரிபர விளக்காமலேயே மறைந்து விட்டார் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால், எல்லா இறைத்தூதர்களும் தம் பணி நிறைவுறாமல்தான் மறைந்திருக்கிறார்கள் என்பது பேருண்மை!

புத்தரின் தத்துவ ஆராய்ச்சி முடிவற்றதாகவே அமைந்தது எனலாம். இறைவனைத் தேடி தன் தியானம், குவிந்த சிந்தனை, தனிமை மற்றும் யோக பயிற்சிகள் மூலம் அவரை அறிய முயன்ற பித்தபிரானுக்குக் கிட்டியது ஆசையை துறக்கும் ஞானம் மட்டுமே! அதைத்தான் அவர் நிர்வாணா என்றார். அவர் கூறிய நீதி நெறிகளில் புரட்சிகரமானவை சாதிப் பாகுபாடுகளை எதிர்த்தல், எளிமை மற்றும் தனிமனித ஒழுக்கம் ஆகியவை. அதுவே அவருடைய தனிப்பெரும் கோட்பாடு! அதைத் தன் தவ நெறியிலும், சொந்த வாழ்க்கையிலும் நிகழ்த்திக் காட்டிய மாமனிதர் அவர். மன்னர் குலத்துக்கென்று அந்தக் காலத்தில் ஒரு மதிப்பு இருந்ததால், அவர் நிறுவிய கோட்பாட்டை மதம் எனக் கருதி பலதரப்பட்ட மக்களும், மன்னர்களும் அதை ஏற்றனர். அவருடைய சீடர் குழுவில் ஆண்கள் பிக்கு என்றும் பெண்கள் பிக்குனி என்னும் அழைக்கப்பட்டனர். விசாகா என்ற அங்க தேச பெண் பிக்குனியாக இருந்ததாக அறிகிறோம். புத்தரின் உபதேசங்களை தொகுத்து எழுதிய 250 சீடர்கள் பௌத்த துறவிகளாக மாறியவர்கள். அவர் வாழ்ந்த காலத்திலும் பிறகும் எழுதப்பட்ட 'தேராகதா 'என்ற தொகுப்பு இயற்கை மற்றும் பௌத்த துறவிகளின் சொந்த அனுபவங்கள் ஆகியவற்றைக் குறிப்பது. 'தேரிகதா' சமூக வாழ்க்கையை விளக்குவது. ஜாதகா என்பது அதிகம் கற்பனை கலந்த கதைகள். அதில் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களும், பெண்களை கேலியாக சித்திரித்துள்ள விவரிப்புகளும் உள்ளன என்று நவீன காலத்தில் குறை கூறியோர் இருந்தனர்!

பௌத்தம் பரவ உதவிய சீடர்கள் எழுதியவற்றை ஆராய்ந்தால், அவருடைய சூத்திரங்கள், நியாயங்கள், உரைகள் ஆகியவற்றில் வேதங்கள், உபநிஷதம் ஆகியவற்றின் கருத்துக்கள் பலவற்றைக் காணலாம். ஆனால், அதே சமயம் ஏக தெய்வ வழிபாடு என்பதும் வலியுறுத்தப்படவில்லை. வேதச் சடங்கு எதிர்ப்பு, ஜாதி எதிர்ப்பு, விலங்குகள் பலி எதிர்ப்பு ஆகியவற்றை அவரது அறிவுரைகளில் ஓரிரு தொகுப்புகளாகிய சனாதன சூத்திரா, கூட தந்த்ர சூத்திரம் ஆகிய நூல்கள் ஆதரித்து பேசுகின்றன. புத்தர் புலால் உண்பதை எதிர்க்கவில்லை! அவர் கி.மு.487ல் தன் 80ஆவது வயதில், இன்றைய கோரக்பூர் அருகில் உள்ள குஷிநகர்ப் பகுதியில், பாவா என்ற ஊரில் உள்ள சுண்டா என்ற கொல்லனின் அழைப்பை ஏற்று, அவன் வீட்டில் சமைத்த பன்றி கறியை உண்ணும்போது, தொண்டையில் எலும்பு சிக்கி இறந்தார் என்ற செய்தியையும், அதன் காரணமாக ’சூக்கரமத்தவா’ என்ற பெயர் பெற்றார் என்ற செய்தியையும், ’Sukaramaddhava and the Buddha's death’ என்ற நூல் கூறுகிறது.

சில நேரங்களில் எதையோ தேடப்போய் வேறு எதுவோ கிடைப்பதுண்டு. புத்தருடைய சங்கம் மற்றும் சாசனங்கள் பற்றிய செய்திகளில் அவரது வாரணாசி உபதேசங்கள் நான்கு பேருண்மைகளை விளக்குவன என்ற குறிப்பு உள்ளது. துக்கம், சமுதாயம், நிரோதம், மார்க்கம் என்பனவே அவை! புத்த பூர்ணிமா தினமான இன்று (5.5.2023) புத்தபிரானின் வாழ்க்கை நெறிமுறைகளைக் கடைபிடித்து நலமுடன் வாழ்வோம்.

logo
Kalki Online
kalkionline.com