சகல ஐஸ்வர்யம் தரும் சாளக்ராம பூஜை!

சகல ஐஸ்வர்யம் தரும் சாளக்ராம பூஜை!
Published on

சாளக்ராமம் என்பது நேபாளத்தில் முக்திநாத் பகுதியில் அமைந்துள்ள கண்டகி நதியில் கருமை நிறத்தில் கிடைக்கும் புனிதமான ஒரு கல்லாகும். சாளக்ராமம் மகாவிஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படுவதால் வைணவர்கள் கோயில்களிலும் தங்கள் வீடுகளிலும் வைத்து முறைப்படி பூஜிக்கிறார்கள். சாளக்ராமத்தில் மும்மூர்த்திகளும் தேவாதி தேவர்களும் நித்யவாஸம் செய்வதாக ஐதீகம்.

சாளக்ராமக் கல்லானது நத்தைக்கூடு, சங்கு, நட்சத்திரம் என பல்வேறு வடிவங்களில் கிடைக்கிறது. மஹாவிஷ்ணு தங்கமயமான ஒளியோடு திகழும், ‘வஜ்ரகிரீடம்’ என்ற பூச்சியாக வடிவெடுத்து சாளக்ராமக் கல்லைக் குடைந்து அதன் மையத்தை அடைந்து அங்கு ரீங்கார வடிவில் தனது முகத்தினால் பல சுருள் ரேகைகளுடன் கூடிய சக்கரங்களை வரைந்து பின்னர் அங்கிருந்து மறைந்து விடுவதாக ஐதீகம். சாளக்ராமக் கற்கள் இயற்கையாகவே சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்ற உருவங்களிலும் உருவாகின்றன.

காலங்காலமாக சாளக்ராமக் கற்கள் கோயில்களிலும் இல்லங்களிலும் வைத்து வழிபாடு செய்யப்பட்டு வருகின்றன. இந்த சாளக்ராமக் கற்களை ஆண்கள் மட்டுமே தொட்டு வழிபடலாம். சாளக்ராமத்தை வைத்து வழிபடுவோரின் இல்லங்களில் சகல விதமான ஐஸ்வர்யங்களும் உண்டாவதாக ஐதீகம்.

சாளக்ராமத்தை வாங்கி அதை பட்டாச்சார்யார் ஒருவரிடம் கொடுத்து ஒரு மண்டல காலம் பூஜை செய்து, பின்னர் ஒரு நல்ல நாளில் அவரிடமிருந்து வாங்கி தங்கள் இல்லங்களில் வைத்து பூஜிக்க வேண்டும். சாளக்ராமத்திற்கு தினமும் பாலபிஷேகம் செய்து வழிபட வேண்டும். பாலபிஷேகம் மட்டுமின்றி, சாளக்ராமத்திற்கு வெறும் தண்ணீரால் அபிஷேகம் செய்து, சந்தனம், குங்குமம் இட்டு துளசி இலை மற்றும் தூப தீபத்தால் அர்ச்சித்தாலும் மகாவிஷ்ணு ப்ரீத்தி அடைந்து, வேண்டும் வரங்களைத் தருவார். இதனால் நல்ல பலன்களும் கிடைக்கும்.

சாளக்ராம பூஜை செய்பவர்களை மகாவிஷ்ணுவின் சுதர்ஸன சக்கரம் காத்து நிற்கும் என்பது ஐதீகம். வாழ்நாள் முழுவதும் நித்ய பூஜை செய்பவர் காலமானால் அவர் வைகுண்டத்தில் மஹாலட்சுமி மற்றும் மகாவிஷ்ணுவால் ராஜமரியாதையுடன் நடத்தப்படுவார் என்பதும் ஐதீகம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com