தோஷம், பாபம் தீர்க்கும் சனீஸ்வரர் ஜயந்தி வழிபாடு!

தோஷம், பாபம் தீர்க்கும் சனீஸ்வரர் ஜயந்தி வழிபாடு!

வைகாசி மாதம் அமாவாசை தினம் (நாளை 19.5.2023) சனி பகவான் ஜயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சனி பகவானை வழிபடுவதோடு, ஏழை எளியவர்களுக்கு இயன்ற தான தர்மங்கள் செய்து பலன் பெறலாம். நவக்கிரகங்களில் சனி பகவானை கண்டுதான் பலரும் பயப்படுகின்றனர். சனி பகவானின் பார்வையே பலவித சங்கடங்களைக் கொடுக்கும் என்று ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஏழரை சனி, ஜன்ம சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்ட சனியால் பாதிக்கப்பட்டவர்களும், சனி தோஷத்தினால் அவதிப்படுபவர்களும் இந்த நாளில் சனி பகவானை வழிபடுவதால், தோஷங்கள் நீங்குவதோடு, நோய்கள் குணமாகி ஆரோக்கியம் ஏற்படும்.

ஒரு முறை சிவபெருமானை நோக்கி சனி பகவான் கடும் தவம் புரிந்தார். அவரது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் சனி பகவானுக்கு ஒரு வரம் அளித்தார். அதன்படி மனிதர்களின் தவறுகளுக்கு ஏற்ப தண்டனையையும் அவர்களின் நல்ல செயல்களுக்கேற்ப வெகுமதியும் தந்தருளும் வரத்தை அருளினார். அதேபோன்று, கடவுளருக்கும் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் அவர்களின் செயல்களுக்கேற்ப தண்டனையும் பலனையும் வழங்க ஆசீர்வதித்தார் என்கிறது புராணம்.

ஜோதிட சாஸ்திரத்தில் ஈஸ்வரப் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனீஸ்வரர்தான். இவர் நியாயவான், தர்மவான், நீதிமான் என்று போற்றப்படுகிறார். ஜாதகத்தில் சனி பகவான் நல்ல பலம் பொருந்தி இருந்தால் ஆயுள், ஆரோக்கியம், அஷ்ட ஐஸ்வர்யம், பட்டம் பதவி தானாகத் தேடி வரும். தன்னுடைய தசா புத்தி காலங்களில் பல ஏற்றங்களை வழங்குவதில் சனி பகவானுக்கு நிகர் சனி பகவான்தான். அதேபோல், கோச்சார பலன்கள் தருவதிலும் வலிமை மிக்கவர். ஒருவரின் ஜாதகத்தில் சனி பகவான் உச்சமானால் தொழில்துறையில் சாதனை படைப்பவராகவும் நீதிமானாகவும் திகழ்வர். அதேபோல், சனி பகவான் ஒருவருக்கு ஏழரை சனியாக வரும்போது அவர் செய்த பாவ, தர்மங்களுக்கு ஏற்ற வகையில் சரியான வகையில் தண்டனை கொடுத்து நல்வழிப்படுத்துவார்.

சனி ஜயந்தி அன்று வறுமையில் வாடும் ஏழைகளுக்கு உணவு, உடை, தானம் செய்வதாலும், கோயில்களில் உழவாரப் பணி செய்வதன் மூலமும் ஏழை மற்றும் உடல் ஊனமுற்றோருக்கு உதவி செய்வதும் சனி பகவானின் அருள் பூரணமாகக் கிடைக்கும். பொதுவாக, சனி பகவானின் கோபப் பார்வையிலிருந்து தப்பிக்க காக்கைக்கு தினமும் சாதம் வைக்க வேண்டும். ஏழைகளுக்கு உளுந்து தானியத்தை தானம் செய்யலாம். சனிக்கிழமை அதிகாலை வேளையில் சனி பகவானுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றலாம். எளியவர்களுக்குச் செய்யும் உதவியும் தொண்டும் சனீஸ்வரருக்கு மிகவும் பிடித்தமானதாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com