இன்று நாடு முழுவதும் காஞ்சி மடங்களில் 'சங்கர ஜெயந்தி' கொண்டாட்டம்!

இன்று நாடு முழுவதும் காஞ்சி மடங்களில் 'சங்கர ஜெயந்தி' கொண்டாட்டம்!

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாடு முழுவதும் உள்ள தனது கிளைகளில் அத்வைத தத்துவத்தை நிலைநாட்டிய ஆதி சங்கரரின் பிறந்தநாளை வெகு விமரிசையாக இன்றைய தினம் ( செவ்வாய்க்கிழமை) கொண்டாடுகிறது. ஆதிசங்கரர் நிலைநிறுத்திய சத்தியம், ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் பற்றிய வேதச் செய்தியைப் பரப்பும் வண்ணம் அவர் அவதரித்த திருநாளுக்கான கொண்டாட்டங்கள் சில நாட்களுக்கு முன்பே தொடங்கப்பட்டு விட்டன.

திருப்பதியில் முகாமிட்டுள்ள காஞ்சி காமகோடி பீடத்தின் மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் விழாவிற்கு தலைமை தாங்குகிறார். செவ்வாய் கிழமை நண்பகலில், ஆதி சங்கரர் பிறந்த நேரத்தில், சங்கர விஜயத்தின் பகுதிகள் பாடப்படும். செவ்வாய்கிழமை மாலை நடைபெறும் மாபெரும் விழாவில், காஞ்சி மடத்தின் பாடசாலைகளில் குருகுல முறை மூலம் நான்கு வேதங்களைக் கற்ற 175 மாணவர்களுக்குச் சான்றிதழ்களை விஜயேந்திரர் வழங்குகிறார்.

காஷ்மீரில் உள்ள சங்கராச்சாரியார் மலையிலிருந்து தெற்கே கன்னியாகுமரி வரையிலும், கிழக்கில் கவுகாத்தி மற்றும் காங்டாக் முதல் மேற்கில் குஜராத் வரையிலும் சங்கர ஜெயந்தியானது சங்கர மடத்தின் பல்வேறு கிளைகள், வேத பாடசாலைகள் மற்றும் பிற நிறுவனங்களில் அனுசரிக்கப்படும்.

ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த வேத பண்டிதர்கள் ஸ்ரீநகரில் உள்ள சங்கராச்சார்யா மலைகளில் சடங்குகளைச் செய்து வருகின்றனர், புனேவைச் சேர்ந்தவர்கள் நேபாளத்திலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த வேத அறிஞர்கள் அமிர்தசரஸ் மற்றும் சண்டிகரிலும் கூடி சங்கர ஜெயந்தி விழாக்களில் பங்கேற்று வருகின்றனர். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பண்டிதர்கள் ஆதிசங்கரர் அவதரித்த திருத்தலமான காலடியிலும், புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் சிக்கிமிலும், வட மற்றும் தென்னிந்தியாவைச் சேர்ந்த பண்டிதர்கள் வாரணாசியிலும் (காசி) கூடி சங்கர ஜெயந்தி விழாக்களுக்கான ஏற்பாடுகளைச் செய்து விழாவில் பங்கேற்று வருகின்றனர். .

சில ஆண்டுகளுக்கு முன்பு, விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், “உண்மையில், ஆதி சங்கரரின் போதனைகள் தேசிய ஒருமைப்பாட்டை மட்டுமல்ல, முழு உலகத்தையும் ஒருங்கிணைப்பதை மையமாகக் கொண்டுள்ளன. ஆதி சங்கரர் தேசத்தின் ஒற்றுமைக்காக பாடுபட்டவர். அவர், வெறும் பௌதீக அல்லது புவியியல் கண்ணோட்டத்தில் மட்டும் அதைச் செய்யாமல் ஆன்மீக பரிமாணத்திலும். இந்தியா ஒன்று என்பதை காட்டுவதற்காக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட காஞ்சி காமகோடி பீடம், குரு-சிஷ்ய பரம்பரையில் 70 ஆச்சாரியர்களின் இடைவிடாத பரம்பரையைக் கொண்டுள்ளது என்பதோடு சமூக நலனுக்காக நாடு முழுவதும் - கலாச்சாரம், கல்வி மற்றும் மருத்துவத் துறைகளில் - பல சேவைத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்துடன், சமுதாயத்திற்கு ஆன்மிக பேரின்பத்தை அளிப்பதையும் தன் கடமையாகக் கொண்டுள்ளது.

சங்கரா வேத பாடசாலைகளில் அபரிமிதமான ஒழுக்கம் மற்றும் ஒற்றை எண்ணம் கொண்ட மிகுந்த கவனம் தேவைப்படும் வேதக் கற்றலின் தனித்துவமான பாரம்பரியம் ஊக்குவிக்கப்பட்டு, அரிதான மற்றும் குறைவாக அறியப்பட்ட வேத சாகாக்களைக் கூட புதுப்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பல சங்கரா நிறுவனங்களில், குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகம் வரையிலும் கூட சமகால பாடங்களுடன் இணைந்து கூடுதலாக கலாச்சாரம், பாரம்பரிய மொழிகள் மற்றும் இசை பற்றிய கல்வி மற்றும் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.

சங்கரா ஹெல்த்கேர் நிறுவனங்கள் மற்றும் மருத்துவ முகாம்கள் வடகிழக்கு மாநிலங்கள் உட்பட நாட்டின் கிராமப்புற மற்றும் தொலைதூர மூலைகளில் குறிப்பாக கண் சிகிச்சைத் துறையில் குறிப்பிடத்தக்க வகையில் சேவை மனப்பான்மையுடன் செயலாற்றி வருகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com