சங்கடம் தீர்க்கும் சஷ்டி விரதம்!

சங்கடம் தீர்க்கும் சஷ்டி விரதம்!
Published on

‘வினை தீர்ப்பான் வேலவன்’ என்பது வெறும் வாரத்தை அல்ல. அது, வேலவனின் அருளால் வினை நீங்கப் பெற்ற அவனது அடியார்களின் அனுபவ வாக்காகும். ஒவ்வொரு மாதமும் வரும் சஷ்டி தினமும் சிறப்பானதுதான். அப்படிப்பட்ட சஷ்டி தினத்தில் முருகப்பெருமானின் அருளைப் பெற, ‘சஷ்டி விரதம்’ கடைபிடிக்கும் முறையையும், அதன் பலன்களைப் பற்றியும் காண்போம்.

சஷ்டி தினத்தன்று அதிகாலை எழுந்து, குளித்து முடித்து வீடு முழுவதுமோ அல்லது வீட்டின் பூஜை அறையை மட்டுமோ சுத்தம் செய்ய வேண்டும். பின்பு பூஜையறையில் முருகன் படத்துக்கு முன்பு தீபமேற்றி, தூபம் காட்டி, பால், பழம் நிவேதனம் செய்ய வேண்டும்.

விரதம் அனுஷ்டிப்பவர்கள் காலையிலிருந்து உணவேதும் அருந்தாமல் பூஜையறையில் அமர்ந்து, கந்த சஷ்டி கவசத்தையோ அல்லது வேறு ஏதேனும் முருகனின் மந்திரங்களையோ நாள் முழுவதுமோ அல்லது உங்களால் முடிந்த வரையோ ஜபிக்க வேண்டும். வேலை காரணமாக வெளியில் செல்பவர்கள், ‘ஓம் முருகா’ என்று மனதுக்குள் ஜபித்தவாறு தங்கள் வேலையில் ஈடுபடலாம். சஷ்டி விரத தினத்தன்று மாமிச உணவுகளையோ, போதை வஸ்துக்களையோ விரதமிருப்பவர் பயன்படுத்தக்கூடாது. அதோடு, மனதில் தீய எண்ணங்களோ, கடுமையான உணர்ச்சிகளோ இல்லாதவாறு இவ்விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

ந்த விரதத்தை நல்ல உடல்நிலைக் கொண்டவர்கள் மூன்று வேளை உணவருந்தாமலும், அப்படியில்லையெனில் ஒன்று அல்லது இரண்டு வேளை உணவு உட்கொண்டும் மேற்கொள்ளலாம். வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மூன்று வேளை உணவு உட்கொண்டு இந்த விரதத்தை கடைபிடிக்கலாம்.

‘சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’ என்று கிராமத்தில் கூறுவார்கள். ஆனால், ‘சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பதே சரியான பழமொழியாகும். அதாவது, சஷ்டி தினத்தன்று குழந்தையில்லாத பெண்கள் விரதமிருப்பதால், அவர்களின் உடல் குறைகள் நீங்கி, முருகனின் அருளால் பெண்களின் அகப்பையாகிய கருவறையில் குழந்தை உருவாகும் என்பதற்காகவே அவ்வாறு கூறப்பட்டது.

இந்த விரதத்தை மாதந்தோறும் சஷ்டி தினத்தன்று மேற்கொள்வதால் நீண்ட நாள் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, அந்நோய்கள் படிப்படியாக அவர்களை விட்டு நீங்கும். அதோடு, முருகப்பெருமானின் அருளால் மிகுந்த செல்வமும், மேற்கொள்ளும் காரியங்களில் வெற்றியும் யோகமும் கிட்டும். குழந்தைப்பேறு தரும் விரதங்களில் முதன்மையான விரதமாக கந்த சஷ்டி விரதம் போற்றப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com