பித்ருக்கள்தான் காகத்தின் வடிவில் பூமியில் வலம் வருவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. காகங்களுக்கு முக்காலத்தையும் அறியும் சக்தி இருக்கின்ற காரணத்தால்தான், அவை ஒரு குடும்பத்தில் நடக்கக்கூடிய நல்லது, கெட்டதை முன்கூட்டியே தெரிவிக்கும் விதமாக பல்வேறு சமிக்ஞைகள் மூலமாக உணர்த்துகின்றன என்றும் சாஸ்திரங்கள் சொல்கிறது.
காகத்துக்கு மற்ற பறவைகளிடத்தில் இல்லாத ஒரு தனிக்குணம் உண்டு. மனிதர்களைப் போலவே காகம் தீட்டை அனுஷ்டிக்கும். ஆனால், மற்ற பறவைகள் தீட்டுகளைப் பார்க்காது. ஏதாவது ஒரு காகம் இறந்து விட்டால், அந்தக் காகத்தைச் சுற்றி மற்ற காகங்கள் மொத்தமாக நின்று, ‘கா கா’ என்று குரலெழுப்பி இறந்த காகத்துக்காக துக்கம் அனுஷ்டிக்கும். அதன் பின்பு அந்தக் காகங்கள் எல்லாம் நீர்நிலைக்குச் சென்று தன்னுடைய தலையை நீரில் நனைத்து, மனிதர்களுக்கு இணையாக தீட்டைக் கடைபிடிக்கும் வழக்கம் அவற்றுக்கு உண்டு. அதேபோல், தீட்டான சாப்பாட்டை காகங்கள் சாப்பிடாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற பல சிறப்புகளைக் கொண்ட காகத்துக்கு தினம்தோறும் உலர் திராட்சையை உணவாக வைப்பது சிறந்தது. அதனால் கிடைக்கும் புண்ணியம் ஏழேழு ஜன்மத்துக்கும் தொடரும். மேலும், உங்கள் வாழ்வு முடியும் வரை வாழ்க்கையில் எந்தவிதமான துன்பங்களும் உங்களை நெருங்காது என்பது நிதர்சனம். வாழ்வின் இறுதிக்காலம் வரை மிக சந்தோஷமான வாழ்க்கை கிடைக்கும் என்றும் காக சாஸ்திரம் கூறுகிறது.
சில வீடுகளில் காகம் தொடர்ந்து கரைந்து கொண்டே இருந்தால் வீட்டில் சுப செலவுகள் வரப்போகிறது என்பதைக் குறிப்பதாகும். சிலரை காகம் தன்னுடைய இறக்கை அல்லது கால்களால் தலையில் தட்டிவிட்டுப் போகும் அல்லது அவர்கள் மேல் எச்சில் போடும். இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் உங்களுக்கு வரக்கூடிய ஆபத்தை, கெடுதலை தடுப்பதற்காகத்தான், காகம் எச்சிலை போட்டுள்ளது என்று தெரிந்துகொள்ள வேண்டும்.
உங்கள் பயணத்தின்போது காகம் வலமிருந்து இடம் போவது தன லாபத்தையும், இடமிருந்து வலம் போவது நஷ்டத்தையும் உண்டாக்கும். பயணம் செல்பவரை நோக்கி காகம் கரைந்துகொண்டே பறந்து வந்தால், பயணத்தைத் தவிர்த்துவிட வேண்டும் என்பதைக் குறிப்பதாகும்.
ஒரு காகம் மற்றொரு காகத்துக்கு உணவூட்டும் காட்சி தென்படுமானால் உங்களது பயணம் இனிதாகும். அர்ச்சனை செய்வது போன்று காகம் உங்கள் மேல் பூக்களைத் தூவினால் உங்களது அந்தப் பயணத்தால் லாபம் ஏற்படும் என்பதன் அறிகுறியாகும். உங்களது வாகனம், குடை, காலணி ஆகியவற்றின் மீது எச்சம் இட்டால் பயணத்தின்போது உங்களுக்கு உணவுக்குப் பஞ்சம் இருக்காது.
ஒரு பெண் தனது தலையில் ஏந்தியுள்ள குடத்தின் மீது காகம் அமர்ந்திருக்கும் காட்சியைக் கண்டால், தன லாபம் மற்றும் பெண்களால் நன்மை உண்டு என அறியலாம். ஒருவருடைய பயணத்தின்போது அவரது வாகனம், குடை, காலணி அல்லது அவர் உடல், நிழல் ஆகியவற்றை காகம் தன் சிறகால் தீண்டினால் பயணத்தின்போது அவருக்கு பெரும் ஆபத்து நேரிடலாம்.
காரணமின்றி சுற்றிச் சுற்றிப் பறக்கும் காகம், எதிரிகள் தொல்லையை அவருக்குத் தெரிவிக்கிறது. இரவில் அசாதாரணமாகப் பறக்கும் காகம், அந்தப் பகுதியில் ஏதோ ஆபத்து நேரிடப்போகிறது என்பதை அறிவிக்கிறது.
காகத்துக்கு தினந்தோறும் உணவு அளிப்பதால் பித்ருக்களின் ஆசீர்வாதமும், சனி பகவானின் ஆசீர்வாதமும் பூரணமாகக் கிடைக்கிறது. மேலும், காகத்துக்கு உணவிடுவதால், எமதர்மனின் ஆசீர்வாதம் மற்றும் விநாயக பெருமானின் ஆசீர்வாதத்தைப் பெறலாம் என்பதைக் குறிப்பதாகும்.