ஷீரடிக்கு இழுக்கப்பட்ட சிட்டுக்குருவிகள் - தாஸ்கணு மஹராஜ்

ஷீரடி ஸ்ரீ சாயி – பக்தித் தொடர்
ஷீரடிக்கு இழுக்கப்பட்ட சிட்டுக்குருவிகள் - தாஸ்கணு மஹராஜ்
Published on

அத்தியாயம் -4    

ஸ்ரீ ஷீரடி சாயியின் பக்தர்களில் முக்கியமானவர் கணபத்ராவ் தத்தாத்ரேய சஹஸ்ரபுத்தே என்கிற ஒரு போலீஸ் கான்ஸ்டபிள். 1867இல் கொங்கணத்தைச் சேர்ந்த ரத்னகிரி ஜில்லாவில் இவர் பிறந்தார். இவரை 'கணு' என்று அன்புடன் சாயி அழைத்தார்.  கிராமங்களில் நடைபெறும் தெருக்கூத்து நாடங்களில் நடிப்பது இவருக்கு மிகவும் பிடித்தமானது. மராத்திய மொழியில் லாவணி மெட்டுகளில் பாட்டுகளை இவரே இயற்றிப் பாடுவார்.

1894இல் டெபுடி கலெக்டர் நானா சாஹேப் சாந்தோர்க்கரிடம் இவர் ஷீரடியில் சேவகம் செய்தபோது பாபாவுடன் இவருக்கு அறிமுகம் ஏற்பட்டது.  தாஸ்கணுவும் பாபாவால் ஷீரடிக்கு இழுக்கப்பட்ட ஒரு சிட்டுக்குருவியே. பாபாவின் சேவா காரியங்கள் ஷீரடியில் தாஸ்கணுவிற்கு அநேகம் இருந்தபோது போலீஸ் உத்தியோகம் எப்படி சாத்தியமாகும்?  பாபா முதலில் தெருக்கூத்தில் நடிப்பதை விட்டு விடச் சொன்னார்.  பிறகு போலீஸ் உத்தியோகத்தையும் விடச் சொன்னார்.  தாஸ்கணுவிற்கு போலீஸ் உத்தியோகம் மிகப் பிடித்தமானது.  எனவே,  அதை விட கொஞ்சம் கூட மனமில்லை. உத்தியோகத்தை விட மனமில்லாமல் இருந்தபோதிலும் படிப்படியாக, பாபாவின் தொடர்ந்த வற்புறுத்தலின் பேரில்  சாயி சேவையே தன் வாழ்வின் குறிக்கோள் என்று தன் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக்கொண்டார்.

தாஸ்கணு மஹராஜ்
தாஸ்கணு மஹராஜ்

நல்ல சாரீரம், இனிமையான குரல் வளம், கீர்த்தனைகளை இயற்றும் சக்தி இவற்றைப் பெற்றிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் கணு மக்கள் போற்றும் தாஸ்கணு மஹராஜாக ஆகி விட்டார்.  இவர்தான் தன் ஒப்புயர்வற்ற கீர்த்தனைகள் மூலம் பாபாவின் பெருமையை மராத்திய தேசத்தில் பரப்பினார்.  நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பக்தர்கள் ஷீரடிக்கு சாயிபாபாவின் தரிசனத்துக்கு வருவதற்கு தாஸ்கணுவின் கீர்த்தனங்கள் காரணமாக இருந்தது.

1914லிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்ற, ஷீரடியின் இராமநவமித் திருவிழாவில் ஹரிதாஸாக, சங்கீத உபன்யாஸம் புரிபவராக பாபாவால் நியமிக்கப்படப்பட்டுப் பெருமைப்படுத்தப்பட்டார்.  ஆரம்பக் காலத்தில் தாஸ்கணு மஹராஜ் ஹரிகதைகள் நடத்தச் செல்லும்போது அழகாக உடையணிந்து செல்வார்.  அவர் அணிந்து செல்லும் நேர்த்தியான மேலங்கியும், ஜரிகைத் துப்பட்டாவும் மிகவும் ஆடம்பரமாக இருக்கும். 

பாபா ஒருமுறை அவரையழைத்து,  "ஹரிகதை நடத்த ஏன் மாப்பிள்ளையைப் போல உடுத்துச் செல்ல வேண்டும்? இடுப்புக்கு மேலுள்ள அலங்காரங்களை அகற்றி விடு!  கீர்த்தனை பத்ததியை உருவாக்கிய நாரதரே இந்த மாதிரி அலங்காரங்களோடு காணப்படவில்லையே? இடுப்புக்கு மேல் ஆடையில்லாமல் கைகளில் சிப்ளாவும் தம்பூராவும் இருக்க வேண்டும்!" என்றார்.  தாஸ்கணுவும் அவ்வாறே தன் உடை அலங்காரத்தை மாற்றிக் கொண்டார். தாஸ்கணு துக்காராம், நாமதேவர் என்று எந்த மகானைப் பற்றி ஹரிகதை நிகழ்த்தினாலும் தம்மருகில் பாபாவின் படம் ஒன்றை வைத்துக் கொண்டு,  "இன்று பிரத்யட்சமாக நம்மிடையே இருந்து வரும் பெரிய சத்புருஷர் ஷீரடி மகான் ஸ்ரீ சாயிபாபா. ஷீரடியில் அவரை தரிசித்த மாத்திரத்திலேயே நம் பாவங்கள் யாவும் தீர்ந்துவிடும்" என்று தம்முடைய ஒவ்வொரு பிரவசனத்தின் முடிவிலும் கூறுவார்.  இதனால் எண்ணற்ற மக்கள் தாஸ்கணுவின் உபன்யாஸங்களைக் கேட்டு விட்டு ஷீரடியை நோக்கிச் செல்லலாயினர். ஷீரடி சாயிநாதனைப் பற்றி பெரும்பான்மையான மக்கள் தெரிந்து கொள்ளக் காரணமாக இருந்தவர் தாஸ்கணு மஹராஜ் என்றால் அது மிகையில்லை.  

கங்கையும் யமுனையும் சந்திக்கும் பிரயாகை என்னும் புண்ணிய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வது மிகவும் பாக்கியமானது என்பது ஹிந்துக்களின் நம்பிக்கை.  ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் விசேஷ காலங்களில் புண்ணிய நீராடலுக்காக அங்கே செல்கிறார்கள்.  ஷீரடியில் இருந்தபோது  தாஸ்கணுவும் ஒருமுறை தான் பிரயாகையில் புண்ணிய ஸ்நானம் செய்யச் செல்வதற்காக பாபாவின் அனுமதியைக் கோரினார். பாபா சொன்னார்,  "நீ அவ்வளவு தூரம் செல்ல அவசியம் இல்லை.  அது  இங்கேயே உள்ளது. ஷீரடியே நம்முடைய பிரயாகை. என்னை நம்பு!" தாஸ்கணுவுக்கு ஒன்றும் புரியவில்லை.  பாபாவை வணங்குவதற்காக அவர் பாதங்களில் தலையை வைத்தவுடனேயே பாபாவின் இரண்டு கால்கட்டை விரல்களிலிருந்து கங்கை, யமுனையின் நீர் பெருக்கெடுத்து வந்து தாஸ்கணுவிற்கு பிரயாகை ஸ்நானம் நடந்தது. இந்த அற்புதத்தைப் பார்த்ததும் தாஸ்கணுவிற்கு உணர்ச்சி வசத்தால் தொண்டை அடைத்தது.  சாயியின் பாதங்களை விட்டு விட்டு கங்கைக்கும் கோதாவரிக்கும் செல்ல வேண்டிய அவசியமில்லை என்பதை மனமார உணர்ந்தார். ஷீரடி மக்கள் இக்காட்சியைக் கண்டு பாபாவின் தகைமையை உணர்ந்து புல்லரித்துப் போனார்கள்.

தாஸ்கணு பாபாவின் பெருமைகளை விளக்கும் 'ஸ்ரீ சாயிநாத ஸ்தவன மஞ்சரி' என்கிற பாமாலை ஒன்றை ஷீரடி சாயி பாபா வாழ்ந்த காலத்திலேயே இயற்றி அவர் முன்னிலையில் அரங்கேற்றியிருக்கிறார். இந்தப் பாமாலையைப் படிக்கும் பக்தர்களுக்கு அவர்கள் கோரிக்கையைக் கட்டாயம் பாபா நிறைவேற்ற வேண்டும் என்றும் பாபாவிடம் உறுதிமொழியும் வாங்கியிருக்கிறார். இன்றும் பாபா பக்தர்கள் மிகுந்த பக்தியோடு 'ஸ்ரீ சாயிநாத ஸ்தவன மஞ்சரி' வியாழக்கிழமை தோறும் படிப்பது வழக்கம்.

வாழ்க்கையில் இன்ப துன்பம் இரண்டிலும் உண்மையிலேயே கடவுள் நம் கூடவே இருக்கிறார்!  ஈஷோபநிஷதத்தின் சாராம்சத்தை தாஸ்கணு மஹராஜுக்கு விளக்குமுகமாக பாபா சத்சரித்திரத்தில் இதைப் புலப்படுத்துகிறார்.  தாஸ்கணு மஹராஜ் ஒரு முறை ஈஷோபநிஷதத்திற்கு மராத்தியில் விளக்க உரை எழுத ஆரம்பித்தார். ஆத்மாவின் மதிப்பு மிக்க உணர்வுகளை பதினெட்டே செய்யுட்களில் விளக்கும் உபநிஷதம் இது. ஒரு பக்கம் தீயன செய்யத் தூண்டும் மயக்கங்கள்,  மற்றொரு பக்கம் வாழ்வில் எதற்கும் கலக்கமுறாத முழு மனநலம் வாய்க்கப் பெற்றிருப்பது. இதில் ஒன்று கர்மா, மற்றொன்று ஞானம்.  இந்த நேர் எதிரிடையான இரண்டு விஷயங்களும் ஏதோ ஓர் புள்ளியில் சந்தித்து கூட்டிணைக்கப்படும் வாய்ப்பு வரும்போது, அந்த  உயர்நிலை இணைப்பில்  பேதம் எப்படித் துடைத்தழிக்கப்படுகிறது என்பதைச் சுருக்கமாகக் கூறுவதுதான் ஈஷோபநிஷதம். இதுவே இந்த உபநிஷத்தின் மிக மிக மதிப்பு வாய்ந்த கருத்தாகும். தாஸ்கணுவால் இந்தச் சாராம்சத்தை தெளிவுற விளங்கிக்கொள்ள முடியாததால் பாபாவை சரணடைந்து வழி காட்டும்படி வேண்டினார்.

பாபா அவரிடம், "இதைப் பற்றிய கவலையை விடு.  நீ வீட்டுக்குத் திரும்பிப் போகும் வழியில் விலேபார்லேயில் காகா சாஹேபின் வேலைக்காரி உனது சந்தேகங்களைத் தீர்த்து வைப்பாள்" என்றார்.  கல்வி அறிவற்ற ஒரு வேலைக்காரியால் ஒரு உபநிஷதத்திற்கு விளக்கம் எப்படிக் கிடைக்கும் என்று அங்கிருந்த கற்றறிந்த சிலர் கேலி பேசியபோது பாபாவிடம் மிகுந்த நம்பிக்கையும் மரியாதையும் உள்ள தாஸ்கணு எந்த விதமான தயக்கமுமின்றி நேராக விலேபார்லே சென்று காகா சாஹேபின் வீட்டில் தங்கினார்.

மறுநாள் ஒரு இனிமையான பாடல் ஒலி கேட்டு எழுந்தார்.  காகா சாஹேபின் வேலைக்காரனான நாம்யாவின் சகோதரியான ஒரு ஏழைப்பெண் களிப்பாகப் பாடிக்கொண்டே பாத்திரம் துலக்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தார். அவளது மேனியை கந்தைத் துணி ஒன்றே அலங்கரித்துக்கொண்டிருந்தது. ஆனாலும்   அவளுடைய மனநிலையில் சந்தோஷத்திற்கு எந்தக் குறைவுமில்லை. 

காகா சாஹேப்
காகா சாஹேப்

அடுத்த நாள் ராவ் பஹதூர் ப்ரதான் என்பவர் தாஸ்கணுவிற்கு ஒரு ஜதை வேஷ்டி வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தபோது, அவரை தாஸ்கணு அந்த ஏழைச் சிறுமிக்கும் ஒரு புதிய உடை வாங்கி அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.  ராவ் பஹதூரும் அழகிய பாவாடை தாவணி ஒரு செட் வாங்கி வந்து, அந்த பெண்ணிற்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்.  மறுநாள் புத்தாடையை அணிந்துகொண்ட அவளது களிப்பு கரை காணாது போயிற்று. தினமும் பழையது சாப்பிடும் ஒருவனுக்கு அறுசுவை உணவு சாப்பிடக் கிடைத்தால் எவ்வளவு ஆனந்தமாக இருக்கும்? அதேபோல அவள் பெருமகிழ்ச்சியோடு சுழன்று  சுழன்று நடனமாடினாள். மற்ற சிறுமிகளோடு விளையாட்டுகளில் போட்டியிட்டு அவர்களை எல்லாம் வென்றாள்.  அதற்கடுத்த நாள் புதிய உடையை வீட்டில் வைத்துவிட்டு தன்னுடைய பழைய கந்தலையே அணிந்து வந்தாள்.  ஆனால், முன் தினம் காணப்பெற்ற அதே அளவு ஆனந்தத்துடனேயே காணப்பட்டாள். அவள் ஏழையானதால்  கிழிசல் உடையையே அணிய வேண்டும். தற்போது ஒரு புதிய உடை அவளிடம் இருக்கிறது.  அதைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாள்.  ஆனாலும் பழைய கந்தலையே உடுத்தியும் துளிக் கூட மனச்சோர்வோ துன்பமோ இல்லாதபடி அவள் காணப்பட்டாள்.  இதைக் கண்ணுற்ற தாஸ்கணுவின் இரக்க உணர்ச்சி அவளைப் பற்றிய புகழ்ச்சியாக மாறியது.  இவ்வாறாக வாழ்க்கையில் நமது இன்ப, துன்ப உணர்ச்சிகள் எல்லாம் நமது மனப்பாங்கைப் பொறுத்தே இருக்கின்றன என்பதை அவர் உணர்ந்தார்.  அது மட்டுமல்ல. இக்குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் ஏழைச் சிறுமியின் வறுமை நிலை, அவளது கந்தல் உடை, புதுப் பாவாடை தாவணி, அதை அன்பளிப்பாகக் கொடுத்தவர், அன்பளிப்பைப் பெற்றவள் இவை எல்லாம் கடவுளின் கூறுகளே. அவரே எல்லாவற்றிலும் ஊடுருவி கலந்திருக்கிறார் என்கிற உபநிஷதப் பாடத்தின் நடைமுறை விளக்கத்தையும் தாஸ்கணு பெற்றார். 

பாபாவையே தன் குருவாக வரித்து, அவரையே சரணடைந்து தன் வாழ்க்கையை நடத்திய தாஸ்கணு மஹராஜ், தன்னுடைய 95 ஆவது வயதில் மறைந்தார். இவர் பாபாவின் அபிமானத்திற்குரிய முக்கியமான பக்தர் ஆவார்.

(அருள் பெருகும்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com