
அத்தியாயம் - 3
வீரம்காவ் என்னும் மாவட்டத்தின் டெபுடி கலெக்டராக ராவ்பஹதூர் ஹரி விநாயக் சாதே என்பவர் இருந்தார். 1904இல் பாபாவின் மஹிமையைப் பற்றிக் கேள்விபட்டு அவரை வணங்க ஷீரடிக்குச் சென்ற ராவ் பஹதூர் சாதே, மனதில் தனக்கு ஆண் குழந்தைகள் இல்லாத குறை மிகுதியாக இருந்தது. பாபாவின் அருளால் அவருக்கு இரண்டு பெண் குழந்தைகளுக்குப் பின் ஓர் ஆண் குழந்தை பிறந்ததும் அவருக்குப் பாபாவின் மேல் பக்தி அதிகரித்தது. பாபாவின் அனுமதி பெற்று ஷீரடியில் பக்தர்கள் தங்குவதற்காக ஒரு வாடா (சத்திரம்) கட்டினார். சாதேவின் வாடா என்று அழைக்கப்பட்ட அதுதான் ஷீரடியில் பயணிகள் தங்குவதற்காக முதலில் கட்டப்பட்டச் சத்திரம்.
அவரிடம் சமையல்காரனாக வேலைக்குச் சேர்ந்தான் மேகஷ்யாம் என்னும் மேகா. அவனுடைய அப்பாவித் தனமான, மிக எளிமையான சுபாவம் ராவ் பஹதூரை மிகவும் கவர்ந்தது. அதுமட்டுமல்ல. அவன் ஒரு சிவபக்தன். சதா சர்வகாலமும் 'நமசிவாய' என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்துக்கொண்டிருந்தான். ராவ்பஹதூர் அவனுடைய பக்தியால் மிகவும் மனம் மகிழ்ந்து அவனுக்குச் சந்தியாவந்தனம் செய்யும் முறை, காயத்ரி மந்திரம் போன்றவற்றைக் கற்பித்தார். அவனுடைய அபார சிவபக்தியைக் கண்டு அவர் மேகாவிடம், "ஷீரடியிலுள்ள ஸ்ரீ சாயிபாபா சிவனின் அவதாரம் ஆவார். நீ போய் அவரைத் தரிசனம் செய்தால் உன் ஆன்மிக வாழ்க்கையில் மேலும் மேன்மையடைய முடியும்" என்று கூறி அவனை ஷீரடிக்கு அனுப்புகிறார்.
மேகாவும் தன் எஜமானரின் கட்டளையை ஏற்று ஷீரடிக்குப் புறப்படுகிறான். ஆனால், வழியில் ப்ரோச் ரயில் நிலையத்தில் அவன் சாயிபாபா ஒரு முகமதியர் என்று கேள்விப்படுகிறான். ஒரு முகமதியரை தரிசித்து வணங்க வேண்டுமா என்று அவன் மனம் குழப்ப மடைந்ததால் அவன் தன் எஜமானரிடமே திரும்பி விடுகிறான். தன்னை ஷீரடிக்கு அனுப்ப வேண்டாமென்றும் அவரிடம் மிகவும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறான். ஆனால், ராவ்பஹதூர் அவனை விடுவதாக இல்லை. அவன் நிச்சயம் ஷீரடி போக வேண்டும் என்றும் பாபாவின் தரிசனத்தால் அவனுக்கு மிகுந்த நன்மைகள் விளையும் என்றும் உறுதியாக நம்பி, ஷீரடியிலுள்ள தன் மாமனார் கணேஷ் தாமோதர் என்கிற தாதா கேல்கருக்கு ஒரு கடிதம் எழுதி மேகாவிடம் கொடுத்தனுப்புகிறார். அதில் மேகாவை ஸ்ரீ பாபாவிற்கு அறிமுகப்படுத்தி வைக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறார்.
மேகாவும் ஒருவாறு ஷீரடிக்குச் சென்று மசூதியை அடைந்தான். பாபா அவனை அங்கே நுழைய அனுமதிக்கவில்லை. மிக்க கோபத்துடன், "உள்ளே வராதே! வெளியே செல்! நீ உயர்ந்த ஜாதி பிராமணன். நான் கீழான முகமதியன். இங்கு வருவதால் நீ உன் உசந்த ஸ்தானத்தை இழந்து விடுவாய்!" என்றார்.
இந்த வார்த்தைகளைக் கேட்டதும் மேகா நடுநடுங்கிப் போனான். எப்படி தன் மனதில் உள்ள எண்ணங்கள் பாபாவுக்குத் தெரிந்தது என்பதைப் பற்றி ஆச்சரியமும் அடைந்தான். மிகவும் சோர்ந்த மனதுடன் அங்கிருந்து த்ரயம்பகேஷ்வர் சென்று ஒன்றரை வருட காலம் அங்கேயே தங்கினான். பிறகு திரும்பவும் ஷீரடிக்கே வந்தான். இந்த முறை தாதா கேல்கரின் பரிந்துரையால் பாபா அவனை ஏற்றுக்கொண்டார். படிப்படியாக பாபா சிவனின் அவதாரமே என்னும் எண்ணம் அவனுள் தோன்றி வலுப்பெற ஆரம்பித்தது. பாபாவை சிவனாகவே பாவித்து, தினமும் மசூதிக்குச் சென்று வழிபாடு செய்தான். சிவனுக்கு உகந்த இலை வில்வம். ஆனால், ஷீரடியில் ஒரு வில்வ மரம்கூட இல்லை என்பதால் தினமும் மேகா மைல் கணக்கில் நடந்து சென்று, அங்கு இருக்கும் வில்வ மரத்திலிருந்து இலைகளைக் கொணர்ந்து பாபாவை வழிபடுவான்.
கிராமத்திலுள்ள எல்லா கோயில்களுக்கும் சென்று எல்லா தெய்வங்களையும் வழிபட்ட பின் மசூதிக்கு வந்து பாபாவின் ஆசனத்திற்கு நமஸ்காரம் செய்வான். பிறகு பாபாவை வழிபடுவான். பாபாவின் பாதங்களைப் பிடித்துவிட்டு, அவருக்கு சேவை செய்வான். அவர் பாதங்களைக் கழுவிய தீர்த்தத்தைப் பருகுவான். ஒரு நாள் காண்டோபா கோயிலில் கதவு திறக்கப்படாததால் அவன் அந்தக் கடவுளை வழிபடாமலேயே மசூதிக்கு வந்து பாபாவை வணங்கினான். ஆனால், பாபா அவன் வணக்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. "இப்போது போய்ப் பார்! காண்டோபா கோயில் கதவு திறந்திருக்கிறது" என்று கூறி அவனை அங்கே சென்று வழிபட வைத்தார்.
ஒரு மகர சங்கராந்தி நாளன்று பாபாவை கங்கை நீரால் அபிஷேகம் செய்ய மேகா விரும்பினான். அவர் அதற்கு முதலில் உடன்படவேயில்லை. அவரை மிகவும் வற்புறுத்தி இதற்கு சம்மதம் வாங்கினான். கோமதி ஆற்றிலிருந்து புனித நீர் கொண்டு வருவதற்காக 24 மைல் தூரம் நடந்து போய் வர வேண்டும். அதிகாலையிலேயே கிளம்பி விட்டான் மேகா. அப்போதுதான் மத்தியானம் அபிஷேகம் செய்ய முடியும். அவன் நீர் கொண்டு வந்த பின்னும் பாபா அந்த ஸ்நானம் தனக்கு வேண்டாம் என்று மறுத்தார். ஆனால், மேகாவிற்கு ஒரே பிடிவாதம். அன்று ஒரு நல்ல நாள். அந்த நாளில் அவனுடைய சிவனான பாபாவுக்கு கங்கை நீர் அபிஷேகம் கட்டாயம் செய்ய வேண்டும். அப்போது பாபா அவனிடம் சொன்னார், "மேகா! என் தலையில் மட்டும் நீர் ஊற்று! அதுவே போதும்!" என்று. ஆனால் மேகா உணர்ச்சி வசப்பட்டு அபிஷேக குடத்தை எடுத்து, "ஹர்....ஹர்...கங்கே!" என்று உற்சாகமாகக் கூவிக்கொண்டே பாபாவின் உடல் முழுவதும் நீரை ஊற்றிவிட்டான். ஆனால் என்னே வியப்பு! பாபாவின் தலை மட்டுமே நனைந்திருந்தது. உடம்பில் ஈரமே இல்லை!
மேகா பாபாவை நேரடியாக மசூதிக்குச் சென்று தினமும் வழிபட்டதோடல்லாமல், வாடாவில் நானா சாஹேப் சந்தோர்க்கர் அளித்த பாபாவின் ஒரு பெரிய படத்துக்கும் தவறாமல் பூஜை செய்து வந்தான். ஒரு நாள் அதிகாலையில் அவன் கண் விழிக்க யத்தனித்தபோது தன் அருகே பாபாவின் உருவத்தைக் கண்டான். பாபா அவன் மேல் அட்சதையை வீசி எறிந்துவிட்டு, "மேகா! திரிசூலம் வரை!" என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டார். தான் கண்டது கனவாக இருக்குமோ என்று அவன் நினைத்தபோதே, அட்சதை அந்த இடத்தில் சிதறிக் கிடப்பதைப் பார்த்தான்.
மேகா வாடாவில் பாபாவின் படத்தருகே சுவரில் சிவப்பு திரிசூலம் ஒன்றை வரைந்தான். மறுநாள் அவன் மசூதிக்குச் சென்றபோது அங்கே ஒரு பக்தர் பாபாவுக்கு ஒரு லிங்கத்தைச் சமர்ப்பித்தார். பாபா அதை மேகாவிடம் கொடுத்து, "பார்! இதோ சங்கர் வந்து விட்டார். நீ அவரை எடுத்துக்கொண்டு போய் வழிபடு!" என்றார். தான் திரிசூலம் வரைந்தவுடன் லிங்கம் வந்ததைக் கண்டு மேகாவும் மிக்க ஆச்சரியத்துடன் அதை எடுத்துக் கொண்டு போனான். அதை பாபாவே அவன் வழிபட்டுக்கொண்டிருந்த பெரிய படத்தின் அருகில் ஸ்தாபித்தார். சிவ பூஜையில் ஆர்வமுள்ள சிவபக்தனான மேகாவுக்கு பாபா அந்த லிங்கத்தை அளித்ததும் அவனுடைய கடவுள் நம்பிக்கை உறுதிபட்டது.
மேகா தான் சிவபெருமானாகவே பாவித்த பாபாவுக்கு மசூதியில் தினமும் ஆரத்தி எடுத்து வழிபட்டான். அவன் அந்திம காலம் வரை ஷீர்டியிலேயே தங்கி அங்கேயே அவன் முடிவும் வந்தது. 1912இல் மேகா இறந்த பின்னர் கிராமத்தார் எல்லோரும் சவ ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பாபாவும் அவர்களுடன் கூடச் சென்று, "இவன் என் உண்மையான பக்தன்!" என்று கூறி மலர்களை மேகா உடல் மீது பொழிந்தார். சடங்குகள் செய்யப்பட்டபோது சாதாரணமான மனிதர்களைப் போலவே பாபாவின் கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்தது. மேகாவிற்கும் பாபா முன்னிலையில் முக்தி கிடைத்தது.