சனி பகவான் சிரசில் சிவலிங்கம்!

சனி பகவான் சிரசில் சிவலிங்கம்!

கும்பகோணத்துக்கு அருகில், ’திருக்கோடிக்காவல் கோடீசுவரர் கோயில்’ என்ற தேவாரப் பாடல் பெற்ற தலம் உள்ளது. இங்குள்ள சிவாலயத்தில் அமைந்துள்ள சனி பகவானின் சிரசில் சிவலிங்கம் காட்சி தருகிறது. இந்த சனி பகவான், 'பால சனி' என்று அழைக்கப்படுகிறார். பொதுவாக, சனி பகவானுக்கு காகம்தான் வாகனமாக இருக்கும். ஆனால், இங்குள்ள சனி பகவானுக்கு கருடன் வாகனமாக அமைந்திருக்கிறது. மூலவர் கோடீசுவரர் கருவறை செல்லும் வழியில் இருபுறமும் சித்திரகுப்தரும், எமதர்மனும் உள்ளனர்.

இந்தக் கோயிலில் சனீஸ்வரனை எமதர்மன் பார்ப்பது போன்றும், எமதர்மனை சனி பகவான் பார்ப்பது போன்றும் அமைந்து இருக்கின்றது. இங்கு சுவாமியின் இடப்புறமாக சித்திரகுப்தன் அமைந்துள்ளார். சனி பகவான், எமதர்மராஜன், சித்திரகுப்தன் இவர்கள் மூவரையும் தரிசித்த பின்புதான் மூலவரை தரிசிக்க முடியும். சனி பகவானின் நீதிமன்றமாக திருக்கோடிக்காவல் அமைந்துள்ளது. ஒருவர் பாவ, புண்ணிய வரவு செலவு கணக்குப்படி, பால்ய வயதில் அஷ்டமச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனி, மரணச் சனி என்ற அனைத்து சனி திசைகளுக்கும், இத்தலமே நிவர்த்தி செய்யும் இடமாகும்.

பால்ய வயதில் ஏற்பட்ட பாவ, புண்ணிய வரவு-செலவு கணக்குகளை சரி பார்க்கக் கூடிய இடம் திருக்கோடிக்காவல். சாதாரணமாக, இத்தலத்தில் யாரும் வழிபட்டு விடமுடியாது. யாருக்கு எந்த வயதில் இந்த ஊழ்வினை கர்மா தீர்க்கப்படுகிறதோ, அவர்கள் மட்டுமே இத்தலத்துக்குச் சென்று வழிபட முடியும் என்பது திருமுறை தந்தவர்களின் வாக்கு. சனீஸ்வரனின் மனைவியான ஜேஷ்டாதேவி, மகன் மாந்தி, மகள் மாந்தாவுடன் உள்ள சிலை இத்தலத்தில் உள்ளது. மாந்தாவின் கையில் தாமரை மலரும், மாந்தியின் முகம் ரிஷப முகமாகவும், இம்மூன்றும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டு அற்புதமாய் காட்சியளிக்கிறது.

’என்னுடைய திருமேனிக்கு சமமான பெருமை கொண்ட தலம் இது’ என்று சிவபெருமானால் சிலாகித்து கூறப்பட்ட தலம். இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தமாக அருள்பாலிக்கிறார். திருக்கோடிக்கா என்ற ஒலியை காதால் கேட்டவர்களைக் கூட தண்டிக்கும் உரிமை யமனுக்கு இல்லை என்றும், அந்த மண்ணை மிதித்தவர்களிடம் அவன் நெருங்கவே கூடாது என்றும் சிவபெருமான் கட்டளையிட்டதாக தல வரலாறு.

காசியைப் போல இத்தலத்தில் வாழ்பவர்களுக்கும் யம பயம் கிடையாது. இன்று வரை இவ்வூரில் மயானம் தனியாக இல்லை. இங்கு இறப்பவர்களுக்கு அமைதியான மரணம்தான் நிகழ்கின்றது, துர் மரணங்கள் கிடையாது. இங்கு இறப்பவர்களை இன்றுவரை பக்கத்து ஊரில்தான் அடக்கம் செய்கிறார்கள். ஈசன், எமனின் கை மற்றும் கால்களை விலங்கால் கட்டியுள்ளார்.

இத்தலத்தில் செய்யும் தியானம், ஹோமம், ஜபம் எல்லாம் மும்மடங்காகப் பலிக்கின்ற பெருமையுடைய தலம். மூன்று கோடி மந்திரங்களும் சாப விமோசனம் பெற இத்தலத்துக்கு வந்து சிவனின் முன்னிலையில் சரியாக மந்திரங்களை உச்சரித்து சாப விமோசனம் பெற்ற திருத்தலமாக இது திகழ்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com