திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் அருகேயுள்ள திருப்புடைமருதூரில் அமைந்துள்ளது அருள்மிகு கோமதி அம்மன் சமேத ஸ்ரீ நாறும்பூநாத சுவாமி திருக்கோயில். பாபத்தைப் போக்கி, அருளை வழங்குவதில் காசி நிகராக இத்திருத்தலம் விளங்குகிறது. ஏறக்குறைய ஆயிரத்து இருநூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் இம்மாதம் 18ம் தேதி ஜாதக ரீதியாக கிரக நிலை சரியில்லாதவர்களுக்காக மஹாபிரதோஷ வழிபாடு ஒன்றும் ராஜகோபுர திருப்பணி வேண்டுதல் பூஜையும் நடைபெற உள்ளது.
முன்பொரு யுகத்தில், காசிக்கு நிகரான தலத்தைக் காட்டும்படி சிவபெருமானிடம் வேண்டினர் தேவர்கள். ஈசன் அவர்களிடம் ஒரு பிரம்ம தண்டத்தைக் கொடுத்து அதைக் கீழே போடச் சொன்னார். அது, தாமிரபரணி ஆற்றில் விழுந்தது. “இந்த பிரம்ம தண்டம் எங்கு கரை ஒதுங்குகிறதோ, அத்தலமே காசிக்கு நிகரானது” என்றார் சிவபெருமான். அதன்படி அந்தத் தண்டம், தட்சிண காசியான திருப்புடைமருதூர் ஆற்றங்கரையோரம் ஒதுங்கியது.
பிற்காலத்தில் களக்காடு பகுதியை ஆட்சி செய்த வீரமார்த்தாண்ட மன்னன், மருத மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதிக்கு வேட்டையாட வந்தான். ஒரு மானைக் கண்ட அவன் அதனை வீழ்த்த அம்பு விடுத்தான். அம்பு தைத்த அந்த மான் ஒரு மருத மரத்துக்குள் சென்று மறைந்தது. மானை மீட்க அந்த மரத்தை வெட்டும்படி உத்தரவிட்டான் மன்னன். அதன்படி வீரர்கள் கோடாரியால் மரத்தை வெட்ட, அதிலிருந்து ரத்தம் பீறிட்டது. அங்கு வெட்டுபட்ட நிலையில் சுயம்பு லிங்கம் ஒன்றைக் கண்ட மன்னன், தமது தவறை மன்னிக்கும்படி வேண்டிக்கொண்டு அங்கே ஒரு ஆலயத்தை எழுப்பியதோடு, ஈசனுக்கு ஸ்ரீ நாறும்பூநாதர் என்ற திருநாமத்தையும் சூட்டினான்.
சிவ பக்தரான கருவூர் சித்தர் பல்வேறு சிவாலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்து வருகையில், தாமிரபரணியின் வடக்குக்கரை வழியாக வந்தபோது, எதிர்க்கரையில் இருந்த இந்தக் கோயிலைக் கண்டார். ஆனால், ஆற்றைக் கடக்க முடியாதபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. “பரம்பொருளே! உன்னை தரிசிக்க இயலாதபடி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறதே, எனது பிரார்த்தனை உமக்குக் கேட்கவில்லையா” என்று இருகரம் கூப்பி வேண்டினார். அவரது வேண்டுதலை ஈசன் தனது திருமேனியை இடப்பக்கம் சாய்த்து செவிமடுத்துக் கேட்டாராம். பின்னர் சிவனருளால் வெள்ளம் குறைந்தது. சித்தரும் இத்தல ஈசனை தரிசித்து வழிபட்டார். அத்துடன் இங்கு வரும் பக்தர்களின் வேண்டுதல்களையும் செவிசாய்த்து கேட்டு அவற்றை நிறைவேற்றும்படி வேண்டிக்கொண்டாராம் கருவூர் சித்தர். ஸ்ரீ நாறும்பூநாதரும் அவரது வேண்டுகோளை ஏற்று, ‘அவ்வாறே ஆகட்டும்’ என அருள்புரிந்ததாக தல வரலாறு.
உலகில் எங்கும் காணாவண்ணமாக உச்சி முதல் பாதம் வரை ருத்ராட்சத் திருமேனியராக ஈசன் இத்தலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தாரகா சக்தி பீடமாக விளங்கும் இத்தலத்தில் அருளும் அம்பிகை அருளே வடிவானவள். பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவதில் அம்பிகைக்குத் தனிச் சிறப்பு உண்டு. இங்குள்ள நடராஜர் சிலை ‘ஓம்’ வடிவ திருவாசியுடன் அமைந்துள்ளது. இங்குள்ள யோக தட்சிணாமூர்த்தி இரு கால்களையும் மடக்கி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.
இக்கோயில் கோபுரம் ஐந்து நிலைகளையும், பதினொரு கலசங்களையும் கொண்டுள்ளது. கோபுரத்தின் தளங்களில் மியூரல்-டெம்பரா வகை சுவரோவியங்கள் காணப்படுகின்றன. இந்த ஓவியங்களில் திருவிளையாடற்புராணம், கந்தபுராணம், பெரிய புராணம் தொடர்பான ஓவியங்களுடன், சீன நாட்டு வணிகர்களின் உருவங்களும் இடம் பெற்றுள்ளன.
‘ஸ்ரீ கஜானன் மஹராஜ் கைங்கர்ய சபா-திருப்புடைமருதூர்’ சார்பில் இந்தக் கோயிலில் பிப்ரவரி 18 அன்று இவ்வருடத்தின் முதல் மஹாபிரதோஷ வழிபாட்டோடு ராஜகோபுர திருப்பணி நடைபெறுவதற்கு வேண்டுதல் பூஜையும் நடத்த உள்ளனர். இந்த வழிபாட்டின்போது முற்றிலும் புதுமையான ஒரு முயற்சியாக திருக்கோயில் தல வரலாறு காட்சியமைப்பாக உருவாக்கப்பட்டு, கோயில் முழுவதும் 10,008 தீபங்கள் ஏற்றப்படவிருக்கிறது.
மாலை 4.30 மணிக்குத் துவங்கும் மஹாபிரதோஷ பூஜை, அபிஷேகத்தின் சிறப்பம்சமாக 3024 செவ்விளநீர் மற்றும் ஆயிரக்கணக்கான செண்பகம், மனோரஞ்சிதம், தாமரை மலர்களைக் கொண்டு செய்யப்படும் அலங்காரமும் இடம்பெறும். பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளை ஒரு தாளில் எழுதி வந்து, சுவாமி சன்னிதியிலிருந்து கீழே இறங்கும் வழியில் வைக்கப்பட்டுள்ள பிரார்த்தனை பெட்டியில் செலுத்தவும். ஜாதக ரீதியாக கெடுபலன் உள்ளவர்கள் அவ்வாறு செய்து இதில் பங்கேற்றால் சகல தோஷங்களும் நிவர்த்தியாவதுடன், விதிவசத்தால் ஏற்படுகின்ற துன்பங்கள் அனைத்தும் நீங்கி அவர்கள் வாழ்க்கையின் நிலையே மாறிப்போகும் என்பது ஐதீகம்.
வீரவநல்லூர் மற்றும் முக்கூடல் பேருந்து நிலையங்களிலிருந்து திருக்கோயிலுக்கு பக்தர்கள் வந்து செல்வதற்கு மாலை 4 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை இடைவிடாது பேருந்துகள் இலவசமாக இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிரக நிலை சரியில்லாதவர்கள் இந்த வருட முதல் மகாபிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு ஈசனின் அருளைப் பெறலாமே!
அமைவிடம்: திருநெல்வேலி - பாபநாசம் சாலையில் 28 கி.மீ. தொலைவில் வீரவநல்லூர். இங்கிருந்து பிரியும் சாலையில் 7 கி.மீ. தொலைவில் திருப்புடைமருதூர் அமைந்துள்ளது.
தரிசன நேரம்: காலை 6 முதல் 10.30 மணி வரை. மாலை 5 முதல் இரவு 7.30 மணி வரை.