குபேரன் கும்பிட்ட சிவன் கோயில்!

குபேரன் கும்பிட்ட சிவன் கோயில்!

நெல்லை மாவட்டம், தாமிரபரணி ஆற்றின் இரு கரைகளிலும் அருமையான ஆலயங்கள் அமைந்துள்ளன. இவற்றில் ஒன்றுதான் அம்பாசமுத்திரம் வட்டத்திலுள்ள ஹரிகேசநல்லூரில் அமைந்துள்ள ஸ்ரீ பெரியநாயகி சமேத அரியநாதர் திருக்கோயில். சுமார் 1,600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஏனெனில், குபேரனே இத்தலம் வந்து சிவனை வழிபாடு செய்திருக்கிறார். இங்கே சனீஸ்வரனின் மனைவி ஜேஷ்டா தேவிக்கும் தனி சன்னிதி அமைந்துள்ளது. அரிகேசரி என்ற பாண்டிய மன்னன் இந்த ஆலயத்தைக் கட்டியதால் மன்னன் பெயரால் இவ்வூர் ஹரிகேசநல்லூர் என்றழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ஆலயத்தின் முகப்பில் கோபுரம் எதுவும் இல்லை. உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம், நந்தி. அடுத்து மண்டபம் கடந்து உள்ளே நுழைந்தால் ஆகமக் கோயிலுக்குரிய சூரியன், சந்திரன் ஜுரதேவர், சப்த மாதர்கள், தட்சிணாமூர்த்தி, பைரவர் போன்ற அனைத்து பரிவார தேவதைகளுக்கும் சன்னிதிகள் உள்ளன. இங்குள்ள தட்சிணாமூர்த்தி மிகச் சிறப்பு வாய்ந்தவர். இடக்காலை வலது காலின் மீது மடித்து வைத்தபடி தோற்றமளிக்கிறார். பின்னிரு கரங்களில் மானும் மழுவும் ஏந்தியிருக்கிறார். இந்த ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

இவை அனைத்தையும் விட முக்கியமானது, ராவணன் தனது சகோதரன் குபேரனிடம் இருந்த செல்வங்களையெல்லாம் பிடுங்கிக் கொண்டு, அவனது புஷ்பக விமானத்தையும் அபகரித்துக் கொண்டு துரத்தியடித்தபோது அவர் ஹரிகேசநல்லூரில்தான் வந்து விழுந்தாராம். அவர் ஸ்தாபித்த லிங்கம்தான் ஹரிகேசநல்லூர் சிவனாவார். குபேரன் இந்த சிவனை பூஜித்து, தான் இழந்த செல்வங்களையெல்லாம் திரும்பப் பெற்ற தலம் என்பதால், இந்த ஹரிகேசநல்லூர் சிவன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகக் திகழ்கிறது. கடன் தொல்லை இருப்பவர்கள், செல்வ வளம் வேண்டுபவர்கள் இங்கு வந்து குபேரன் பூஜித்த சிவனை வழிபாடு செய்தால் செல்வச் செழிப்பு உண்டாகி, வாழ்வில் எல்லா வளங்களும் உண்டாகும் என்று நம்பப்படுகிறது.

வெளிச் சுற்றுப்பிராகாரத்தில் சனீஸ்வரனின் மனைவி ஜேஷ்டா தேவி  தனது மைந்தன் மாந்தியை மடியில் வைத்துக்கொண்டு சன்னிதி கொண்டிருக்கிறாள்.  சாதாரணமாக ஜேஷ்டா தேவியின் சன்னிதியை சிவாலயங்களில் காண முடியாது.  ஆனால், இக்கோயிலில் பெரிய திருவுருவத்துடன் சன்னிதி கொண்டிருக்கிறாள். ஜேஷ்டா தேவி இங்கே சன்னிதி கொண்டு அருள்பாலிப்பதால்  இது சனீஸ்வர பரிகாரத் தலமாகவும் வழிபடப்படுகிறது.

n s mohanakrishnan

அதேபோல, வடக்குச் சுற்றில் இறைவன் சன்னிதிக்கு வடகிழக்கே செல்வத்தின் அதிபதியான குபேரனின் மிகப்பெரிய கற்சிலை காணப்படுகிறது. வலக்கையில் கதையை ஏந்தி, இடக்கையை மடித்த காலின் மீது வைத்துக் கொண்டு சுமார் 4 அடி உயரத்தில் மிகப்பெரிய உருவமாக குபேரன் காட்சியளிக்கிறார். இங்கே குபேரன் எழுந்தருளியிருக்கும் காரணத்தால் ஒரு காலத்தில் இந்த ஊர் அழகாபுரி என்னும் பெயரால் கூட அழைக்கப்பட்டதாம். இந்த குபேரனுக்கு தீபாவளி மற்றும் அட்சய திருதியை நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இந்த நாட்களில் வெளியூரிலிருந்தெல்லாம் ஏராளமான பக்தர்கள் வந்து இங்கே வழிபாடு செய்கின்றனர். திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி - அம்பாசமுத்திரம் சாலையில் வீரவநல்லூருக்கும் முக்கூடலுக்கும் இடையே ஹரிகேசநல்லூர் அமைந்துள்ளது.

மிகத்தொன்மையான இந்தக் கோயிலின் புனருத்தாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு அடுத்த மாதம், அதாவது ஜூலை 5ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.  ஜூலை 2, 3 மற்றும் 4ம் தேதிகளில் யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளன.

மிகச் சிறப்பு வாய்ந்த, தொன்மையான குபேரன் வந்து வழிபட்டு இழந்த செல்வங்களை மீட்டெடுத்த இந்தக் கோயிலுக்கு ஒருமுறை சென்று குபேரன் வழிபட்ட சிவனையும், குபேரனையும் வழிபட்டு வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com