கணக்கெழுதிக் குறிப்பெடுக்கும் இன்னம்பர் சிவன்!

கணக்கெழுதிக் குறிப்பெடுக்கும் இன்னம்பர் சிவன்!
Published on

மிழ் இலக்கணத்தை வடித்துக் கொடுத்தவர் அகத்தியர். அகத்தியருக்கு தமிழ் இலக்கணத்தை எடுத்துரைத்தவர் திருஇன்னம்பரில் எழுந்தருளி இருக்கும் ஈசன். இங்குள்ள ஈசனின் திருநாமம் ஐராவதேஸ்வரர் ஆகும். அகத்தியருக்கு தமிழ் இலக்கணத்தைப் போதித்ததால், ‘எழுத்தறிநாதர்’ என்றும் அழைக்கப்படுகிறார். வடமொழியில் அட்சரபுரீஸ்வரர். ‘அட்சரம்’ என்றால் ‘எழுத்து’ என்று பெயர்.

ஒரு முறை துர்வாச முனிவரின் சாபத்துக்கு ஆளானது இந்திரனின் வெள்ளை யானை ஐராவதம். சாபம் பெற்ற அது, இத்தல ஈசனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றது. அதனால் இத்தல ஈசனுக்கு ஐராவதேஸ்வரர் என்று பெயர். ‘இனன்’ என்றால் சூரியன் என்று பொருள். சூரியன் இத்தல ஈசனை வழிபட்ட ஊர் என்பதால் இனன்நம்பூர் என்று பெயர் பெற்றது. காலப்போக்கில் இதுவே மருவி ‘இன்னம்பூர்’ என்றாகி, இன்னம்பர் என்றானது. இத்தலத்தில் சூரியன் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி 31ந் தேதி, புராட்டாசி 12ந் தேதி மற்றும் பங்குனி மாதம் 13,14,15 ஆகிய தேதிகளில் மூலவர் எழுத்தறிநாதரின் மீது தன்னுடைய கதிர்களை வீசி வழிபடுகிறான். இந்த நாட்கள் ஆலயத்தில் திருவிழா போல் கொண்டாடப்படுகிறது.

சுதன்மன் எனும் சிவபக்தன் இன்னம்பர் எழுத்தறிநாதரை அனுதினமும் வழிபட்டு வந்தான். அவன் இன்னம்பர் ஆலயத்தின் நிர்வாகக் கணக்கு வழக்குகளையும் கவனிக்கும் பொறுப்பில் இருந்தான். ஒருமுறை அந்தப் பகுதியை ஆண்டு வந்த சோழ மன்னன் இன்னம்பர் கோயிலின் வரவு செலவுக் கணக்குகளை சமர்ப்பிக்குமாறு அவனுக்குக் கட்டளையிட்டான். சுதன்மனும் ஆலயக் கணக்கை எடுத்துக்கொண்டு போய் மன்னனிடம் சமர்ப்பித்தான். ஆனால் அந்தக் கணக்கு வழக்குகளில் மன்னனுக்கு ஐயம் ஏற்பட்டது. ‘‘நாளை பகல் பொழுதுக்குள் என்னிடம் சரியாக இன்னம்பர் ஆலயக் கணக்குகளைச் சமர்ப்பித்தாக வேண்டும்’’ என்று உத்தரவிட்டான்.

எந்த இடத்தில் கணக்கில் தவறு செய்தோம் என்று தெரியாத நிலையில் மனக்குழப்பம் அடைந்தான் சுதன்மன். பின்னர் எழுத்தறிநாதரின் கருவறை முன்பாக அமர்ந்து சிவபெருமானை நினைத்து துதித்தான். மறுநாள் சுதன்மன் மன்னனைச் சந்திக்கச் சென்றான். அவனைப் பார்த்த மன்னன், ‘‘இன்று காலையிலேயே இன்னம்பர் ஆலயக் கணக்கு வழக்குகளை என்னிடம் மிகச் சிறப்பாக ஐயமுற விளக்கி விட்டீர்களே... பிறகென்ன?’’ என்று கேட்டான்.

சுதன்மனுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘‘அப்படியா? ஒன்றுமில்லை’’ என்றபடியே எழுத்தறிநாதரின் ஆலயத்துக்கு வந்தவன், அங்கேயே ஓரிடத்தில் படுத்துக் கண்ணயர்ந்தான். அப்போது அவன் கனவில் தோன்றிய ஈசன், ‘‘அன்பனே! நான்தான் உன் உருவத்தில் மன்னனிடம் சென்று ஆலயக் கணக்கு வழக்குகளை ஒப்படைத்தேன்’’ என்று கூறி மறைந்தார். எழுத்தறிநாதரின் அருட்கருணையை நினைத்து தன் கடைசிக் காலம் வரை இன்னம்பர் கோயிலிலேயே வழிபட்டு, சிவலோகப் பதவி அடைந்தான் சுதன்மன்.

லயத்தில் மூலவர் எழுத்தறிநாதர் மிகப்பெரிய வடிவில் கம்பீரமாக, கிழக்கு நோக்கி லிங்க வடிவில் சுயம்பு மூர்த்தியாக ருத்ராட்சப் பந்தலின் கீழ் அருள்புரிகிறார். கருவறை கோஷ்டத்தில் பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, துர்கை ஆகியோர் உள்ளனர். முருகப்பெருமான், தட்சிண கயிலாய லிங்கம், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, மகாலட்சுமி, சண்டேஸ்வரர், பைரவர் ஆகியோர் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்கிறார்கள். இத்தல ஈசனை வழிபட்டு 27 நெய் தீபங்கள் ஏற்றினால் கல்வியில் சிறந்து விளங்கலாம் என்கிறார்கள்.

கருவறை விமானம் கஜபிருஷ்ட வடிவில் விளங்குகிறது. விமானத்தின் கிழக்குப் புறம் ஈசன், அம்பாள், சுதன்மன் மற்றும் சோழ மன்னனின் சுதைச் சிற்பங்களும் உள்ளன. இக்கோயில் பைரவரை தேய்பிறை அஷ்டமி நாட்களில் பால், பன்னீர், விபூதி, சந்தனம் மற்றும் பஞ்சாமிர்தம் போன்றவற்றால் அபிஷேகம் செய்வதுடன் நெய்தீபம், மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் கடன், உடற்பிணிகள் அகலும். இங்குள்ள நடராஜர் சிலை கடலில் இருந்து கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இவரை திருவாதிரை நாட்களில் அபிஷேகம் செய்து வழிபட்டால் சகல செல்வங்களும், வளங்களும் இல்லத்தில் நிறையும்.

கருவறை வாயில் அருகே நான்கு திருக்கரங்களுடன் தெற்கு நோக்கியபடி சவுந்தரநாயகி என்னும் நித்திய கல்யாணி அம்மன் திருமணக் கோலத்தில் எழுந்தருளியிருக்கிறாள். இந்த அன்னையை செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் எலுமிச்சைப் பழ தீபம் ஏற்றி, குங்குமார்ச்சனை செய்து வழிபட்டால் வெகு விரைவில் தடைகள், தோ‌ஷங்கள் விலகி திருமணம் நடைபெறும் என்கிறார்கள். கிழக்கு நோக்கி ஐந்து நிலை ராஜகோபுரம் உள்ளது. ராஜகோபுரத்தின் வலதுபுறம் தெற்கு நோக்கியபடி நான்கு திருக்கரங்களுடன் கையில் ஜப மாலையை ஏந்தி தவக்கோலத்தில் மற்றொரு அம்பாள், ‘சுகந்த குந்தளாம்பிகை’ அருள்பாலிக்கிறாள். அழகிய மணம் பொருந்திய கூந்தலைக் கொண்டவள் என்பது இந்த அன்னையின் பெயருக்கான பொருள். ‘பூங்கொம்பு நாயகி’ என்றும் அன்னை அழைக்கப்படுகிறாள். மகா மண்டபத்தில் நவக்கிரகங்கள் உள்ளன. கஜலட்சுமி, பிட்சாடனர், காட்சி கொடுத்த நாதர், மகாலிங்கேஸ்வரர், காசி விஸ்வநாதர்-விசாலாட்சி சன்னிதிகளும் உள்ளன. செண்பக மரம் இத்தலத்தின் தல விருட்சமாக உள்ளது.

த்தல ஈசன் சுதன்மனுக்கும், அகத்தியருக்கும் முறையே கணக்கு, இலக்கணங்களை முறைப்படுத்தி அருளியதால் இக்கோயிலில் அனுதினமும் வித்யாப்பியாசம் செய்விக்கிறார்கள். குழந்தைகளை அழைத்து வந்து அம்மையப்பனை வழிபட்டு பின்னர் பூக்காம்பினால் அல்லது நெல்லினால் சிவாச்சாரியார் குழந்தைகளின் நாக்கில், ‘ஓம் அட்சரபுரீஸ்வராய நமஹ, ஓம் அகத்தியாய நமஹ, ஓம் சரஸ்வதியே நமஹ' என எழுதுகிறார். இப்படிச் செய்வதால் குழந்தைகள் படிப்பில் இருக்கும் மந்தநிலை மாறி நன்றாகப் படிப்பார்கள்.

திக்குவாய் மற்றும் சரியாகப் பேச்சு வராத குழந்தைகளையும் இத்தலம் அழைத்து வந்து தேன் அபிஷேகம் செய்து வழிபட்டு பின்னர் அத்தேனால் குழந்தைகளின் நாவில் சிவாச்சாரியார் பஞ்சாட்சரம் உச்சரித்து தேனினை சிறிது தொட்டு வைக்கிறார். அதன் பின்னர் இத்தல ஈசன் அருளால் பேச்சு வந்தவுடன் ஆலயத்தின் கதவில் 'ஒலிக்கும் மணி' வாங்கி வந்து பிரார்த்தனையாகக் கட்டிச்செல்கிறார்கள். நினைவுத்திறன், கணக்குப் பாடம், தமிழ் இலக்கணம் மற்றும் அனைத்துவிதக் கல்வியிலும் சிறந்து விளங்க குழந்தைகள் முதல் இளைஞர்கள், பெரியவர்கள் வரை இத்தலத்துக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

பொதுவாக, ‘நாம் செய்யும் பாவ புண்ணியங்களைச் சித்திரகுப்தன் கணக்கு எழுதிக் கொள்கிறான்’ என்று சொல்வார்கள். தன்னை வணங்காமல் பொழுது போக்கிக்கொண்டு வீணாகக் காலம் தள்ளுபவர்களைப் பற்றி இத்தல ஈசன் கணக்கெழுதி குறிப்பெடுக்கிறார் என்பதைக் குறிப்பிடும் விதமாக,

‘தொழுது தூமலர் தூவித் துதித்து நின்று

அழுது காமுற்று அரற்றுகின்றாரையும்

பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும்

எழுதும் கீழ்கணக்கு இன்னம்பர் ஈசனே'

என்கிறார் திருநாவுக்கரசர்.

‘நாம் செய்வதைப் பார்க்கவோ, தட்டிக் கேட்கவோ யாரும் இல்லை’ என்ற அகம்பாவத்தில் அக்ரமங்கள் செய்பவர்களுக்கு இப்பதிகம் ஒரு எச்சரிக்கையாக இருக்கும்.

அமைவிடம்: கும்பகோணம்-சுவாமிமலை பாதையில் புளியஞ்சேரிக்கு வடக்கே 3 கிலோ மீட்டர் தொலைவில் இன்னம்பர் திருத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து வடமேற்கே 6 கிலோ மீட்டர் தொலைவு சென்றாலும் இன்னம்பர் திருத்தலத்தை அடையலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com