குட்டிக்கதை - இறைவன் தந்த பரிசு!

ஓவியம்; சேகர்
ஓவியம்; சேகர்

புனிதத் தலங்களுள் மணிமுடி போன்றது காசியம்பதி. இத்தலத்தின் இறைவன் ஸ்ரீவிஸ்வநாதர்,  பன்னிரெண்டு ஜோதிர் லிங்கங்களுள் ஒன்றாக விளங்கித் திருவருள் புரிகின்றார். ஈசனின் லீலைகள் பலவுண்டு.
ஒரு சமயம், அனுதினமும் விஸ்வநாதரைப் பூஜித்து வழிபடும் அர்ச்சகரின் கனவில் பகவான் விஸ்வநாதர் தோன்றி, "பண்டிதர்களையும், கோயில் பணியாளர்களையும், அறம்புரியும் நல்லவர்களையும் கூட்டி நாளை ஒரு சபையை ஏற்பாடு செய்" என்று கட்டளையிட்டார்.

இறைவன் அறிவித்த செய்தியை மறுநாளே அர்ச்சகர் காசி மாநகரில் வாழும் அனைவருக்கும் தெரியப்படுத்தினார். காசியில் வாழும் பண்டிதர்கள், சன்னியாசிகள், புண்ணிய ஆத்மாக்கள், தானம் தர்மம் செய்பவர்கள் அனைவருமே புனித கங்கை நதியில் நீராடி, கோயில் மண்டபம் வந்து சேர்ந்தனர். எல்லோரும் கூடிய பின்னர், அர்ச்சகர் தாம் கண்ட கனவைத் தெரிவித்தார். ஈசனுக்கு தீபாராதனை முடிந்து மணியடிக்கும் சப்தமும் நின்றது.

ஆலயத்தின் கருவறையில் திடீரென்று பிரகாசத்தோடு மிகுந்த வெளிச்சம் தோன்றுவதைக் கண்டு அனைவரும் மெய்சிலிர்த்தனர். விஸ்வநாத மூர்த்தியின் லிங்கத் திருமேனியின் பக்கத்தில், 'பளீர்' என மின்னும் நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட ஒரு தங்க ஓலைச்சுவடி தோன்றியது. அதிலிருந்து தோன்றிய அதீத பிரகாசம் கோயில் முழுவதும் வெளிச்சத்தைப் பரப்பியது. அர்ச்சகர் பயபக்தியுடன் அந்தத் தங்க ஓலைச் சுவடியை எடுத்தார். அதில் வைர எழுத்துக்களால், 'அனைவரிலும் சிறந்த கொடையாளிக்கும் புண்ணியம் செய்தவனுக்கும் நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட இந்தத் தங்க ஓலை, விஸ்வநாதர் எனும் என்னால் தரப்பட்ட பரிசு' என்று எழுதப்பட்டிருந்தது.

இதையும் படியுங்கள்:
சர்வமும் AI மயம். வரமா? சாபமா?
ஓவியம்; சேகர்

அர்ச்சகர் பேராசையற்ற உண்மையான பக்தர். அவர் அந்த ஓலையை அனைவருக்கும் காண்பித்து, "அன்பர்களே, ஒவ்வொரு திங்கட்கிழமையும் இங்கு மக்கள் சபை கூடும். அதில் யார் தங்களை மிகவும் கொடையாளியாகவும், புண்ணியம் செய்தவராகவும் நிரூபிக்கிறார்களோ, அவருக்கு இந்தத் 'தங்க ஓலை' பரிசாகக் கொடுக்கப்படும்" என்று அறிவித்தார்.

நாடெங்கும் இந்தச் செய்தி பரவியது. எங்கெங்கெல்லாமோ இருந்து பண்டிதர்களும், சன்னியாசிகளும், பக்தர்களும், கொடையாளிகளும் காசி மாநகர் நோக்கி வந்தவண்ணமிருந்தனர். சகலமும் கற்றறிந்த ஓர் அந்தணர், இடைவிடாமல் பல மாதங்கள் சாந்த்ராயண நோன்பு செய்தவர்,  ஓலையைப் பெற்றுக்கொள்ள வந்தார். அர்ச்சகர் தங்க ஓலையை அவர் கையில் கொடுத்ததும் அது உடனே மண்ணாகிவிட்டது. அதன் ஒளியும் மறைந்துவிட்டது. வெட்கத்துடன் அவர் அந்தத் தங்க ஓலையைத் திருப்பிக் கொடுத்துவிட்டுச் சென்றார். ஓலை அர்ச்சகர் கைக்குச் சென்றதும் மறுபடியும் தங்கமாகி, நவரத்தினங்கள் ஒளிரத் தொடங்கின.

ஒரு நாள் பெரும் பணக்காரர் ஒருவர் வந்தார். அவர் பல கல்விக்கூடங்கள், சேவை இல்லங்கள், கோயில்கள் என்று தமது சொத்து முழுவதையும் தர்மத்துக்கென்றே செலவிட்டவர். அவரும் தங்க ஓலையை பெறும் ஆசையில் வந்தார். அவர் கைபட்டதும் அந்தத் தங்க ஓலை மண்ணாக மாறிவிட்டது. அர்ச்சகர் சொன்னார், "நீங்கள் பட்டம், புகழ், கீர்த்தி பெறும் ஆசையால் கொடையளித்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. பெருமைக்கு, பெயருக்கு ஆசைப்பட்டு செய்யும் கொடை உண்மையான கொடை அல்ல" என்றார்.

இப்படி அநேகர் வந்தும் யாருக்கும் தங்க ஓலைச் சுவடி கிடைக்கவில்லை. தற்பெருமையோடு தங்க ஓலையைப் பெற வந்த அனைவர் கையிலும் அது மண்ணாக மாறியது. இப்படிப் பல மாதங்கள் சென்றன. தங்க ஓலையை எப்படியாவது பெற வேண்டும் என்ற ஆசையில் பலர் பல நற்காரியங்கள் செய்யத் தொடங்கினர். ஆலயத்துக்கு அருகிலேயே தான, தர்மங்கள் செய்ய ஆரம்பித்தனர். ஏழை, எளியவர்களுக்கு அன்னமிட்டு உபசரித்தனர். பலர் நிறைய செலவு செய்து ஏழைப் பெண்களுக்குத் திருமணம் செய்து வைத்தனர். ஆனால், தங்க ஓலை அவர்கள் யாருக்குமே கிடைக்கவில்லை.

ஒரு நாள் வயோதிக ஏழைக்குடியானவர் ஒருவர் வெளியூரிலிருந்து விஸ்வநாதரை தரிசிக்க வந்தார். அவரிடத்தில் துணியில் முடியப்பட்ட சிறிது சத்து மாவும் ஒரு கிழிந்த கம்பளமும் மட்டுமே இருந்தன. அவர் விஸ்வநாதர் கோயிலுக்கருகில் பலர் பலவிதமான தானங்களைக் கொடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சர்யப்பட்டார்.

சுற்றிலும் வேடிக்கை பார்த்துக்கொண்டே சென்ற அந்த ஏழைக் குடியானவர், சற்றுத் தொலைவில் ஒரு தொழு நோயாளி கடுமையாக இருமிக்கொண்டிருப்பதைக் கண்டார். அந்தத் தொழு நோயாளியின் உடல் முழுதும் புண்களாயிருந்தன. அவரால் எழுந்து உட்காரக்கூட முடியவில்லை. தானம் செய்து கொண்டிருந்த யாருமே அந்த நோயாளியை திரும்பிக்கூட பார்க்கவில்லை. ஆனால், அந்த நோயாளியோ மிகுந்த பசியோடிருந்தார். அவரைக் கண்ட அந்த ஏழைக் குடியானவருக்கு அவர் மேல் இரக்கம் உண்டானது. தான் சாப்பிட வைத்திருந்த சத்துமாவை அந்த நோயாளிக்குக் கொடுத்தார். அவரிடமிருந்த பாத்திரத்தைக் கொண்டுபோய் குடிநீர் கொண்டு வந்து கொடுத்தார். மேலும், தனது கம்பளியையும் அவர் மேல் போர்த்திவிட்டார். பிறகு,  அங்கிருந்து விஸ்வநாதரை தரிசிக்க கோயிலுக்குச் சென்றுவிட்டார்.

அன்று திங்கட்கிழமையாதலால், காசி விஸ்வநாதர் ஆலயம் வருகின்ற பக்தர்கள் அனைவரது கையிலும் பாரபட்சமின்றி அந்தத் தங்க ஓலையைக் கொடுக்கும்படி ஏற்பாடு செய்திருந்தார் அர்ச்சகர். அந்தக் ஏழைக் குடியானவர் காசி விஸ்நாதப் பெருமானை மனங்குளிர தரிசித்துவிட்டு வெளியே வந்ததும்,  அர்ச்சகர் அவரது கையிலும் அந்தத் தங்க ஓலைச் சுவடியைக் கொடுத்தார். அவரது கையில் வந்த தங்க ஓலைச்சுவடி அடுத்தகணமே பல மடங்கு ஒளி வீசிப் பிரகாசிக்கத் தொடங்கியது. இதைக் கண்ட பக்தர்கள் அனைவரும் அந்த ஏழை வயோதிகரைப் பாராட்டி மகிழ்ந்தார்கள்.

இதையும் படியுங்கள்:
நீங்கள் என்றென்றைக்கும் பிறரால் மதிக்கப்பட வேண்டுமா?
ஓவியம்; சேகர்

ஒன்றும் புரியாமல் 'திருதிரு'வென விழித்துக் கொண்டிருந்த ஏழைக் குடியானவரைப் பார்த்து அர்ச்சகர் சொன்னார், "ஐயா, பெரியவரே, இந்தத் தங்க ஓலைச்சுவடியை விஸ்வநாதப் பெருமான் உனக்குப் பரிசாகக் கொடுத்துள்ளார். உண்மையில் யார் பேராசை இல்லாதவரோ, யார் ஏழை, எளியவர், நோயாளிகளிடத்தில் ஈவு இரக்கம் காட்டுகிறாரோ, பிரதிபலன் கருதாமல் யார் கொடை தருகிறாரோ, மற்றவர் துயரத்தில் யார் பங்கு கொண்டு அவர்களுக்கு உதவுகிறாரோ அவரே அனைவரிலும் சிறந்த புண்ணியவான், சிறந்த கொடையாளி. அவரே மனிதருள் மாணிக்கம் என்று இறைவன் உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இப் பரிசைக் கொண்டு உங்களது இறைப்பணியை மேலும் தொடர்ந்து செய்து, நலமும் வளமும் பெற்று நல் வாழ்வு வாழ்வீராக" என்றார்.

- முத்து இரத்தினம், சத்தியமங்கலம்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com