பசுமையான மரங்களும், பூஞ்சோலைகளும், நெல் வயல்களும் சூழ்ந்த அற்புதமான பதி திருக்கோட்டாறு. தற்போது இத்தலம் திருக்கொட்டாரம் என்று ஆகியுள்ளது. குரவ மலரும், கோங்கு மலரும் பூத்துக் குலுங்கும் இந்தத் தலம் சோழ தேசத்தின் காவிரித் தென்கரையின் 53வது தலமாகப் போற்றப்படுகின்றது.
‘இரங்காய் உனது இன்னருளே’ என சம்பந்தரால் பாடப்பெற்ற இத்தல பெருமானை துர்வாச முனிவரது சாபத்தினால் நிலைகுலைந்த ஐராவதம் என்னும் வெள்ளை யானை வழிபட்டுள்ளது. இந்த வெள்ளை யானை தனது கோட்டினால் (கொம்பு) மேகத்தினை இடித்து மழையை ஆறு போல் பெய்வித்து அந்நதி தீர்த்தத்தால் இப்பதி ஈசனை வழிபட்டுள்ளது. கோட்டினால் ஆறு ஏற்படுத்தி, இங்கு பரமனை பூஜித்ததால் இத்தலம் கோட்டாறு என்று ஆனது. இதை சம்பந்தரின் பாடல் மெய்ப்பிக்கின்றது.
அகத்திய முனிவரும், சுப மகரிஷியும் இங்கு சிவனாரை பூஜித்துள்ளனர். சுபர் ஒரு நாள் இறைவனை தரிசிக்க தாமதமாக வந்ததனால் கோயில் நடை சாற்றப்பட்டுவிட்டது. உடனே சுபர் தேனி வடிவம் கொண்டு உள்ளே சென்று இறைவனை வழிபட்டார். இதன் பொருட்டு ஆண்டுக்கு ஒரு முறை இங்கு இறைவனுக்கு தேன் அபிஷேகம் சிறப்புற செய்யப்படுகின்றது. இப்போதும் மூலவர் சன்னிதிக்கு முன்பு தேன் கூடு உள்ளது கண்டு மெய்சிலிர்க்கலாம். இன்றும் சுப மகரிஷி தேனியாய் இங்கு சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம். திருஞானசம்பந்தர் இரண்டு பதிகங்களைப் பாடி அருளியுள்ளார். சுந்தரரும் தனது ஊர் தொகையில் இப்பதியை நினைவு கூர்ந்துள்ளார். தேவர்களும், சித்தர்களும் இங்கு வந்து இறைவனை வழிபடுவதாக கூறும் சம்பந்தர், பரமனைப் பாடி தொழும் அடியார்களின் வருத்தமும், வீண்பழியும் நீங்குவதோடு சிறந்த ஞானமும் அடைவார்கள் என்று பாடியுள்ளார். மழை வளம் மிகுந்த இந்த கோட்டாற்றில் திகழும் நாதர் அமரருக்கு அமரனாய் போற்றப்படுகின்றார் என்றும், இப்பெருமானை வழிபட சிவப்பேறு கிட்டும் என்றும் சிறப்பிக்கின்றார்.
அமைதியான சூழலில் அமைந்துள்ள இக்கோயில், அழகிய மூன்று நிலை கிழக்கு முக ராஜகோபரத்துடன் திகழ்கிறது. உள்ளே கொடி மரமும், துவார கணபதி சிலையும் உள்ளன. கொடிமரத்தின் வலப்புறம் மேற்கு முகம் கொண்ட அகத்திய லிங்கம். கிழக்குத் திருமாளிகைப் பத்தியில் சூரியன், சந்திரன், பைரவர் மற்றும் நவகிரகங்கள் உள்ளன. வடகிழக்கில் யாகசாலை அமைந்துள்ளது. தென்கிழக்கில் மடைப்பள்ளி உள்ளது. கொடிமரத்தின் நேரே மண்டப வாயிலின் இடப்புறம் பாலகணபதி வீற்றுள்ளார். வலப்புறம் அம்பாள் சன்னிதி. நின்ற கோலத்தில் அருளும் அம்பிகை வண்டார்குழலி என்று அழைக்கப்படுகின்றாள். இவ்வன்னையை சம்பந்தர் கோளவார்க்குழலாள் என்று வர்ணிக்கின்றார்.
அம்பிகையை வணங்கிய பின் முதல் வாயிலினுள் நுழைந்து, மகா மண்டபத்தை அடைந்தால் அங்கே உத்ஸவர் அறையில் நடராஜர் - சிவகாமித் தாயார் வீற்றருள்கின்றனர். இங்கே செப்புத் திருமேனியாக உள்ள முருகன் வில்லேந்தி அருள்பாலிக்கின்றார். உடன் சோமாஸ்கந்தரும் தரிசனம் தருகின்றார். அடுத்து ஸ்நபன மண்டபம். அதன் இருபுறமும் கணபதி மற்றும் நாகராஜர். தென்புறம் சாளரமொன்று காணப்படுகின்றது. கருவறையில் சுயம்பு நாதனாய் நமக்கு அருள்பாலிக்கின்றார் ஸ்ரீ ஐராவதேஸ்வரர்.
ஆலய வலம் வருகையில் மடைப்பள்ளி ஒட்டி தல விருட்சமான பாரிஜாத மரம் மணம் வீசுகிறது. தென்மேற்கு மூலையில் கன்னிமூல கணபதி தனியே சன்னிதி கொண்டுள்ளார். மேற்கு திருமாளிகைப் பத்தியில் கிழக்குப் பார்த்தவாறு சுந்தரர் – பரவை நாச்சியார், கயிலாசநாதர், நால்வர், சுப மகரிஷி, நாகராஜர், சிவலிங்கம் என வரிசையாக வீடு கொண்டுள்ளனர்.
மேற்கில் கந்தன் சன்னிதியும், வடமேற்கில் கஜலக்ஷ்மி சன்னிதியும் உள்ளன. பிராகாரத்தில் சண்டிகேஸ்வரர் சன்னிதியும், அதனருகே கிணறும் உள்ளன. கருவறை இரண்டு அடுக்குகளைக் கொண்டு அழகிய விமானத்தோடு மனதை ஈர்க்கின்றது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தில் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. தீர்த்தமாக வாஞ்சியாறு (கோட்டாறு) மற்றும் சூரிய தீர்த்தம் உள்ளன. கி.பி.1253ம் ஆண்டு குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தில் அனைத்து சிவாலய விசேஷங்களும் சிறப்புடன் நடத்தப்படுகின்றன. ஸ்வாமிக்கும், அம்பாளுக்கும் தேனபிஷேகம் செய்து, பாரிஜாத மலர்களால் அர்ச்சித்து வழிபடுபவர்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நினைத்தபடி நிறைவேறும்.
அமைவிடம்: காரைக்கால் மாவட்டம், அம்பகரத்தூரில் இருந்து இரண்டு கி.மீ. தொலைவில் கோயில் அமைந்துள்ளது.
தரிசன நேரம்: காலை 7 முதல் 11.30 மணி வரை. மாலை 5.30 முதல் 8 மணி வரை.