பாவங்களாக இருந்தாலும் சரி, புண்ணியமாக இருந்தாலும் சரி மூன்று நிலைகளில் வகைப் படுத்திவிடலாம். ஒன்று, இதுவரை செய்து வந்துள்ள பாவங்கள். இரண்டாவது, தற்சமயம் செய்து வரும் பாவம். மூன்றாவது, இனிமேல் செய்ய இருக்கும் பாவம். இது புண்ணியத்துக்கும் பொருந்தும். நாம் செய்துள்ள மற்றும் செய்துவரும் பாவங்களினால் நமக்கு மனம் அல்லது உடல் சார்ந்த சிரமங்கள் ஏற்படும். நாம் செய்துள்ள பாவங்களினால் விளைகின்ற வினைகளின் பொருட்டு சில பிராயச்சித்தங்களும் சில பரிகாரங்களும் மனம் மற்றும் உடல் சார்ந்த உபாதைகளைச் சற்று தளர்த்துமே தவிர, முற்றிலுமாக விடுதலை பெற்றுத் தந்துவிடாது. கர்ணனுக்கு எப்படி கவச குண்டலமோ அதுபோல மனிதர்களுக்கு பிராயச்சித்தங்களும், பரிகாரங்களும்.
‘தர்ம சாஸ்திரம் பிராயச் சித்த காண்டம்’ என்பது சமஸ்கிருதத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப் பட்டுள்ள நூல். அதில் பாவங்களின் தண்டனைகளிலிருந்து விடுபட நாம் மேற்கொள்ள வேண்டிய பிராயச்சித்தங்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்தெல்லாம் மிக அதில் விளக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொய், கொலை, களவு, கள்ளுண்ணுதல், குரு நிந்தை போன்றவை பஞ்சமா பாதகங்கள், இவற்றை பெரும் பாவங்கள் எனப் பதிவு செய்துள்ளன தர்ம சாஸ்திர நூல்கள். மேற்கண்ட பஞ்சமா பாதகங்களுக்கு பிராயச் சித்தங்களும் இல்லை; பரிகாரங்களும் இல்லை.
நவக்கிரக சாந்தி, துர்கா சாந்தி செய்து கொள்வது நல்லது. மேற்கண்ட இரண்டு வகை சாந்திகளும் நாம் செய்துள்ள பாவங்களின் (நமக்கான) விளைவுகளிலிருந்து நம்மைச் சற்றே தற்காத்துக் கொடுக்கும். அவ்வளவுதான். இருந்தாலும் நமக்கான தண்டனையை நாம் அனுபவித்துதான் தீரவேண்டும். இன்னின்ன பாவங்களுக்கு இன்னின்ன பிராயச் சித்தங்கள், இன்னின்ன பரிகாரங்கள் என்று அட்டவணை ஒன்று வந்து விட்டால், நாம் ஒவ்வொருவரும் பட்டியல் தயாரித்து பாவங்கள் செய்யத் தொடங்கி விடுவோம் தானே? என்ன மக்களே?