மன்னர்களோடு தொடர்புடைய பல திருத்தலங்கள் தமிழகமெங்கும் நிறைந்துள்ளன. அப்படிப்பட்ட ஒரு தலமே நெரும்பூர், அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத திருவாலீஸ்வரர் திருக்கோயில். முதலாம் இராஜராஜன் ஆட்சிக்காலத்தில் (கி.பி.994) எடுப்பிக்கப்பட்டு, விளக்கெரிக்கவும் வழிபாடுகள் நடத்தவும் தானங்கள் வழங்கப்பட்டுள்ளதாக இத்தலத்துக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. முற்காலத்தில் இவ்வூர், ’நெருமூர்’ என்று வழங்கப்பட்டதாகவும் கல்வெட்டுகளில், ’நெரூமூரான மதுராந்தக நல்லூர்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இத்தலத்து இறைவனின் பெயர் முற்காலத்தில், ’திருவானீஸ்வரமுடையார்’ என்று வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. வேட்டக்குடியான புலியத்தேவன் என்பவர் இக்கோயிலுக்காக நெரும்பூரில் நிலம் அளித்துள்ளதாகவும் கல்வெட்டுகளின் வாயிலாக அறிய முடிகிறது. இத்தலத்தில் உள்ள சிற்பங்கள் கலைநயமிக்கதாக அமைந்து மனதை ஈர்க்கின்றன.
செங்கற்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமே நெரும்பூர். ஈசனுக்கான இத்தலம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. அம்பாள் சன்னிதியை நோக்கியவாறு அமைந்துள்ள மூன்று நிலை இராஜகோபுரம் சிதிலமடைந்து சற்றே சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. கோயிலுக்கு வெளிப்புறத்தில் பலி பீடத்தைத் தொடர்ந்து ஒரு மண்டபத்தில் நந்திதேவர் அமைந்துள்ளார். கொடிமரம் காணப்படவில்லை. கோஷ்டத்தில் விநாயகர், மகாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்கை முதலான சிற்பங்கள் அழகுற கலைநயத்துடன் காட்சி தருகின்றன.
கிழக்கு திசை வழியாக கோயிலுக்குள் நுழைந்ததும் கருவறையின் முன்னே ஒருபுறம் விநாயகரும் மற்றொரு புறத்தில் மயிலுடன் கூடிய முருகப்பெருமானும் அமைந்துள்ளனர். கருவறைக்குள் இறைவன் திருவாலீஸ்வரர் என்ற திருநாமத்துடன் லிங்கத் திருமேனியராகக் காட்சி தருகிறார். தெற்கு நோக்கிய ஒரு சன்னிதியில் அம்பாள் திரிபுரசுந்தரி நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.
திருவாலீஸ்வரர் மற்றும் திரிபுரசுந்தரி அம்மன் சன்னிதிகளுக்கு வெளியே உள்ள மண்டபத்தில் சூரியன், வலம்புரி விநாயகர், நாகர் சிலைகள், கால பைரவர், ஐந்து தலை நாகத்தின் மீது நடனமாடும் நர்த்தனக் கண்ணன், லிங்கத்தின் மீது குடை பிடிக்கும் ஐந்து தலை நாகம், தன்வந்திரி முதலான சிற்பங்கள் கலைநயத்துடன் காட்சி தருகின்றன.
சூரிய பகவான் தென் திசையிலிருந்து வட திசை நோக்கி பயணம் செய்யும் காலமே உத்தராயணம் எனப்படும். தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய ஆறு மாதங்களும் உத்தராயண காலமாகும். மூலவர் மீது உத்தராயண காலத்தில் சூரியன் தன் கதிர்களை வீசி பூஜிப்பதும், பௌர்ணமி தினத்தன்று சந்திரன் தன் குளிர் கதிர்களை வீசி ஈசனை பூஜிப்பதும் இத்தலத்துக்கே உரிய சிறப்பம்சமாகும்.
நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்துக்கு வருகை தந்து திருவாலீஸ்வரருக்கும் திரிபுரசுந்தரி அம்பாளுக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டால் நாக தோஷம் விலகி விரைவில் திருமணம் கைகூடும் என்கிறார்கள்.
பிரதோஷம், ஐப்பசி அன்னாபிஷேகம், பங்குனி உத்திரத் திருக்கல்யாணம் முதலான விழாக்கள் இத்தலத்தில் நடைபெறுகின்றன.
அமைவிடம்: செங்கற்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்திலிருந்து 16 கி.மீ., கல்பாக்கத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில் நெரும்பூர் அமைந்துள்ளது. செங்கற்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் வழியாக T11, 18C, 212G, KRC போன்ற பேருந்துகள் நெரும்பூர் வழியாகச் செல்கின்றன. கல்பாக்கம் மற்றும் திருக்கழுக்குன்றத்திலிருந்து ஷேர் ஆட்டோ வசதியும் உண்டு.
தரிசன நேரம்: காலை 8 முதல் 9 மணி வரை ஒரு கால பூஜையே இத்தலத்தில் நடைபெறுகிறது. மாதப் பிரதோஷ தினத்தன்று மாலை வேளைகளில் ஈசனை மனம் குளிர தரிசிக்கலாம்.