மாமருந்தாகும் சிவனடியார் காலடி மண்!

மாமருந்தாகும் சிவனடியார் காலடி மண்!
Published on

காவியுடையணிந்து, ஜடாமுடியோடு, தேகம் முழுதும் மணக்கும் திருநீறு பூசி, 'தாயே பிட்ஷாந்தகி' என்று வரும் சிவனடியார்கள் இன்றும் உண்டு. சிலர் காவியுடையணிந்து, பிழைப்புக்காக பிச்சையையே தொழிலாகக் கொண்டிருப்பார்கள். அவர்களல்ல சிவன் அடியார்கள். அவர்கள் வேடதாரிகள். இருக்கும் இடம் தெரியாமல், 'சிவாய நம ஓம்' என்று எந்நேரமும் சிவனை வழிபட்டு, சிவாலயங்கள் தோறும் இறைவனை தரிசித்து, வாழ்பவர்கள்தான் உண்மையான சிவனடியார்கள். சில நேரம் அவர்களின் வாக்கு மெய்வாக்கு ஆகி விடும். அவர்களது பெருமையை பட்டினத்தார் ஒரு பாடலில் தெரிவித்துள்ளார்.

புகார் வணிகக் குலத்தில், திருவெண்காடு என்ற ஊரில் பிறந்து, ‘திருவெண்காடர்’ என்ற திருநாமத்தோடு வாழ்ந்தவர் பட்டினத்தார். பெருஞ்செல்வந்தரான அவருக்கு, இறையனார் சிவபெருமானே குழந்தையாகப் பிறந்தார். 'மருதவாணன்' எனும் பெயர் சூட்டப்பட்டு வளர்ந்த மகன், பின்னாளில், 'காதறுந்த ஊசியும் வாராது கடைவழிக்கே' என்று திருவெண்காடருக்கு உணர்த்த, அவர் துறவறம் பூண்டார். அவரை, ‘பட்டினத்தார்’ என்று அழைத்தனர். அவர் பல பாடல்களைப் பாடியுள்ளார். அதிலும் அவர் சுடுகாட்டில் பாடிய பாடல்களில் தத்துவம் மிகப் பொதிந்திருக்கும்.

அவரது ஒரு பாடல் இதோ:

'ஓடுவீழ்ந்து சீப்பாயும் ஒன்பது வாய்ப்புண்ணுக்கு

இடுமருந்தை யான் அறிந்து கொண்டேன்

கடு அருந்தும் தேவாதி தேவன்

திருஒற்றியூர் தெருவில் போவாரடியில் பொடி'

விளக்கம்: நிணமும், சதையும், எலும்பினாலும் ஆன இந்த உடலும், அதனுள்ளே உறையும் ஆன்மாவும், நலம் பெறத் தேவையான மருந்தை நான் அறிந்து கொண்டேன்.  கடலில் அமிர்தத்தைக் கடைந்தபோது அதிலிருந்து தெரித்த ஆலகால விஷம், அமுதத்தில் கலந்து விடக்கூடாது என்பதற்காக தானே அருந்தி, அனைவரையும் காப்பாற்றி திருநீலகண்டரான, தேவாதி தேவர்களுக்கெல்லாம் தேவனான, அந்தத் தியாகராசன் உறைகின்றானே திருவொற்றியூர் அந்தத் தல வீதியில், 'சிவ சிவ' என்று இறைவனின் திருநாமத்தை ஜபித்துக் கொண்டு செல்கின்ற 'சிவனடியார்களின்' காலடி பட்ட மண்ணே சிறந்த மாமருந்தாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com