சொக்கப்பனை – மாவளி – தேவ் தீபாவளி எல்லாம் என்ன?

திருக்கார்த்திகை தீபத்திருவிழா
திருக்கார்த்திகை தீபத்திருவிழா

தொன்மையான திருவிழாக்களில் ஒன்றாகிய திருக்கார்த்திகை தீபத்திருவிழா, ஒளி வடிவில் இறைவனைக் கொண்டாடும் விழா மட்டுமல்ல; சுவாரசியமான நிகழ்வுகள், கருத்துகள் ஆகியவைகளை உள்ளடக்கிய விழாவாகும். திருக்கார்த்திகை தினம் சொக்கப்பனை கொளுத்துவது வழக்கம்.

பனையும், சொக்கப்பனையும்

சொக்கத் தங்கமென அழைக்கப்படும் பனை மரம், பூலோக தேவமரம் மற்றும் கற்பக விருட்சமெனக் கூறப்படுகிறது. இது ஸ்தல விருட்சமாக பல கோயில்களில் உள்ளது. பனைஓலை கூரை வேயவும், பாளை பதநீர் தயாரிக்கவும்,  அடிக் காம்புகள் நாரெடுக்கவும் உபயோகிக்கப்படுகின்றன. பல்வேறு சிறப்புகளைக் கொண்ட பனை, சொக்கப்பனைக்குப் பயன்படுத்தப்படுகிறது.

எவ்வாறு?

சொக்கனாகிய சிவபெருமானை ஜோதி வடிவமாக பார்த்தல் என்பதுதான் சொக்கப்பனை கொளுத்துவதின் நோக்கமாகும்.

திருக்கார்த்திகையன்று பனைஓலை, மரக்கட்டைகள் ஆகியவைகளை உபயோகித்து கூம்பு வடிவமைத்து, இடையிடையே சிறு வெடிகளை வைத்துக் கொளுத்துகையில்,  ‘டப்-டப்’ என்கிற சத்தத்துடன் எரியும்.

சொக்கப்பனைகொளுத்துவது
சொக்கப்பனைகொளுத்துவது

இது குறித்த பெரிய புராணப் பாடல்:

‘காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்
நீள் நாகம் அணிந்தார்க்கு நிகழ் குறியாம் சிவலிங்கம்
நாணாது நேடியமால் நான் முகனும் காண நடுச்
சேணாரும் தழல் பிழம்பாய்த் தோன்றிது தெளிந்தாராய்’

இப்பாடலின் பொருள்:

திருமாலும், பிரம்மதேவனும் அடிமுடி தேடிக் கண்டடைய முடியாத வண்ணம் நெருப்புத் தழலாக காட்சியளித்த பரமேஸ்வரனை அக்னிமயலிங்கமாக வழிபடுவது ‘சொக்கப்பனை’ தாத்பரியமாகும்.

திருக்கார்த்திகை மாவளி

‘மாவளி’ விளையாட்டு, திருக்கார்த்திகை அன்று பல இடங்களில் நடைபெறுகிறது. இது எப்படி விளையாடப்படுகிறது?

பனம்பூ மலரும் காம்புகளை காயவைத்து, காற்றுப் புகாதவண்ணம் சிறு குழியொன்றில் போட்டு தீயிட்டு கரியாக்கிப் பொடிசெய்து சலித்தபின், சுருள்போல சுருட்டப்பட்டு துணியில் கட்டப்படும்.

மூன்று பனை ஓலை மட்டைகளின் நடுவே இந்த கரித்தூள் சுருள்களை வைத்து பந்துபோல் கட்டி, நீண்ட கயிறொன்றில் உறிபோல பிணைத்தபின்பு துணிப்பந்தில் நெருப்பு வைத்து கனல் மூட்டப்படும்.

இக்கயிற்றை கைகளால் பிடித்து வட்டமாகவும், பக்கவாட்டிலும் மெதுவாகச் சுற்றுகையில், தீப்பொறிகள் எரி நட்சத்திரம்போல் சிதறும். அச்சமயம் ‘மாவளியோ மாவளி’யென அனைவரும் ஒன்றுபோல் சத்தமிடுவது அழகான காட்சியாக இருக்கும்.

பாதாள லோகத்தில் வசித்தவரும் ‘மாவலி’ அரசன் மண்ணுலகம் வந்து தீபஒளியைக் காண்பதாக ஐதீகம். ‘மாவலி’ நாளடைவில் மருவி மாவளி (பெரிய ஒளி) ஆனதாக கூறப்படுகிறது.

பெருமாள் கார்த்திகை
பெருமாள் கார்த்திகை

பெருமாள் கார்த்திகை

எம்பெருமான் ஸ்ரீமகாவிஷ்ணு, காஞ்சிபுரத்திலுள்ள தீபப் பிரகாசர் ஆலயத்தில் ஜோதிவடிவமாக எழுந்தருளியிருக்கிறார்.

பிரம்மா யாகம் செய்கையில், சரஸ்வதி தேவி இடையூறு ஏற்படுத்தும் நேரம், பெருமாள் ஜோதி வடிவில் விளங்கியதால், விளக்கொளி பெருமாளென அழைக்கப்படுகிறார். இவருக்கு வைணவர்கள் திருக்கார்த்திகையன்று தீபமேற்றிக் கொண்டாடுவதால், ‘பெருமாள் கார்த்திகை’ எனப்படுகிறது.

திருக்கார்த்திகை தீப ஸ்லோகம்

‘கீடா: பதங்கா மசகாச்ச வ்ருஷா

ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா:

த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா:

பவந்தி நித்யம் ச்வப்சா விப்ரா’

இதன் பொருள்:

‘நீரிலும், நிலத்திலும் வாழ்ந்து உதவுகிற புழு, பறவை, கொசு முதலிய ஜீவன்கள் கார்த்திகை தீபத்தைக் கண்டபின் மறுபிறவி எடுப்பதில்லை. நாயை கொன்று தின்னும் புலையரும்கூட கார்த்திகை தீபம் காண, உயர்ந்தவர்கள் ஆகின்றனர்’ என்பதாகும்.

சிவ பக்தர்கள் கார்த்திகையன்று தீபமேற்றி சிவபெருமானையும்,

முருக பக்தர்கள் பரணி தீபமேற்றி முருகப் பெருமானையும்,

வைணவ பக்தர்கள் விஷ்ணு தீபமேற்றி மகாவிஷ்ணுவையும் வழிபடுவது வழக்கமாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
நம்மை நாமே விரும்புவது எப்படி?
திருக்கார்த்திகை தீபத்திருவிழா

த்ரிபுர பூர்ணிமா

தீபாவளி சென்று 15ஆம் நாள் வரும் பெளர்ணமியன்று வாரணாசியில் கொண்டாடப்படும் கோலாகல உற்சவம் த்ரிபுர பூர்ணிமா தேவ் தீபாவளியாகும். திருக்கார்த்திகையன்று கொண்டாடப்படும் பண்டிகை.

த்ரிபுராசுரனை, சிவபெருமான் வதம் செய்த இந்நாளில், இறைவன் மேலுலகிலிருந்து இறங்கிவந்து கங்கையில் ஸ்நானம் செய்வதாக ஐதீகம். ரவிதாஸ் காட் முதல் ராஜ்காட் வரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விளக்குகளை கங்கை நதிக்கரைகளில் வைத்து, கங்கா மாதாவிற்கு ஆரத்தி எடுக்கப்படும்.

த்ரிபுர பூர்ணிமா
த்ரிபுர பூர்ணிமா

பெளர்ணமி நிலாவை கண்டபிறகே பலர் மண்சட்டிகளில் எண்ணெய் ஊற்றி தீபமேற்றி வழிபடுகின்றனர். வீடுகள்தோறும் ஒளிவிடும் விளக்குகள், வண்ணக் கோலங்கள் அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கும்.

மேலும் வேத மந்திரங்கள் ஓதுவது; அகண்ட ராமாயணம் படிப்பது; கடவுள் சிலைகளை எடுத்துக்கொண்டு ஊர்வலம் வருவது; அலங்கரிக்கப்பட்ட அழகான பெரிய விளக்குகளை பூசாரிகள் கைகளில் ஏந்தி கங்கா ஆரத்தி எடுப்பது என எல்லாமே பார்க்க, ரசிக்க அற்புதமாக இருக்கும். கங்கைக் கரையோரங்களில் ஜொலிக்கும் தீபங்களைக் காண படகு சவாரியும் உண்டு.

அமாவாசையில் தீபாவளி; பெளர்ணமியில் திருக்கார்த்திகையும் தேவ் தீபாவளியும் திபமேற்றி இறைவனை வணங்கி வழிபடுவோமாக!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com