கிருஷ்ண ஜெயந்தி என்பது ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த நாளாகும். இந்த நன்நாளில் பக்தர்கள் விரதமிருந்தும், கிருஷ்ணர் சிலையை அலகரித்தும் குழந்தை கிருஷ்ணரை தங்கள் வீட்டிற்குள் வரவேற்றுக் கொண்டாடி மகிழ்வார்கள்.
மகாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரம்தான் ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் ஆகும். ஆவணி மாதம் அஷ்டமி திதி ரோகிணி நட்சத்திரத்தில் வசுதேவருக்கும்- தேவகிக்கும் எட்டாவது மகனாக பிறக்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர். அதனால்தான் ஆவணி மாதத்தில் வரும் அஷ்டமியை கோகுலாஷ்டமியாக கொண்டாடுகிறோம்.
கிருஷ்ணரின் ரோகிணி நட்சத்திரம் வரும் நாளை தான் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடுகிறோம். இந்த வருடம் கிருஷ்ண ஜெயந்தி அகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி திங்கட்கிழமை வருகிறது.
கிருஷ்ண வழிப்பாடு நம் தமிழர்களிடம் சங்க காலத்திலிருந்தே இருந்து வருகிறது என்பதற்கு அகநானூற்று நூலிலேயே உதாரணங்கள் இருக்கிறது. தொல்காப்பியம் கண்ணனை முல்லை நிலக்கடவுளாக போற்றுகிறது. கண்ணனை குழந்தையாக பாவித்து பெரியாழ்வார் எழுதிய திருமொழியே தமிழில் 'பிள்ளைத்தமிழ்' உருவாவதற்கு காரணமாக இருந்தது. அளவிற்கு அதிகமான காதலை புகுத்தி தமிழை உணர்வுப்பூர்வமாக மாற்றியது ஆண்டாளின் பாசுரங்கள் தான்.
கிருஷ்ணரின் மீதான அன்பும், பாசமும் எப்போதோ வாழ்ந்த ஆழ்வார்களிடம் மட்டுமில்லாமல் இந்த நூற்றாண்டில் வாழ்ந்த பாரதியார், கண்ணதாசன் ஆகியோரின் எழுத்துக்கள் மூலம் வெளிப்பட்டது. கிருஷ்ணர் யசோதைக்கும், பெரியாழ்வார்க்கும் குழந்தையாக இருந்தார். கோபியர்களுக்கும், மீராவிற்கும் காதலனாக இருந்தார். விவேகானாந்தர், அரவிந்தர் போன்ற ஞானிகளுக்கு கீதை மூலமாக குருவாக இருந்தார். எனவே, சங்ககாலம் முதல் இப்போது வரை கிருஷ்ணரின் மீதான காதல் கலந்த பக்தி மணம் பரவிக்கொண்டேயிருக்கிறது. காதல், பக்தி, ஞானம் என்று இந்த மூன்றையும் ஒன்றாக சேர்த்து தருவது கிருஷ்ணரே ஆவார்.
அத்தகைய கிருஷ்ணரின் பிறப்பு என்பது தீமை என்னும் இருளுக்கு எதிராக தோன்றிய ஒளியாகும். எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலைத்தூக்குகிறதோ அப்போதெல்லாம் விஷ்ணுபகவான் அவதரித்து மக்களையும், பூமியையும் காப்பார் என்பதற்கான நம்பிக்கையாகும்.
இந்த நன்நாளில் மக்கள் ஸ்ரீ கிருஷ்ணரின் குழந்தை பாதங்கள் வீட்டினுள் நுழைவதுபோல வரைந்து வீட்டை அலங்கரிப்பார்கள். ஸ்ரீ கிருஷ்ணருக்கு நெய்வைத்தியம் செய்து படைப்பார்கள். கிருஷ்ணரின் நாமத்தை ஜெபித்து மக்கள் இந்த நன்நாளைக் கொண்டாடி மகிழ்வார்கள்.