சில கோயில்கள் சில சுவாரஸ்யங்கள்..!

சுந்தரேஸ்வரர் ஆலயம்
சுந்தரேஸ்வரர் ஆலயம்

வெற்றி தரும் தேவி

திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 22 கிமீ தொலைவில் உள்ள பெருகமணி கிராமத்தை அடுத்துள்ள நங்கவரத்தில் அமைந்துள்ளது சுந்தரேஸ்வரர் ஆலயம். கருவறையில் இறைவன் சுந்தரேஸ்வரர் கீழ்திசை நோக்கி லிங்கத்திருமேனியில் அருட்பாலிக்கிறார்.

இங்கே "நீண்ட திருமேனி 'முனிவருக்கு தனி சன்னதி உள்ளது. அவரின் மேனியை தொடாமல் அவருக்கு பூஜைகள் நடைபெற்று வருகிறது. கன்னிமூலை கணபதி, அருணகிரி நாதர், வள்ளி, தேவ சேனாவுடன்   ஷண்முகநாதர்,  பாலசுப்பிரமணியர்,   ஜேஷ்டாதேவி,  துர்கை, சண்டிகேஸ்வரர், வடக்கில்  பைரவர், வடகிழக்கு மூலையில் நவகிரக நாயகர்கள் அருள் பாலிக்கின்றனர்.

இங்குள்ள ஜேஷ்டாதேவி மிகவும் சிறப்பு வாய்ந்தவர். அந்நாளில் சோழ மன்னர்கள் போருக்கு செல்லும் முன் ஜேஷ்டாதேவியின் காலடியில் தங்களது போர் வாளை வைத்து வணங்கி விட்டு எடுத்துச் செல்வார்களாம். அதனால் பல வெற்றிகளை கண்டுள்ளனர். எந்த செயலை தொடங்குவதாக  இருந்தாலும் இவரை வணங்கி விட்டு பின்னர் தொடங்கினால் வெற்றியும், வளர்ச்சியும் நிச்சயம் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

ஓம்' எதிரொலிக்கும் கோயில்

திருச்சி திருவானைக்காவல் பஸ் நிலையத்தில் இருந்து ஒரு கி மீ தொலைவில் உள்ள கீழ் கொண்டையன்  பேட்டையில் உள்ளது. ஜோதிர் லிங்கேஸ்வரர் ஆலயம். இங்கு ஈசன் ஜோதியாய் அருள்பாலிக்கிறார். இங்கு கருவறையில் ஈசனுக்கு எண்கோண வடிவத்தில் ஐம்பொன்னும், நவக்கிரக கற்களும், சிதம்பர சக்கரமும் பதிக்கப்பட்டு அதன் மேல் லிங்கம் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
உடல் எடை கூட உண்ண வேண்டிய எட்டு வகை உணவுகள் என்ன தெரியுமா?
சுந்தரேஸ்வரர் ஆலயம்

கருவறையின் தென்கிழக்கு, தென்மேற்கு, வடகிழக்கு, வடமேற்கு திசையில் இருக்கும் சுவர்களில் உள்ள சிறிய துவாரங்களில் ஏதேனும் ஒன்றில் நாம்"ஓம் " என்று சொல்ல அந்த ஓசை நான்கு புறமும் எதிரொலித்து நம்மை சிலிர்க்க வைக்கிறது. இந்த ஆலயத்தின் கோபுரத்தை நாம் வெளியே இருந்து வணங்கினால் அது மூலவரை வணங்குவதற்கு சமம், ஏனெனில் மூலவரான ஜோதிர் லிங்கத்திற்கு நேர் மேலே நேராக கலசம் வரை துவாரம் உள்ளது.

சயன கோலத்தில் நரசிம்மர்

பெருமாள் கோயில்களில் நரசிம்மரை யோக நரசிம்மராகவும், மகாலட்சுமியை மடியிலே அமர்த்திய கோலத்திலும், உக்கிர நரசிம்மராகவும் காணலாம். ஆனால் கடலூர் மாவட்டம் திருவதிகை சர நாராயண பெருமாள் கோயிலில் நரசிம்மரை சயன கோலத்தில் காணலாம். சிவனுக்கு அம்பாக (சரமாக) பெருமாள் உதவியதால் இங்குள்ள பெருமாளுக்கு சர நாராயண பெருமாள் என்று பெயர்.

நரசிம்மர் சயனத் திருக்கோலம்
நரசிம்மர் சயனத் திருக்கோலம்

திருமாலின் திவ்வியத்திருத் தலங்களில் இக்கோயிலில் தான்  நரசிம்மர் சயனத் திருக்கோலத்தில் தெற்கு நோக்கி சயனித்திருக்கிறார். மேலும் தாயாரும் உடன் எழுந்தருளியிருப்பதால் இது போக சயனம் ஆகும். இந்த சயன நரசிம்மர், திருவக்கரையில் வக்ராசுரனை அழித்து விட்டு, அதன் பரிகாரத்துக்காக இத்தலத்தில் வந்து சயனித்துள்ளார் என்கிறார்கள்.

நல்லெண்ணெய் காணிக்கை

திருநெல்வேலி மாவட்டம் பாவூர் சத்திரம் அருகே உள்ள அருணாப்பேரி என்னும் ஊரில் ‘‘மேகம் திரை கொண்ட சாஸ்தா கோயில்’’  அமைந்துள்ளது. சுமார் பத்து ஏக்கர் நிலப்பரப்பில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. சாஸ்தாவின் கிழக்கு நோக்கிய சந்நதி சிறிய அளவில் உள்ளது. ஆலய வளாகத்தின் மேற்குப் பகுதியில் தனிச் சந்நதியில் கிழக்கு முகமாக அருள்பாலிக்கும் சுயம்பு சாஸ்தாவுக்கு உருவச் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

மழை தரும் மேகத்தையே குடையாக, தடுப்பு திரையாக அமைத்து பக்தர் ஒருவரின் எள் குவியலை நனையாமல் காப்பாற்றிய அந்த சுயம்பு நாதருக்கு காரணப் பெயராக, ‘‘மேகம் திரை கொண்ட சாஸ்தா’’ என்று அழகியபெயரிட்டு அழைத்தனர். இது நடந்தது ஒரு ஆடி மாதம் 3-வது புதன் கிழமையில் என்பதால் அப்போது கோவில் விழா நடத்தப்படுகிறது.

நித்திய பூஜை அன்றாடம் நடைபெறுகிறது. புதன் மற்றும் சனிக்கிழமைகளில் நாள் முழுவதும் நடை திறந்திருக்கும். மேகம் திரை கொண்டு இறைவன் எள்ளை காப்பாற்றியதால் சுவாமிக்கு, தினமும் எண்ணெய்க் காப்பு நடக்கிறது. எள்ளில் இருந்து பெறப்படும் நல்லெண்ணெய் மட்டுமே, இறைவனின் எண்ணெய்க் காப்புக்கு பயன்படுத்தப்படுகிறது . இதனால் பக்தர்கள் அனைவரும் ஆலயத்துக்கு நல்லெண்ணெய் காணிக்கையாக செலுத்துவது மரபாக உள்ளது. இங்கு சாஸ்தாவுக்கு பக்தர்கள் செவ்வந்திப்பூ மாலைகளை விரும்பி அனிவிக்கிறார்கள்.

சஞ்சீவி பெருமாள் கோயில்
சஞ்சீவி பெருமாள் கோயில்

வாரம் ஒருமுறை மட்டுமே திறக்கும் கோயில்

தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் நகருக்கு அருகில் உள்ள சாலமலை மலையில் சஞ்சீவி பெருமாள் கோயில் மலையின் உச்சியில் அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில்  சஞ்சீவி பெருமாள்.  தனது மனைவிகளான லட்சுமி, நாச்சியார் ஆகியோருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோயில் சனிக்கிழமைகளில் மட்டுமே தரிசனத்திற்கு  திறக்கப்படும். பக்தர்கள் இங்கு தொட்டில் கட்டி குழந்தை வரம் வேண்டி சஞ்சீவி பெருமாளிடம் தொடர்ந்து ஏழு சனிக்கிழமைகள் விளக்கேற்றி பிரார்த்தனை செய்கின்றனர். இக்கோயில் 1000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. சின்னமனூரிலிருந்து சுமார் 9 கிமீ தொலைவில் உள்ளது.ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மட்டும் கோயில் திறந்திருக்கும். மற்ற நாட்களில் கோயில் பூட்டியிருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com