சதுரங்கத்தில் வென்று சக்தியை மணந்த ஈசன்!

சதுரங்கத்தில் வென்று சக்தியை மணந்த ஈசன்!

-பிரமோதா, சக்தி.சாமிநாதன்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று (ஜூலை 28) நடந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் பங்குகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

அப்போது ''தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருப்பூவனூர் சதுரங்க வல்லபநாதர் திருக்கோயில் செஸ் விளையாட்டுடன் தொடர்புடையது. இங்கு இறைவன் அரசியுடன் செஸ் விளையாடி வென்றார் என்பது ஐதீகம்''  என்று ஒரு தகவலை பிரதமர் மோடி சொல்ல, உடனடியாக பலருக்கும் அந்த கோயில் குறித்து தெரிந்துகொள்ளும் ஆவல் ஏற்பட்டுள்ளது. 

சுமார் 1,500 ஆண்டுகள் பழமையான இந்த ஶ்ரீ சதுரங்க வல்லபநாதர் ஆலயம் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே மன்னார்குடி சாலையில் பூவனூர் என்ற கிராமத்தில் அமைந்திருக்கிறது.

இக்கோயிலுக்கும் சதுரங்க விளையாட்டுக்கும் என்ன தொடர்பு? கல்கி ஆன்லைனுக்காக இக்கோயிலின் தலபுராணத்தை நேரில் கேட்டறியச் சென்றோம். 

''இக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும்.  அப்பர் பெருமான் தன் தேவாரப் பதிகத்தில் இத்தலத்தை போற்றி 'ஆவின் மேவிய ஐந்தமர்ந்து ஆடுவான் தூவெண்ணீறு துதைந்த செம்மேனியான் மேவனூல் விரிவெண்ணியின் தென்கரைப் பூவனூர் புகுவார் வினை போகுமே' என்று பாடியிருக்கிறார்'' என்று சொல்லத் தொடங்கினார், திருவடி குடில் சுவாமிகள்.

 'இறைபணி மன்ற திருக்கூட்ட நிறுவனரான' திருவடிக் குடில் சுவாமிகள் ஶ்ரீசதுரங்க வல்லப நாதர் திருக்கோயிலை புனரமைப்பு செய்து குடமுழுக்கை முன்னின்று நடத்தியவர். செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் துவங்கும் முன்பாக, திருவடிக் குடில் சுவாமிகளின் கோரிக்கையை ஏற்று இந்து அறநிலைய துறை இக்கோயிலில் செஸ் விழிப்புணர்வு போட்டி ஒன்றை அபிஷேக ஆராதனையோடு நடத்தியது குறிப்பிடத் தக்கது. இப்படிப்பட்ட துவக்கத்தை  

தமிழ்நாட்டிலேயே இத்திருக்கோயிலில் மட்டுமே நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. 

இக்கோயிலின் வரலாறு பற்றிச் சொல்லத் தொடங்கினார் திருவடிக் குடில் சுவாமிகள்..

''திருநெல்வேலியில் வசுசேனன் என்ற மன்னருக்கு பார்வதி தேவி மகளாகப் பிறக்க, அவளுக்கு ராஜராஜேஸ்வரி என்று பெயர்சூட்டி வளர்க்கிறார். சதுரங்கத்தில் வல்லவளாகத் திகழும் ராஜராஜேஸ்வரியை அப்போட்டியில் வெல்பவருக்கே மணமுடித்துக் கொடுப்பதாக மன்னன் அறிவிக்க, பல நாட்டு ராஜகுமாரர்கள் வந்து அம்பிகையுடன் சதுரங்கம் விளையாடி தோல்வியுற்றுத் திரும்புகின்றனர். 

இந்நிலையில் பூவனூர் ஶ்ரீ வல்லபநாதர் சித்தர் வேடம் பூண்டு மன்னன் வசுசேனன் அரண்மனைக்குச் சென்று, சதுரங்கப் போட்டிக்கு தன்னுடைய சவாலைத் தெரிவிக்கிறார். இதையடுத்து அம்பிகைக்கும் ஈசனுக்கும் நடந்த சதுரங்கப் போட்டியில் ஈசன் வெற்றிவாகை சூடுகிறார். பின்னர் தன் உண்மையான வடிவுடன் இறைவன் காட்சியளிக்க, மனம் மகிழ்ந்த மன்னன் தன் மகளை இறைவனுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். இதையடுத்து இக்கோயிலில் உறையும் ஈசனுக்கு ஶ்ரீசதுரங்க வல்லபநாதர் என்ற பெயர் ஏற்பட்டது'' என்று விபரமாக சொல்லி முடித்தார் திருவடிக் குடில் சுவாமிகள். 

பார்வதிதேவி பூலோகத்திற்கு வந்து ராஜராஜேஸ்வரியாக மாறி சதுரங்கவல்லபநாதரிடம் சதுரங்க விளையாட்டில் எதிர்கொண்டதால் இந்த ஆலயத்தில் ஸ்ரீ ராஜராஜேஸ்வரிக்கு தனி சன்னதி உள்ளது. 

மேலும் இவ்வாலயத்தின் மற்றொரு சிறப்பு -ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின் வளர்ப்பு தாயான ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்பாளுக்கு வடக்கு பார்க்க ஒரு தனி சன்னதி உள்ளது. மைசூர் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி ஆலயத்திற்கு நிகராக தமிழகத்தில் ஒரே ஆலயமாக இங்கு ஸ்ரீ சாமுண்டீஸ்வரி சன்னதி விளங்குகிறது

சதுரங்க விளையாட்டில் ஆர்வம் உடையவர்கள் இக்கோயிலுக்கு வந்து ஸ்ரீ சதுரங்க வல்லப நாதரை வழிபட்டு சதுரங்க விளையாட்டு போட்டிக்கு சென்றால் வெற்றி வாகை சூடலாம் என்பது நம்பிக்கை. 

மேலும் சதுரங்க விளையாட்டில் ராணிக்கே அதிக பவர் உண்டு. அதாவது சதுரங்க விளையாட்டினை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் இந்த ஆலயத்தில் ராணியாக அருள்பாலிக்கும் இறைவி ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் சன்னதி மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது

அதேபோல் திருமணத்தடை நீங்குவதற்கான சிறந்த பரிகாரத் தலமாக இக்கோயில் விளங்குகிறது. மேலும் விஷக்கடி உபாதைகள் நீங்க, இக்கோயிலின் புண்ணிய திர்த்தத்தில் நீராடி பலன் பெறலாம் என்கிறார்கள். 

அமைவிடம்; திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே பூவனூரில் அமைந்துள்ளது. மன்னார்குடி, அம்மாப்பேட்டை, வலங்கைமான் ஆகிய ஊர்களிலிருந்து பூவனூர் வழியாகச் செல்லும் பேருந்துகளில் ஏறிச் செல்லலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com