ஷீரடிக்கு இழுக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்!

ஸ்ரீ சாய் சரித்திரம்
ஷீரடிக்கு இழுக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்!

அத்தியாயம் -12 

மேலும் சில சிட்டுக்குருவிகள் - மாதவ்ராவ் தேஷ்பாண்டே & பாபு சாஹேப் பூட்டி

ஷாமா என்னும் மாதவ்ராவ் தேஷ்பாண்டே:  மாதவ்ராவ் தேஷ்பாண்டே தனது சிறு வயதிலிருந்தே  ஷீரடியில் வசித்து வந்தார். இவர் ஒரு ஆசிரியராக பாபா அமர்ந்திருந்த மசூதிக்கருகேயுள்ள ஒரு கட்டடத்தில் உள்ள  பள்ளியில் வேலை பார்த்து வந்தார். முதலில் பாபா மேல் நம்பிக்கை இல்லாமல் இருந்தபோதிலும் படிப்படியாக இறைவன்தான் அவர் உருவத்தில் ஷீரடிக்கு வந்திருக்கிறார் என்று புரிந்து கொண்டார். நாளடைவில் பாபாவின் அணுக்கத் தொண்டராகி அவர் சேவைக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

மாதவ்ராவ் தேஷ்பாண்டே
மாதவ்ராவ் தேஷ்பாண்டே

ஒரு முறை  விஷப்பாம்புக் கடியால் மயக்கமுற்ற மாதவ்ராவை பக்தர்கள் மசூதிக்குக் கொண்டு வந்தனர்.  பாபா,"போ! அப்பாலே! இறங்கு! மேலே ஏறாதே!" என்று பாம்பின் விஷத்துக்குக் கட்டளையிட, விஷம் மெதுவாக இறங்கி மாதவ்ராவ் குணமடைந்தார்.  அது அவருக்கு மறு பிறவி என்று சொன்ன பாபா அன்றிலிருந்து  அவருக்கு புதுப் பெயர் ' ஷாமா ' என்று சூட்டி அழைக்க ஆரம்பித்தார். நந்தி பகவான் மூலம் சிவபெருமானை அணுகுவதைப் போல பக்தர்கள் ஷீரடியில் ஷாமா மூலம் பாபாவை அணுகி தங்கள் கோரிக்கைகளை வைப்பது வழக்கமாயிற்று. நிறைய நேரங்களில் பாபா பூடகமாகப் பேசுவார்.  பக்தர்களுக்கு அவர் என்ன சொல்கிறார் என்பது புரியாது.  அவருடன் நெருக்கமான பழக்கத்தில் இருக்கும் ஷாமா தான் அவர்களுக்கு பாபா என்ன சொல்கிறார் என்பதை விளக்கமாகச் சொல்வார்.  அதை பாபாவும் ஆமோதிப்பார். 

ஒருமுறை தாமு அன்னா என்னும் அஹமத்நகரைச் சேர்ந்த வணிகர் ஷீரடிக்கு வந்து புத்திர பாக்கியத்துக்காக வேண்டியபோது, பாபா அவருக்கு நாலு மாம்பழங்களைக் கொடுத்து, "இதை உண்டு மரிக்க வேண்டும்!" என்றார்.  தாமு அன்னா இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார்.  பிறகு ஷாமா இந்த வார்த்தைகளின் அர்த்தத்தை விளக்கினார்.  "சாவு என்பது 'தான்' என்னும் அஹங்காரச் சாவு ஆகும்.  அது பாபாவின் திருவடிக்களுக்கருகே நிகழ்வது ஒரு ஆசிர்வாதமேயாகும்." என்று.  பாபாவும் இதை ஆமோதித்து தலையசைத்தார்.  பிறகு பாபா அவரிடம், "நீயே இதைத் தின்று விடாதே! உன் இளைய மனைவிக்குக் கொடு! இந்த மாம்பழம் அவளுக்குப் பிள்ளைப் பேற்றைக் கொடுக்கும்!" என்றார்.

ஷாமாவின் தாயார் வேண்டுதல்கள் அவர் இறந்து போய் 30 வருடங்கள் ஆகியும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது என்றும், அதனால்தான் அவர்கள் வாழ்க்கையில் துன்பங்கள் வருகின்றன என்று ஷாமாவின் தம்பி பாபாஜி ஒரு ஜோசியரை கலந்து ஆலோசித்தபோது கூறினார்.  உடனே சிறிதும் தாமதமின்றி ஷாமா தன் தாயார் வேண்டுதலின்படி வணியில் உள்ள  'ஸ்ரீ சப்தஷிருங்கி  தேவி' என்னும்  குலதெய்வம் கோவிலுக்குப் போய் சமர்ப்பிக்க வேண்டிய  காணிக்கையை தயார் செய்து பாபா காலடியில் சமர்ப்பித்தார். ஏனென்றால், அவருக்கு பாபாவே குலதெய்வம். பாபாவையன்றி வேறு தெய்வத்தை அவர் அறியார். ஷாமாவுக்கு பாபா மேல் அவ்வளவு அபார நம்பிக்கை. ஆனால், பாபா அவரை குலதெய்வம் கோவிலுக்கே நேரில் சென்று அந்த காணிக்கையை சமர்ப்பிக்க வைத்தார்.

ஷாமா பாபாவைக் கேட்காமல் ஒரு காரியமும் செய்ய மாட்டார். அவர் என்ன சொன்னாலும் உடனே அதை ஏற்றுக்கொண்டு நடப்பார். பக்தர்களிடமிருந்து பாபாவுக்கு தபாலில் வரும் கடிதங்களைப் படித்து அதற்கு பாபா சொல்லும் பதிலை எழுதுவதும் ஷாமாதான். சிறந்த பக்தருக்கு ஒரு நல்ல உதாரணம் ஷாமா.

பாபு சாஹேப் பூட்டி: கோபால் ராவ் முகுந்த்ராவ் பூட்டி நாக்ப்பூரில் ஒரு கோடீஸ்வரர். 1907ல் ஷீரடியில் பாபாவின் தரிசனத்துக்காக இழுக்கப்பட்டார்.  பாபாவை தரிசித்ததிலிருந்து பூட்டியின் மனநிலை முற்றிலும் மாறிப் போனது.  வெகு எளிமையான மனிதனாக வாழ ஆரம்பித்தார்.  பாபாவை சந்திக்கும் ஆர்வத்தால் அடிக்கடி ஷீரடிக்கு வர ஆரம்பித்தார். பாபா அவருக்கு ஏவும் பணிகளை, பிறரிடம் சென்று தட்சிணை பெற்று வா என்றெல்லாம் கூறும்போதேல்லாம் அதை தனக்குக் கிடைத்த பாக்கியமாக எண்ணி எல்லா வேலைகளையும் சிரமேற்கொண்டு செய்தார்.

பாபு சாஹேப் பூட்டி
பாபு சாஹேப் பூட்டி

சிறுது காலத்துக்கு பிறகு தனக்குத் தங்குவதற்கு ஒரு இடம் ஷீரடியில் வேண்டும் என நினைத்து ஒரு வாடாவை கட்ட எண்ணினார்.  பாபாவின் சம்மதம் பெற்று வாடாவைக் கட்ட ஆரம்பித்தார்.  பாபாவின் மேற்பார்வையில் கட்டடம் உருவாக ஆரம்பித்தது.  மத்தியப் பகுதியில் முரளி தருக்காக ஒரு இடம் ஒதுக்கி, அங்கே முரளிதர் விக்கிரகத்தை பிரதிட்ஷை செய்ய பாபாவும் அனுமதி யளித்தார்.  ஆனால், அந்த நேரத்தில் பாபா உடல் நலம் குன்ற ஆரம்பித்தது. தான் லட்ச ரூபாய்க்கு மேல் செலவழித்துக் கட்டிய வாடா பாபாவின் மறைவால்,  அவர் புனிதப் பாதங்கள் படாமல் வீணாகப் போய் விடுமே என்று பாபு சாஹேப் பூட்டி மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தார்.  அப்போது  "என்னை பூட்டியின் வாடாவில் வையுங்கள்" என்ற பாபாவின் கடைசி வார்த்தைகள் அவருக்கு மிகுந்த ஆறுதலளித்து  தேற்றியது.  பூட்டியின் வாடாவில் முரளிதருக்காக ஒதுக்கியிருந்த இடத்தில் பாபாவின் பூத உடலை வைத்து சமாதி மந்திர் எழும்பியது.  அதுதான் இன்றைக்கு உலகெங்கிலுமிருந்தும் கோடிக் கணக்கான பக்தர்கள்  பக்தியுடன் தேடி வரும் ஷீரடி பாபா  மந்திர்.

முடிவுரை: ஷீரடி ஸ்ரீ சாயிபாபா எண்ணற்ற சிட்டுக் குருவிகளை ஷீரடிக்கு இழுத்து அவர்களின் லௌகிக, ஆன்மிகத் தேவைகளைப் பூர்த்தி செய்த கதைகள் ஸ்ரீ சாயி சத்சரிதத்தில் காணப்படுகின்றன. இந்தக் கட்டுரை ஆசிரியரும் ஸ்ரீ பாபாவால் ஷீரடிக்கு இழுக்கப்பட்ட ஒரு சிட்டுக்குருவிதான். 'ச்ரத்தா-சபூரி'  -  நம்பிக்கை, பொறுமை என்ற இரண்டே வார்த்தைகளில் இவ்வுலக வாழ்க்கையையே அடக்கி விட்ட மகானின் சத்சரித்திரம் படிக்கப் படிக்க ஷீரடி பாபாவின் மேல் ஈடுபாடு அதிகரித்து ஷீரடி போகும் ஆசை என் மனதில் கிளர்ந்தெழுந்தது.

2001ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி அலுவலக நண்பர்களுடன் சென்று ஷீரடியில் பாபா தரிசனம். "என்னுடைய பக்தன் பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்தால் கூட சிட்டுக் குருவியின் காலில் நூலைக் கட்டி இழுப்பது போல அவனை எனது தரிசனத்துக்காக ஷீரடிக்குக் கொண்டு வருவேன்" என்று கூறியவராயிற்றே பாபா!  ஏழு ஆண்டுகளாக சத்சரித்திரம் படித்துப் படித்து ஷீரடிக்குப் போவோமா என்று ஏங்கிப் போய் பாபாவை தரிசித்தபோது, ஜன்ம ஜன்மாய் பிரிந்திருந்த நேசத்திற்குரிய ஒரு நெருங்கிய உறவினரைப் பார்ப்பது போல் துக்கம் தொண்டையையடைக்க, கண்களில் நீர் நிற்காமல் வழிந்துக் கொண்டிருந்தது.  அழுது முடித்தவுடன் இத்தனை வருடங்களாக மனதில் மண்டியிருந்த துக்கமனைத்தும் கரைந்து, மனசு லேசாகிப் போனது போல் ஓர் உணர்வு.   தரிசன மகிமையென்றால் அது ஷீரடி சாயிபாபாவின் தரிசனம்தான்.  அவரை தரிசித்த அக்கணமே, எப்போதும் அலை பாய்ந்து கொண்டும் படபடத்துக் கொண்டுமிருந்த மனது நொடியில் அமைதியாகி ஆசுவாசமானது. எனக்கான இடம் இதுதான் என்று புலனாயிற்று.

22 வருடங்களுக்கு முன் நான் முதன் முதலில் சென்ற போது, ஷீரடி ஒரு குக்கிராமம்.  வீட்டு வாசல்களில் சாணி தெளித்து கோலம் போடுவார்கள்.   மண்ணைக் குழைத்துப் பூசிய சின்னச் சின்ன வீடுகள் மட்டும்தான் இருந்தன.  பெரிய கட்டடங்கள் எதுவுமே இல்லை.  திரும்பத் திரும்ப வரிசையில் போய் நின்று பலமுறை பாபாவைப் பார்க்கலாம்.  நானும் தோழிகளும் துவாரகாமாயியை பெருக்கித் துடைத்து சுத்தம் செய்து கொடுத்தோம் மிகுந்த பரவசத்துடன்.  பாபா அமர்ந்து அருள்பாலித்த இடமாயிற்றே துவாரகாமாயி!       அப்பொழுது ஸ்ரீ சாயி சத்சரித்திரம் தமிழ் புத்தகம் சென்னையில் கிடைக்காத சமயம்.  நான் சென்றிருந்த சமயம் ஸ்ரீ சாயி சன்ஸ்தான் ஷீரடியில் அடுத்த பதிப்பை வெளியிட்டிருந்தது.  மிக்க சந்தோஷத்துடன் சாயி பக்தர்களான என் அலுவலக நண்பர்களுக்கு சத்சரித்திர பிரதிகளை வாங்கிய நான், என் தாயாருக்கும் ஒரு பிரதி வாங்கி வந்து கொடுத்தேன்.

அதைப் பிரித்துப் பார்த்ததுமே என் தாயார், "இதில பாபு சாஹேப் பூட்டின்னு போட்டிருக்கே, நாக்பூர்ல அவர் வீட்டிலதான் நீ பொறந்தே!" என்று  உற்சாகமாகச் சொன்னாள். என் தாயார் பிரசவத்துக்காக நாக்பூர் சென்றபோது, நாக்பூரில் பூட்டி வீட்டில்தான் என் தாத்தா குடியிருந்தாராம். அதைக் கேட்டவுடன் நான் அடைந்த பரவசத்தை விவரிக்க வார்த்தைகளேயில்லை.

'ஆஹா! பாபாவோடு நமக்கு இப்படி ஒரு தொடர்பு இருக்கிறதா?  அதனால் தான் எங்கேயோ சென்னையில் இருந்த என்னை ஷீரடிக்கு ஒரு சிட்டுக்குருவியைப் போல இழுத்து அவரை தரிசிக்க வைத்தாரா?' என்றெல்லாம் எண்ணி புளகாங்கிதம் அடைந்தேன்.  அன்று ஆரம்பித்து இன்று வரை பல பத்திரிகைகளில் ஸ்ரீ பாபாவைப் பற்றி எழுதும் பாக்கியமும் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கிறது. இது எனக்கு அவர் இட்ட  பணி!

மகான்கள்  மரணமடைவது என்பது ஒருபொழுதும் கிடையாது. "நான் இந்த பூத உடலை விட்ட பிறகும்  என்னை நம்புங்கள்.   என் சமாதியில் உள்ள என் எலும்புகள் உங்களுக்கு தைரியத்தையும் நம்பிக்கையும் கொடுக்கும்.  நான் மட்டுமல்ல, என்னிடம் முழு இதயத்தோடு சரணமடைபவர்களிடன் என் சமாதியும் பேசும், தொடர்பு கொள்ளும்.  நான் உங்களிடை யேயில்லையே என்று ஒருபோதும் கவலைப்படாதீர்கள்.  என்னையே நினைப்பவர்களுக்கு எனது எலும்புகள் கூட அவர்களது நலத்தைக் குறித்துப் பேசும், மன ஆறுதலளிக்கும்!"   என்று அருளுரைத்திருக்கிறார் பாபா. என்றென்றும் நம்முடனேயே இருக்கும் பாபாவை வணங்கி குறைவிலாத அவருடைய அருளைப் பெறுவோம். 

நிறைவுற்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com