ஷீரடிக்கு இழுக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்- பீமாஜி பாட்டீல்

ஸ்ரீ சாய் சரித்திரம்
ஷீரடிக்கு இழுக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்-  பீமாஜி பாட்டீல்

அத்தியாயம் -10

ஷீரடி ஸ்ரீ சாயிபாபா கூறுகிறார், "யார் அதிர்ஷ்டசாலியோ யாருடைய பாவங்கள் ஒழிந்தனவோ அவர்களுக்கு என்னுடைய வழிபாட்டை செய்யும் சந்தர்ப்பம் கிடைக்கிறது.  'சாயி சாயி' என்று எப்போதும் கூறிக் கொண்டிருப்பீர்களானால் நான் உங்களை ஏழ்கடலுக்கு அப்பாலெடுத்துச் செல்வேன்.  என்னுடைய இந்த வார்த்தைகளை நம்புங்கள்.  நீங்கள் நிச்சயம் நன்மையடைவீர்கள்.  வழிபாட்டின் கூறுகள் எட்டோ பதினாறோ எனக்குத் தேவையில்லை.  எங்கு முழுமையான பக்தி இருக்கிறதோ அங்கு நான் அமர்கிறேன்."

பாபாவின் வார்த்தைகள் ஆழ்ந்த அர்த்தமுள்ளவை.  அவற்றில் ஆழம் மிகுந்த தத்துவங்களும் மறைபொருளும் பொதிந்துள்ளன.  தம்மிடம் முழுவதுமாக சரணடைந்த வர்களின் நன்மைக்காக பாபா என்ன செய்தார் என்பது ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தில் பல நிகழ்வுகளின் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளன.  மிக விசேஷமாக சில பக்தர்களை சிட்டுக்குருவி காலில் நூலைக் கட்டி இழுப்பது போல இழுத்து ஷீரடிக்கு வரவழைத்து அவர்கள் வியாதியை தீர்த்த நிகழ்வுகளையும் ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தில் நாம் பார்க்கிறோம்.

புனே நகரத்தில் ஜூன்னர் மாவட்டத்தில் நாராயண் காவ் என்கிற ஊரில் பீமாஜி பாட்டீல் என்பவர் பலதரப்பட்ட வியாதிகளால் மிகுந்த துன்பத்துக் குள்ளானார்.  சகிக்க முடியாத இருமல், ஜூரம் என்று கடுமையாக ஆரம்பித்து, ஒவ்வொறு நாளும் நோய் ஜாஸ்தியாக, பீமாஜி நிலைகுலைந்து போனார்.  வாயிலிருந்து எப்பொழுது கபம் வருகிறதோ அப்போது காது அடைத்துக் கொண்டு ரத்தம் வர ஆரம்பித்தது. வயிற்றில் மிகக் கடுமையான வலி.  இந்த உபாதைகளினால் படுத்த படுக்கையானார். எத்தனையோ சிகிச்சைகள் மேற்கொண்டும் ஒன்றும் சரியாகவில்லை.  ஒரு கட்டத்தில் அவர் உயிர்  பிழைப்போமா என்று அவநம்பிக்கையுற்று, "ஓ! நாராயணமூர்த்தியே என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்!" என்று கடவுளிடம் இறைஞ்சினார். அப்பொழுது அவருக்கு திடீரென்று நானா சாஹேப் சந்தோர்க்கரிடம் தன்னுடைய நிலைமையைப் பற்றிக் கூறி ஆலோசிக்கும் எண்ணம் ஏற்பட்டது.  தனது துன்பங்கள் அனைத்தையும் அவருக்கு ஒரு கடிதம் மூலம் தெரிவித்து  அவருடைய கருத்தைத் தெரிவிக்க வேண்டினார்.  கடிதத்தைப் படித்த நானா மனம் உருகிப் போனார்.  "நிச்சயம் இதற்கு ஒரு வழி இருக்கிறது. அது பாபாவின் பாதாரவிந்தங்களில் சரணடைந்து வேண்டிக்கொள்வதேயாகும்" என்று பதில் எழுதினார். 

ஷீரடிக்கு பீமாஜி பாட்டீல் அழைத்து வரப்பட்டு பாபாவின் முன்னால் அமர்த்தப்பட்டார்.  அங்கு நானா சாஹேபும் ஷாமாவும் உடனிருந்தனர். முதலில் பாபா முன்னைய தீய கர்மங்களாலேயே இந்த வியாதி என்று கூறி பாட்டீல் விஷயத்தில் தலையிட விருப்பமில்லாதவர் போலிருந்தார்.  ஆனால் பாட்டீல் அவர் சரணங்களில் வீழ்ந்து,  "சாயிநாதா! என்மேல் கருணை காட்டுங்கள்! என்னை ரட்சித்துக் காப்பாற்றுங்கள்!" என்று தீனமாகக் கதறினார்.  கருணை வாய்ந்த பாபாவின் உள்ளம் உருகியது.

"பொறு பீமா! கவலையை விட்டொழி! கதறாதே! உன் துன்பங்கள் ஒரு முடிவுக்கு வரும் நேரம் வந்துவிட்டது.   ஒருவன் எவ்வளவுதான் நோய்வாய்ப்பட்டு, துக்கப் பட்டிருந்தாலும் இந்த மசூதியில் காலடி எடுத்து வைத்தவுடனேயே அவனுடைய வியாதிகள் தீர்ந்து விடும். என்னை நம்பு! இங்கேயுள்ள பக்கிரி மிகவும் அன்பானவர்.  அவர் எல்லா வியாதிகளையும் குணப்படுத்தி விடுவார்.  எல்லோரையும் மிக்க அன்புடனும் ஆசையுடனும் பாதுகாப்பார்.  நீ அமைதியாக பீம்பாயின் வீட்டில் போய் தங்கு! இரண்டு நாட்களில் உனக்கு நிவாரணம் கிடைக்கும்." என்றார்.

தாகத்தால் தவித்துக் கொண்டிருப்பவனுக்கு ஒரு வாய்த் தண்ணீர் கிடைத்தால் எப்படியிருக்குமோ அப்படி ஆசுவாசமாக பாட்டீல் உணர்ந்தார்.  நம்பிக்கை யூட்டும் கருணையான மொழிகளை பாபா அவரிடம் கூறிய நொடியிலிருந்து வியாதி குணமடையும் நிலை ஏற்பட்டது. ஐந்து நிமிடங்களுக்கொருமுறை  கபமும் இரத்தமுமாக வந்துக் கொண்டிருந்த வாந்தி, பாபாவின் முன் அமர்ந்து கொண்டிருந்த ஒருமணி நேரத்திற்குள்ளேயே முழுவதுமாக நின்று விட்டது. பாபா நோயாளியை பரிசோதிக்கவில்லை.  நோய் எப்படி ஏற்பட்டது என்று விசாரிக்கவுமில்லை.  அவருடைய அருட் பார்வையே நொடியில் வியாதியினுடைய மூலத்தைக் கண்டறிந்து வேரோடு அறுத்து விட்டது.

ஷீரடியில் பீம்பாயின் வீடு சுகாதாரக் குறைவும் மிகுந்த அசௌகர்யங்களும் உள்ள வீடு.  அங்கே போய் பாட்டீலைத் தங்குமாறு  பாபா பணித்தார்.  பாபாவின் உத்தரவிற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதால் பாபாவின் வார்த்தைகளை அப்படியே ஏற்று பீம்பாயின் வீட்டில் பாட்டீல் தங்கியிருக் கையில் பாபா  அவரை இரண்டு கனவுகள் மூலமாக முழுமையாகக் குணப்படுத்தினார்.  முதல் கனவு தன்னை ஒரு மாணாக்கனாக,  மராட்டிச் செய்யுள் ஒப்பிக்காததற்காக பிரம்படி வாங்குவது போலக் கண்டார். இரண்டாவது கனவு யாரோ ஒரு கல்லை தனது நெஞ்சின் மீது மேலும் கீழும் உருட்டிக் கடுமையான வலியையும் வேதனையையும் உண்டாக்குவதாகக் கண்டார். இந்த இரண்டு கனவுகளில் அவர் பட்ட கஷ்டங்களோடு அவர் சிகிச்சை முடிவடைந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.  பின்னர் அடிக்கடி ஷீரடி வந்து பாபா தனக்குச் செய்த உபகாரத்தை நினைத்து நன்றியோடு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்.

பாபாவும் மாறாத நம்பிக்கை, நன்றி, பக்தி இதைத் தவிர பக்தர்களிடம் வேறெதையும் எதிர்பார்க்கவில்லை.  மஹாராஷ்டிரத்தில் மக்கள் பதினைந்து தினங்களுக்கு ஒரு முறை தங்கள் இல்லங்களில் சத்யநாராயண பூஜையை தவறாமல் செய்வார்கள்.  ஆனால் தன் கிராமத்திற்கு திரும்பிய பிறகு பீமாஜி பாட்டீல் ஒரு புதிய பூஜையை ஆரம்பித்து செய்ய ஆரம்பித்தார். சத்யநாராயண பூஜைக்குப் பதிலாக சத்ய சாயி விரத பூஜையை தனது இல்லத்தில் செய்யத் தொடங்கினார்.  இவ்வாறாக தன் நன்றியையும், பக்தியையும் ஸ்ரீ சாயி பாபாவிற்கு தெரிவித்தார்.

(அருள் பெருகும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com