ஷீரடிக்கு இழுக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்- ஹரிசந்திர பிதலே!

ஷீரடி ஸ்ரீ சாயி – பக்தித் தொடர்
ஷீரடிக்கு இழுக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்- ஹரிசந்திர பிதலே!

அத்தியாயம் - 8

ஷீரடி சாயி சரிதம் ஒரு சத்புருஷனின் சரித்திரம்.  இது வெறும் வாழ்க்கை சரித்திரம் அன்று.  இவ்வுலக வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்துகொண்டே ஆன்மிக முன்னேற்றத்தைப் பற்றி விழிப்புணர்வுடன் செயல்பட்டு இந்த மானிடப் பிறவி எடுத்ததின் பயனை அடைய வேண்டும் என்பதை கதைகள் ரூபத்தில் நமக்கு விளக்கிக் கூறும் சரித்திரம்.  மனிதப் பிறவி எவ்வளவு அரிதானது?  பக்தியும், இறை வழிபாடும், முக்தியும் இந்த மானிடப் பிறவி முலம்தானே நமக்குச் சாத்தியமாகிறது? மக்களை நல்வழிப்படுத்தத்தான் ஞானிகள், சத்புருஷர்கள் அவதரிக்கிறார்கள். தான் ஒரு மகானாக இருந்தபோதிலும் 'எல்லா மகான்கள், சத்புருஷர்களும் ஒருவரே! அவர்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் ஒத்திசைவோடு செயல்படுகிறார்கள்' என்பதை பாபா எவ்வாறு விளங்க வைத்தார் என்பதை ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தில் குறிப்பிடப்படும் நிகழ்வுகள் மூலம் அறிந்துகொள்ளலாம்.

ஹரிச்சந்திர பிதலே
ஹரிச்சந்திர பிதலே

1910ஆம் வருஷத்தில் தாஸ்கணு மஹராஜின் கீர்த்தனங்களால் பாபாவின் புகழ் மஹாராஷ்டிர மாநிலம் எங்கும் பரவியது.  ஷீரடிக்கு மக்கள் அலையென திரண்டு பாபா தரிசனத்துக்கு வந்தார்கள்.  பம்பாயில் ஹரிச்சந்திர பிதலே என்னும் பெயருள்ள ஒரு பெரும் பணக்காரரின் மகன் வலிப்பு நோயால் பாதிக்கப் பட்டிருந்தான். பாபாவின் கடைக்கண் பார்வையே நோய்களைத் தீர்க்கிறது என்று கேள்வியுற்ற அவர் தனது மனைவி மகனுடன் ஷீரடிக்குச் சென்றார். சாயியை நேருக்கு நேர் பார்த்தவுடனேயே அவர் மகன் தீவிரமான வலிப்புக்கு ஆளாகி நினைவு தப்பி கீழே சாய்ந்தான். இதற்கு முன் அந்தப் பையனுக்கு பலமுறை வலிப்பு வந்திருக்கிறது.  ஆனால் இது போல இவ்வளவு நேரம் இருந்ததில்லை.  'அவ்வளவுதான்! அவன் கதை முடிந்துவிட்டது!' என்று கணவன் மனைவி இருவரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.  மனைவியோ தாங்கொணா துயரத்தில் பாபாவிடம் தன் குழந்தையைக் காப்பாற்றுமாறு பலமாக ஓலமிடத் தொடங்கினாள். 

"கொள்ளைக்காரனுக்குப் பயந்து ஒரு வீட்டில் வந்து ஒளிந்து கொண்ட ஒருவன் மீது அந்த வீடே சரிந்து விழுந்து விட்டது போல, புலிக்கு பயந்து ஓடிய பசுவை கசாப்பு கடைக்காரன் பிடித்தது போல, நிழலுக்கு ஒரு மரத்தடியில் ஒதுங்கிய வழிப்போக்கன் மீது அம்மரமே சாய்ந்து விழுந்து விட்டதை போல, ஒரு பக்தன் கோயிலுக்குக் கடவுளை வழிபடச் சென்றபோது அக்கோயிலே அவன் மீது இடிந்து விழுந்ததைப் போல எங்கள் நிலைமை இருக்கிறது.  உங்களை நம்பி இங்கே வந்தோம்.  என் பிள்ளை கதி இப்படி ஆகி விட்டதே!" என்று புலம்பிக் கதறிக் கண்ணீர் வடித்தாள்.

பாபா அவளைத் தேற்றி, "இம்மாதிரி புலம்பி ஓலமிடாதே! கொஞ்சம் பொறு.  அமைதியாக இரு. பையனை நீ தங்கியிருக்கும் இடத்துக்குக் கூட்டிக் கொண்டு போ! சற்று நேரத்தில் அவன் சரியாகி விடுவான்!" என்றார். பாபாவின் வாக்கு சத்திய வாக்கு அல்லவா?  அவர் கூறியது போலவே சற்று நேரத்தில் பையனுக்கு சுயநினைவு வந்தது.  வலிப்பும் நின்று போனது. பிதலேயின் குடும்பத்தினர் அனைவரும் மிகவும் ஆச்சர்யம் அடைந்தனர்.  அவர்கள் மனதில் இருந்த சந்தேகம் முற்றிலுமாக அழிந்தது.

மறுநாள் மகிழ்வோடு பாபாவின் தரிசனத்துக்கு பிதலே குடும்பத்தினர் போனார்கள்.  பாபா முன் மிகப் பணிவாகவும் மரியாதையாகவும் வீழ்ந்து நமஸ்கரித்து விட்டு பாபாவின் கால்களை பிடித்து விட்டவாறே மனதில் பாபாவின் உதவிக்கு நன்றி செலுத்தினார்.

பாபா புன்சிரிப்புடன் அவரை ஏறிட்டு, " இப்போது உன் சந்தேகங்கள் தீர்ந்ததா? நம்பிக்கையும் பொறுமையும் உடையோரை ஹரி நிச்சயம் காப்பாற்றுகிறார்!" என்றார். பிதலே நல்ல வசதியுள்ளவர்.  அவர் பெருமளவில் இனிப்புகளைப் பக்தர்களுக்கு வினியோகித்தார்.  பாபாவுக்கு வெற்றிலை பாக்கு, பழம் ஆகியவற்றைச்  சமர்ப்பித்தார். பாபாவின் சன்னிதானத்தில் சில மகிழ்ச்சியான நாட்களைக் கழித்த பிறகு பிதலே குடும்பத்தினர் தங்கள் ஊருக்குத் திரும்புவதற்காக பாபாவின் அனுமதியைப் பெற மசூதிக்கு வந்தனர்.

பாபா அவர்களுக்கு உதியையும் ஆசிர்வாதத்தையும் அளித்த பின், தன் சட்டைப்பையிலிருந்து மூன்று ரூபாய்கள் எடுத்துக் கொடுத்து, "நான் உனக்கு ஏற்கெனவே இரண்டு ரூபாய்கள் கொடுத்திருக்கிறேன். அதோடு இந்த மூன்று ரூபாய்களையும் பூஜையறையில் வைத்து வழிபடு. உனக்கு நல்லதே நடக்கும்!" என்று உதி, ஆசீர்வாதங்களோடு அனுப்பி வைத்தார்.

அவர் ஷீரடிக்கு வருவது அதுதான் முதன் முறையாதலால் ஹரிச்சந்திர பிதலேக்கு பாபா சொன்னது ஒன்றும் புரியவில்லை.  அதைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்த அவர் வீடு வந்ததும், தன் வயதான தாயாரிடம் ஷீரடியில் நடந்தவைகளைப் பற்றிக் கூறினார்.  அவர் தாயாரும் சற்று யோசித்துவிட்டு, "இப்போது ஷீரடிக்கு நீ உன் மகனுடன் போனது போல உன் தந்தையார்
நீ சிறுவனாக இருந்தபோது உன்னை அந்த மகானின் தரிசனத்துக்காக  அக்கல்கோட்டுக்கு அழைத்துச் சென்றார்.  அந்த மகான் உன் தந்தையாருக்கு இரண்டு ரூபாய்கள் கொடுத்து வழிபாட்டிற்காக பூஜையறையில் வைத்துக் கொள்ளச் சொன்னார்.  காலப்போக்கில் அந்த ரூபாய்கள் தொலைந்து போயின, வழிபாடும் நின்று போனது.  பூர்வகதையை நினைவு படுத்துவதற்காகவும் உன் கஷ்டங்களைத் தீர்ப்பதற்கும் அக்கல்கோட் மஹராஜ் ஷீரடி சாயி சமர்த்தரின் ரூபத்தில் உனக்கு மூன்று ரூபாயை பிரசாதமாகக் கொடுத்திருக்கிறார். இனியாவது  பக்தி சிரத்தையோடு நடந்துகொள்! உன் மூதாதையர் வழி நடந்து குடும்பத் தெய்வங்களையும் காசுகளையும் வணங்கி நல்ல முறையில் நடந்துகொள்!" என்று அறிவுரை கூறினாள்.

மகான்கள் எல்லோரும் ஒருவரே. அக்கல்கோட் மஹராஜோடு, தான் ஒன்றியவராக இருந்ததால்தானே ஸ்ரீ சாயிபாபா தன்னை ஷீரடிக்கு வரவழைத்து ஆசிர் வதித்தார் என்று உணர்ந்து ஹரிச்சந்திர பிதலே பாபாவுக்கு மானசீகமாக நன்றி தெரிவித்தார்.  பாபாவின் மொழிகளையும் நினைத்துப் பார்த்து குருமார்கள் அனைவரும் ஒருவரே என்பதையும் புரிந்துகொண்டு பாபாவிடம் என்றென்றும் நன்றியுடன் இருந்தார்.       

(அருள் பெருகும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com