ஷீரடிக்கு இழுக்கப்பட்ட சிட்டுக்குருவிகள் - ரத்தன்ஜி வாடியா

ஸ்ரீ சாய் சரித்திரம்
ஷீரடிக்கு இழுக்கப்பட்ட சிட்டுக்குருவிகள் - ரத்தன்ஜி வாடியா

அத்தியாயம் - 11 

 ஷீரடி சாயி சரிதம் ஒரு சத்புருஷனின் சரித்திரம்.  இது வெறும் வாழ்க்கை சரித்திரம் அன்று.  இவ்வுலக வாழ்க்கையைச் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டே ஆன்மிக முன்னேற்றத்தைப் பற்றி விழிப்புணர்வுடன் செயல்பட்டு இந்த மானிடப் பிறவி எடுத்ததின் பயனை அடைய வேண்டும் என்பதை கதைகள் ரூபத்தில் நமக்கு விளக்கிக் கூறும் சரித்திரமாகும்.

1910ஆம் வருஷத்தில் தாஸ்கணு மஹராஜின் கீர்த்தனங் களால் பாபாவின் புகழ் மஹாராஷ்டிர மாநிலம் எங்கும் பரவியது.  ஷீரடிக்கு மக்கள் அலையென திரண்டு பாபா தரிசனத்துக்கு வந்தார்கள்.  மகாராஷ்டிரத்தில் நாந்தேட் நகரில் நிஜாம் மாநிலத்தில் ரத்தன்ஜி ஷாபூர்ஜி வாடியா என்ற பிரசித்தி பெற்ற பார்ஸி வியாபாரி ஒருவர் இருந்தார். அவர்  ஒரு பெரும் வணிகர். அவர் மிகுந்த தர்மசீலர்.  பெரும் தனவந்தராகிய அவருக்கு ஏராளமான செல்வங்கள், நிலபுலங்கள் இருந்தன.  ஆடு, மாடுகள், குதிரைகள் மற்றும் ஏராளமான பொன்னும் பொருளும் படைத்த அவர் தான தர்மங்களில் நாட்டம்கொண்டு இதனால் மக்களின் பெரும் அன்புக்குப் பாத்திரமாக இருந்தார்.  வெளிப்பார்வைக்கு அவர் மகிழ்ச்சியாக வாழ்வதைப் போலத் தோன்றினாலும், அவர் மனதில் கவலை மண்டியிருந்தது.  குறையில்லாத வாழ்க்கையே இல்லையே?  வாழ்க்கையில் எல்லா வளங்களும் நிறைந்திருந்தும் தனக்கு குழந்தைகள் இல்லையே,  ஒரு சத்புத்திரனாவது பிறக்க மாட்டானா என்று ஏங்கிய அவர் தன் மனக்குறையை தாஸ்கணு மகராஜிடம் பகிர்ந்துகொண்டார்.  அவர்  "ஷீரடியிலுள்ள சாயி சமர்த்தரிடம் உடனே செல்லுங்கள். அவர் உங்கள் குறையைப் போக்குவார்" என்று அறிவுரை கூறினார். 

த்தன்ஜிக்கு தாஸ்கணுவின் வார்த்தைகள் ஆறுதலும் நம்பிக்கையும் அளித்தன. உடனே, அவர் ஷீரடிக்குச் சென்றார். பாபாவைப் பார்த்த மாத்திரத்தில் பரவசம் அடைந்தார். பாபாவின் தரிசனத்தைப் பெற்று அவர் பாதகமலங்களில் வீழ்ந்து வணங்கினார். ஓர் அழகிய பூமாலையைப் பாபாவின் கழுத்திலிட்டு கூடை நிறையப் பழங்களைச் சமர்ப்பித்தார்.  பாபாவிடம் மனம் தன் கோரிக்கையை வெளியிட்டார்.

"எவ்வளவோ கஷ்டங்களுடன் இங்கே வருபவர்களுக்கு தாங்கள் ஆறுதல் அளித்து அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி வைக்கிறீர்கள். வாழ்க்கையில் செல்வங்கள், வளங்களுக்குச் சிறிதும் குறைவில்லாத எனக்கு தங்கள் அருளால் புத்திர பாக்கியம் ஏற்பட்டால் நான் மிக்க மகிழ்ச்சியும் மன நிறைவும் அடைவேன்!" என்றார்.

பாபா, "சிறிதும் கவலைப்படாதே.  இன்றுடன் உன் கஷ்டமான நாட்கள் முடிவடைந்தன.  இறைவன் நிச்சயம் உன் கோரிக்கைக்குச் செவி சாய்ப்பார்" என்று ஆசிர்வதித்து உதி பிரசாதம் தந்தார்.

நிறைவான மனதுடன் ரத்தன்ஜி  பாபாவிடம் விடைபெற்றபோது பாபா அவரிடம் தட்சிணை கேட்டார்.  அவர் ஐந்து ரூபாய் கொடுத்தபோது, தான் ஏற்கெனவே அவரிடம் மூன்று ரூபாய் பதினாறு அணாவைப் பெற்றுக் கொண்டுவிட்டதாகவும் மீதமுள்ள தொகையை அவர் தந்தால் போதும் என்றார்.  ரத்தன்ஜிக்கு ஒன்றும் புரியாதபோதும் அவர் கேட்டவாறே அளித்து விட்டு ஷீரடியை விட்டுக் கிளம்பினார்.

ஊர் திரும்பிய ரத்தன்ஜி இந்த தட்சிணை விஷயம் புரிபடாமல் இருக்கவே தாஸ்கணு மஹராஜை சந்தித்து இது குறித்துக் கேட்டார்.

தாஸ்கணு மஹராஜ்
தாஸ்கணு மஹராஜ்

தாஸ்கணுவும் இதைப் பற்றி சற்று சிந்தித்தபோது ஒரு நிகழ்ச்சி அவர் நினைவுக்கு வந்தது.  சில நாட்களுக்கு முன்பு ரத்தன்ஜி மௌலா சாஹேப் என்கிற ஒரு முகம்மதிய முனிவரை தன் வீட்டிற்கழைத்து அவரின் விருந்து உபசரணைக்காக சிறிது பணம் செலவழித்தார்.  அந்த விருந்து செலவுக் குறிப்புகளை ரத்தன்ஜியிடம் தாஸ்கணு மஹராஜ் வாங்கிப் பார்த்தபோது சரியாக மொத்தச் செலவு மூன்று ரூபாய் பதினாறு அணா ஆகியிருந்தது.  அதற்குக் கூடவோ குறைவாகவோ இல்லாதது கண்டு இருவரும் ஆச்சரியப்பட்டுப் போயினர்.

அந்த மௌலா சாஹேப் என்னும் முனிவரோடு தான் ஒன்றியதாக இருந்ததால் தானே பாபா அந்தத் தொகையைக் கழித்து விட்டுக் கொடுக்கச் சொன்னார் என்று புரிந்துபோனது.  மகான்கள் வெவ்வேறு இடங்களில் இருந்தாலும் எல்லோரும் ஆன்ம ரீதியில் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள் என்று வியந்து போனார் ரத்தன்ஜி. தாஸ்கணுவும் அவரும் பக்தியோடும் நன்றியோடும்  பாபா இருக்கும் திக்கு நோக்கி நமஸ்கரித்தனர்.

ஞானிகள் அனைவரும் ஒருவரே என்ற உண்மையையும் எப்படி அவர்கள் ஒத்திசைவோடு செயல்படுகிறார்கள் என்பதையும் ஷீரடிக்கு எழுக்கப்பட்ட சிட்டுக் குருவியாகிய ரத்தன்ஜி வாடியா என்னும் பக்தர் மூலம் நமக்கு விளங்குகிறது.

(அருள் பெருகும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com