
ஸ்ரீசக்கரம் அல்லது ஸ்ரீயந்திரம் என்பது பிந்து எனப்படும் மையப்புள்ளியை சுற்றியுள்ள ஒன்பது முக்கோணங்கள் ஒன்றையொன்று வெட்டிக்கொண்டு இருக்கும். இந்த முக்கோணங்கள் அகிலத்தையும் மனித உடலையும் குறிக்கின்றன. இதில் உள்ள ஒன்பது முக்கோணங்கள் காரணமாக ஸ்ரீசக்கரம் நவயோனி சக்ரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த 9 முக்கோணங்களானது அளவிலும், வடிவத்திலும் வேறுபடுகின்றன. இவை ஒன்றையொன்று வெட்டிக் கொள்வதால் ஐந்து சிறிய மட்டங்களில் 43 சிறிய முக்கோணங்களை உண்டாக்குகின்றது.
நடுவில் உள்ள புள்ளி (பிந்து) அண்ட மையத்தை குறிக்கிறது. இந்த முக்கோணங்கள் 8 மற்றும் 16 இதழ்களைக் கொண்ட இரண்டு ஒருமைய வட்டங்களால் சூழப்பட்டுள்ளது. இது தாமரை வடிவத்தையும், இனப்பெருக்கத்தின் முக்கிய சக்தியையும் குறிக்கிறது. பொதுவாக, அம்மன் கோவில்களில் அம்மன் சிலைக்கு முன்பு பீடத்தில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு அபிஷேகம், அர்ச்சனை, நைவேத்யம் என எல்லாவிதமான உபசாரங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.
ஸ்ரீசக்கரம் அமைந்த சில திருத்தலங்கள்:
* 9 கட்டுகள் கொண்ட ஸ்ரீசக்கரம் தான் அம்பாள் உறையும் இடமாகும். ஸ்ரீசக்கரம் என்பது வரைபடம். மகாமேரு என்பது அதன் உருவம். ஸ்ரீசக்கரத்தை உயரமாகவும், பெரிய வடிவமாகவும் செய்தால் அது 'ஸ்ரீ மகாமேரு' என்று அழைக்கப்படுகிறது.
* காசி அனுமான் காட்டில் முத்துஸ்வாமி தீக்ஷிதர் ஆராதனை செய்த சிவலிங்கத்தின் உச்சியில் ஸ்ரீசக்கரம் பொறிக்கப்பட்டு வழிபடப்படுகிறது.
* நேபாளம் குஹ்யேஸ்வரி ஆலயத்தில் உள்ள தாமரை மொட்டின் நடுவில் ஸ்ரீ சக்கரம் அமைந்துள்ளது. இதனை அனைவரும் தொட்டு பூஜிக்கலாம். அதிலிருந்து வரும் தீர்த்தத்தை பிரசாதமாகவும் உட்கொள்ளலாம்.
* நங்கநல்லூரில் திதி நித்யா தேவிகளின் சக்கரங்களும், விக்கிரகங்களும் இரு புறங்களிலும் திகழ 16 படிகளின் மேல் மகாமேருடன் ஆட்சி புரிகிறாள் ராஜராஜேஸ்வரி அம்பாள்.
* திருவொற்றியூர் தியாகராஜர் ஆலயத்தில் அமைந்துள்ள வட்டப்பாறை அம்மனின் உக்கிரத்தை தணிக்க ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்கரம் உள்ளது.
* திருவானைக்கோவில் அகிலாண்டேஸ்வரி ஆலயத்தில் அம்மனுக்கு ஒரு காதில் ஸ்ரீசக்கர தாடங்கத்தையும், ஒரு காதில் சிவசக்ர தாடங்கத்தையும் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார்.
* காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரத்திற்கே அனைத்து பூஜைகளும் செய்யப்படுகின்றன. இதில் லலிதா சகஸ்ர நாமத்தை இயற்றிய வசின்யாதி வாக்தேவதைகள் எண்மரும் எழுந்தருளியுள்ளனர்.
* புதுக்கோட்டை புவனேஸ்வரி தேவி முன்பு உள்ள மகாமேரு சாந்தானந்த சுவாமிகளால் ஸ்தாபிக்கப்பட்டது.
* ஸ்ரீசைலம் பிரமராம்பிகை தேவியின் முன்பு ஆதிசங்கரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ சக்கரம் உள்ளது.
* கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் தேவியின் முன்பு ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீ சக்கரம் உள்ளது.
* சென்னையில் அமைந்துள்ள ஸ்ரீ காளிகாம்பாள் ஆலயம் குபேரன் வழிபட்ட தலமாகும். இங்கு ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த அர்த்தமேரு சக்கரம் உள்ளது. இந்த மேருவில் அந்தந்த மாத்ருகா அட்சரங்கள் அந்தந்த ஸ்தானத்தில் மிக அழகாக செதுக்கப்பட்டுள்ளன.
* தாம்பரம் மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் தேனுகாம்பாள் சன்னதியில் ஸ்ரீ சக்கரம் அமைந்துள்ளது.
* புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் மாரியம்மனின் முன்பு ஸ்ரீசக்கர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது சதாசிவ பிரம்மேந்திரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும்.
* திருவல்லிக்கேணியில் காம கலா காமேஸ்வரி சன்னிதியில் அழகான ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
* கும்பகோணம் மயிலாடுதுறை பகுதியில் உள்ள பாஸ்கரராஜபுரம் ஆனந்தவல்லி அம்பாள் முன் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது.
* திருச்சி மலைக்கோட்டையில் சுகந்த குந்தளாம்பாளின் சன்னதி ஸ்ரீசக்கர வடிவில் அமைந்துள்ளது.
* திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணாஸ்ரமத்தில் ஸ்ரீ சக்கரத்திற்கு தனி சன்னதி உள்ளது.