பெண்கள் ருத்ராட்சம், ஸ்படிகமணி மாலையை அணியலாமா?
ருத்ராட்சம் மற்றும் ஸ்படிக மணி மாலை இரண்டையும் ஒன்றாக அணியும்போது அவற்றின் ஆற்றல்கள் இணைந்து அதிக நன்மைகளைத் தரும். ஆனால் இவற்றை பெண்கள் மாதவிடாய் முடிந்த பிறகு அணிவது சிறப்பு.
மனைவி இல்லாத நிலையில் ஆண்கள் சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி ஆகிய சடங்குகளை செய்யலாமா?
தாராளமாக செய்து கொள்ளலாம். வீட்டிலோ, ஆலயங்களிலோ அல்லது நதிக் கரைகளிலோ செய்வது மிகவும் விசேஷமானது.
ராமரின் புதல்வர்களான லவன், குசனுக்கு கோவில் எங்குள்ளது தெரியுமா?
ராமரின் புதல்வர்களான லவன், குசனுக்கு நேபாளத்தில் உள்ள பசுபதிநாதர் ஆலயத்திற்கு அருகில் தனிக்கோவில் அமைந்துள்ளது.
முருகனுக்கு இருக்கும் விரதங்களில் சிறப்புடையது எது?
விரதங்களில் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம். ஒவ்வொரு மாதமும் ஆறாவது திதியாக சஷ்டி திதி வரும். அன்றைய தினம் உபவாசம் இருந்து முருகனை வணங்கி வழிபட குழந்தை பேறும், வாழ்வில் முன்னேற்றமும் ஏற்படும். சஷ்டியில் விரதம் இருக்க அகப்பையில் (கருப்பையில்) வரும் என்பது நம்பிக்கை.
விருப்பன் திருநாள் என்றால் என்ன?
விருப்பன் திருநாள் என்பது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாவாகும். இது சித்திரை மாதத்தில் நடைபெறும் தேரோட்ட உற்சவமாகும். இந்தத் திருவிழா 600 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்பட்டு வருகிறது. விஜயநகர பேரரசின் விருப்பன்ன உடையார் என்பவரால் 17,000 பொற்காசுகள் மற்றும் 52 கிராமங்களுடன் 1383 ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அஷ்ட லிங்கங்களின் பெயர்கள் யாவை?
இந்திரலிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் என்ற எட்டு லிங்கங்களையும் வழிபட்டு அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று அண்ணாமலையாரையும், உண்ணாமுலை அம்மனையும் வழிபட துன்பங்கள் நீங்கி வாழ்வில் வளம் பெறலாம்.
பௌர்ணமி நாளில் கிரிவல கிழமையும் அதன் பலன்களும் என்னவென்று அறிவோமா?
ஞாயிற்றுக்கிழமை அன்று வரும் பௌர்ணமி நாளில் கிரிவலம் செய்ய சிவப்பதம் கிடைக்கும். திங்கட்கிழமை உலகை ஆளும் வல்லமை உண்டாகும். செவ்வாய்க்கிழமையோ கடன் தொல்லைகள் நீங்கி, பிறவிப் பிணியில் இருந்து விடுபடலாம். புதன்கிழமை கலைகளில் சிறந்து விளங்கவும், வியாழக்கிழமை ஞானம் கிட்டவும், வெள்ளிக்கிழமை விஷ்ணு பதம் கிடைக்கவும், சனிக்கிழமைகளில் வரும் பௌர்ணமி அன்று கிரிவலம் வர நவகோள்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.
பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழாருக்கு கோவிலோ சன்னதிகளோ உண்டா?
பெரியபுராணம் இயற்றிய சேக்கிழாருக்கு குன்றத்தூரில் தனிக் கோவில் உள்ளது. அத்துடன் உலகிலேயே சேக்கிழாருக்கு இரண்டு கோயில்களில் மட்டுமே தனி சந்நிதி உள்ளது. முதலாவது சேக்கிழார் பிறந்த ஊரான குன்றத்தூரில் கந்தழீஸ்வரர் சிவன் கோவிலில் சேக்கிழாருக்கு தனி சன்னதி உள்ளது. இரண்டாவது தேவகோட்டை நகர சிவன் கோவிலில் தனி சன்னதி உள்ளது.
சிவனுக்கு அட்டவீரட்ட தலங்கள் இருப்பது போல் பைரவருக்கும் உள்ளதா?
ஆம். திருப்பத்தூர், பிள்ளையார்பட்டியை அடுத்துள்ள வைரவன்பட்டி, அழகாபுரி, பெருச்சிக் கோயில், திருமெய்ஞானபுரம், வைரவன்பட்டி, காரையூர், நெடுமரம், இலுப்பைகுடி என்ற எட்டும் அஷ்ட பைரவர் தலங்களாகும்.
அஷ்ட பைரவர்களின் பெயர்கள் யாவை?
அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீக்ஷண பைரவர் மற்றும் சம்ஹார பைரவர் என்பது அஷ்ட பைரவர்களின் பெயர்களாகும்.