
'ஸ்ரீ வித்யா உபாசனை' என்பது அம்பாளைக் குறித்து செய்யப்படும் பூஜை மற்றும் ஜபம். அம்பிகை உபாசனையின் தத்துவங்களையும், ரகசியங்களையும் தெளிவாக எடுத்துக்காட்டியவர்கள் மகாஞானிகளான பாஸ்கரராயர் மற்றும் லட்சுமீதரர் ஆகியோர். அந்த வழியில் சென்ற நூற்றாண்டின் மிகப்பெரிய ஞானியாக, ஸ்ரீவித்யா உபாசகராக உருவானவர், 'ஆர்தர் ஏவலன்' என்ற 'சர். ஜான் வுட்ராப்' என்ற ஆங்கிலேயர்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வங்காள உயர்நீதி மன்றத்தில் பிரதம நீதிபதியாக இருந்தவர். இந்துமத சாஸ்திர சம்பிரதாயங்களில் இவருக்கு ஈடுபாடு ஏற்படக் காரணமாயிருந்த ஒரு வழக்குதான் அவர் வாழ்க்கையே புரட்டிப்போட்டது.
சட்ட விரோதமான செயலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட கோவிந்த ஹரி என்ற தபஸ்வியின் வழக்கு உயர் நீதிமன்றத்தில் வுட்ராபின் விசாரணைக்கு வந்தது. வழக்கு விவரங்களை தீர படித்துப் பார்த்த நீதிபதி வுட்ராபுக்கு கோவிந்த ஹரி நிரபராதி என்று புரிந்தது. இருந்தாலும் கோவிந்த ஹரியின் தவ வலிமை பற்றி சோதித்து அறிய விரும்பினார்.
''சுவாமி, எனது குடும்பம் இங்கிலாந்தில் இருக்கிறது. கடந்த நாலைந்து மாதங்களாக அவர்களோடு எனக்குத் தொடர்பில்லை. நான் எழுதிய கடிதங்களுக்கும், இங்கிலாந்திலிருந்து எந்தவித பதிலுமில்லை. கப்பல் போக்குவரத்தும், இதர போக்குவரத்துச் சாதனங்களும் உலக யுத்தம் காரணமாகத் தடைபட்டு இருப்பதால் எனக்கு எவ்விதத் தகவலுமில்லை. அவர்களைப் பற்றி மிகவும் கவலையாக இருக்கிறது. தங்களுடைய யோக சித்தியை பயன்படுத்தித் தற்போது என் குடும்பம் இங்கிலாந்தில் எந்த நிலையில் இருக்கிறது என்று தெரிவித்தால், நாளைய தினமே உங்களை நிரபராதி என விடுதலை செய்கிறேன் என்று கூறினார் நீதிபதி வுட்ராப்.
நீதிபதி வுட்ராப்பின் வேண்டுகோளை ஏற்று தபஸ்வி அந்தச் சமயமே தம்மை ஓர் அறையில் தனித்து வைத்துப் பூட்டி விடும்படி கூறிவிட்டு, ஒரு மணி நேரத்தில் அரியதொரு லீலா வினோதத்தை செய்து வுட்ராப் என்ற அந்த நீதிபதியை பிரமிக்கச் செய்தார்.
யோக மாயையைக் கொண்டு அவர் பார்த்துக் கூறிய விவரங்கள் அனைத்தும் உண்மையென்று அடுத்து ஒரு வார காலத்தில் வந்த அவர் குடும்பத்தாரின் கடிதம் அறிவித்தது.
மெய்சிலிர்த்துப்போன நீதிபதி வுட்ராப், கடிதத்தைப் படித்தார். அதில், 'யுத்தம் காரணமாய் பல துன்பங்களை அனுபவித்து வந்த நானும் என் தாயாரும் தற்சமயம் செளக்கியமாக இருக்கிறோம். நம் வீடு தீக்கிரையாகி விட்டது. பல நாட்கள் நாங்கள் தங்குவதற்கு இடமின்றித் தவித்தோம். இப்போது வேறு இடத்தில் வசிக்கிறோம். தாங்கள் அனுப்பிய 'இந்திய யோகி' நேற்று முன்தினம் எங்கள் புதிய இல்லத்தில் எங்களைக் கண்டு உரையாடி தங்களது க்ஷேமத்தையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து எங்களுக்கு ஆசிகள் கூறிவிட்டு விடைபெற்றுச் சென்றார். அவருக்கும் உங்களுக்கும் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்' என்று நீதிபதியின் அன்பு மகள் கடிதம் அனுப்பியிருந்தாள்.
ஆச்சர்யத்துக்கு உள்ளான நீதிபதி வுட்ராப் மறுநாளே தபஸ்வியை விடுதலை செய்தார். பின்னர் தன்னை இந்துமத வாழ்வில் ஈடுபடுத்தி, சம்ஸ்கிருத மொழியைக் கற்றுக்கொண்டார். ஆதிசங்கரர் அருளிய 'சாக்தம்' என்ற தேவியின் உபாசனாக் காண்டத்தைக் கற்றுத் தேர்ந்தார். அவர் எழுதிய, 'சர்பென்ட் பவர்' 'தந்தர் ராஜ தந்த்ரம்', 'மகா நிர்வாண தந்த்ரம்' போன்ற நூல்கள் நமக்கு அம்பிகை உபாசனை குறித்த வழிபாட்டுக்கு மிகவும் பேருதவியாக விளங்கி வருகின்றன. இன்றளவும் அவரது நூல்கள் பலராலும் போற்றப்படுகின்றன.
- முத்து. இரத்தினம்,