ஆன்மிகக் கதை - அடியாரை வணங்கிய அப்பூதியடிகள்!

அடியாரை வணங்கிய அப்பூதியடிகள்...
அடியாரை வணங்கிய அப்பூதியடிகள்...saisundaram.org

ப்பூதியடிகள் சோழநாட்டின் திங்களூர் எனும் ஊரில் பிறந்தவர். திருநாவுக்கரசரின் சிவத்தொண்டினைப் பற்றி கேள்விப்பட்டு அவரை மிகவும் மதித்து வந்தவர். அப்பூதியடிகள் தனக்கு பிறந்த பிள்ளைகள், தனது வீட்டு உயிரினங்கள் அனைத்திற்கும் திருநாவுக்கரசரின் திருநாமத்தையே சூட்டினார். திருநாவுக்கரசர் பெயரால் மக்களுக்கு அன்னம் அளித்தல், சத்திரம் அமைத்தல், நீர்ப்பந்தல் அமைத்து தாகம் தீர்த்தல் போன்ற பணிகளைச் செய்துவந்தார். இந்த நற்தொண்டினை அறிந்த திருநாவுக்கரர் அப்பூதியடிகளைக் காணும் பொருட்டு அவரது இல்லத்திற்கு வருகை தந்தார். ஆனால், அவர்தான் திருநாவுக்கரசர் என்பது அப்பூதியடிகளாருக்குத் தெரியாது.

திருநாவுக்கரசர், அப்பூதியடிகளை நோக்கி “ஏன் நீங்கள் உங்கள் பெயரில் தர்மச் செயல்களைச் செய்யவில்லை? திருநாவுக்கரசரின் பெயரில் செய்கின்றீர்கள்?” என்று கேட்டார்.

அப்பூதியடிகள் திருநாவுக்கரசரை நோக்கி “சமண சமயத்தில் பெரும் துறவியாய் இருந்தவர், சிவனருளால் அதனைவிட்டு சைவ சமயத்தை அடைந்து தொண்டுகள் புரிந்துவருகிறார். இறைவனின் மீது அன்புகொள்வதைக் காட்டிலும், இறைவனுடைய அடியார்கள் மீது அன்புகொள்ளுதல் சிறப்பானது” என்று கூறினார். இதனைக் கேட்ட திருநாவுக்கரசர் தன்னை வெளிப்படுத்திக்கொண்டார்.

தன்னுடைய இல்லத்திற்கு திருநாவுக்கரசரே வந்திருப்பதை அறிந்த அப்பூதியடிகள் மகிழ்ந்தார். உணவு உண்ணுமாறு வேண்டினார். திருநாவுக்கரசருக்கு பரிமாறும் பொருட்டு தனது மகனை வாழை இலையை அறுக்கச் செல்லுமாறு கூறினார். அதன்படி சென்ற அப்பூதியடிகளின் மகன் பாம்பு தீண்டி இறந்தான். திருநாவுக்கரசர் வந்திருக்கும்போது மகன் இறந்துபோனதால், அது திருநாவுக்கரசருக்கு தெரியவந்தால் உணவு உண்ணத் தடையாகும்  என்று எண்ணி அப்பூதியடிகளும், அவரது மனைவியும் துயரத்தினை மறைத்து உணவு பரிமாறினர். ஆனால், திருநாவுக்கரர் தன்னுடன் அப்பூதியடிகளின் மகனையும் உணவருந்த அழைத்து வருமாறு கூறினார். என்ன செய்வதென்று தெரியாத அப்பூதியடிகள் தன்னுடைய மகன் பாம்பு தீண்டி இறந்ததை தெரிவித்தார். திருநாவுக்கரசர் பெருமான் உடனே இறந்த பாலகனை எடுத்துக்கொண்டு திருக்கோயிலுக்கு வருமாறு கூறிவிட்டு கோயிலுக்குப் புறப்பட்டார். அப்பூதியடிகளும், அவரது மனைவியும்  பாலகனைத் தூக்கிக்கொண்டு கோயிலுக்குச் சென்றனர். இச்செய்தியைக் கேட்ட ஊர்மக்கள் கோயிலின் முன் திரண்‌டனர். திங்களூர் பெருமானை அப்பரடிகள் மெய்மறந்து உருகிப் பாடிக்கொண்டிருந்தார். திருநாவுக்கரசரின் பக்தி பாமாலையினால்  சிவனின் அருள் எழுந்தது. அப்பூதியடிகள் மகனார் தூங்கி எழுபவன்போல் எழுந்தான். அப்பரடிகளின் காலில் விழுந்து வணங்கினான். அப்பரடிகளின் மகிமையைக் கண்டு அனைவரும் வியந்து போற்றினர். அவரது பக்தியையும், அருளையும், அன்பையும் கண்டு தலைவணங்கி நின்றனர்.

இதையும் படியுங்கள்:
நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க இதை செய்தாலே போதுமே!
அடியாரை வணங்கிய அப்பூதியடிகள்...

ஆயினும் அப்பூதியடிகளும், அவரது மனைவியாரும் அப்பர் பெருமானால் உணவருந்த முடியவில்லையே என்று வருந்தினர்.  இதனை அறிந்த திருநாவுக்கரசர் அப்பூதியடிகளின் இல்லத்திற்கு சென்று உணவருந்தி சில காலம் அப்பூதி அடிகளின் இல்லத்தில் தங்கி இருந்து பின்னர் திருப்பழனம் சென்றார்.

சைவ சமயத்தில் சிவபெருமானும், அடியாரும் ஒருவரே என்பதை விளக்க அப்பூதி அடிகள் வரலாறு கூறப்படுகிறது. அப்பூதி அடிகள் திருநாவுக்கரசர் எனும் சைவ அடியாரை வணங்கியே வீடுபேரு அடைந்தார் என்று எடுத்துரைக்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com