ஆன்மிகக் கதை: பூதனை

ஆன்மிகக் கதை: பூதனை

ளமை, அழகு - இவற்றைக் குறித்த பெருமிதம் பெரிய ஆபத்தைத் தரும். அதற்காகத்தான், ‘அவை நிலையற்றது’ என்று வலியுறுத்தினார்கள் பெரியோர்கள். அதைத்தான், ‘ரிஷி பத்தினியாக ஏற்றம் பெற்றிருக்க வேண்டிய ஒரு பெண், சாபம் பெற்று ராட்சசியாகப் பிறந்தாள்’ என்கிற உருவகமாகச் சொல்கிறது இந்தக் கதை.

சரஸ்வதி நதி தீரத்தில் கக்ஷீவான் என்ற இளம் துறவி வாழ்ந்தார். அவர் பாடம் போதிக்கும் விதமும், நேர்மையான நடத்தையும், பூஜா முறைகளும் அனைவரையும் ஆகர்ஷித்தன. பலர் அவரிடம் விளக்கம் கேட்க வந்தனர். அப்படி வந்தவர்களில் ஒருவர் காலபீரு முனிவர். அவர் தாயில்லாத தன் மகளையும் கூடவே அழைத்து வந்திருந்தார்.

காலபீருவின் புதல்வி சாருமதி பேரழகியாயிருந்தாள். அவளைக் கண்டு கக்ஷீவானின் சித்தம் சலனமுற்றது. தனக்கு இவளை மணம் செய்து கொடுக்குமாறு காலபீருவிடம் வேண்டினார்.

“ஐந்து வயதில் பெற்றோரை இழந்த நீங்கள் ஆசிரமவாசிகளால் வளர்க்கப்பட்டவர். பிரம்மச்சரியத்தைக் கடுமையாய் கடைபிடித்தவர். ஒரே நாளில் இல்லறத்துள் புகத் தீர்மானித்துவிட்டீர். அதேபோல் ஏதோ ஒரு காரணத்தால் துறவறம் புகமாட்டீர் என்பது என்ன நிச்சயம்? அதோடு வேறு பெண்மீது மோகம் கொண்டு என் புதல்வியைக் கைவிடக் கூடாது. இதற்கு ஒப்புக் கொண்டால் எனக்கு சம்மதம்” என்றார் காலபீரு.

கக்ஷீவான் இதற்கு ஒப்புக்கொள்ள, திருமணம் சிறப்பாக நடந்தது. சில தினங்களில் காலபீரு தீர்த்த யாத்திரை சென்று விட்டார்.

கக்ஷீவான் - சருமதி மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். கக்ஷீவானை வடக்கத்திய ராஜா ஒருவர் அஸ்வமேத யாகம் செய்ய அழைத்தார். அழகிய மனைவியைப் புது இடத்துக்கு அழைத்துப் போனால் பாதுகாப்பு இராது என்று மற்ற ஆசிரமவாசிகள் எச்சரிக்க, அவர்கள் பாதுகாப்பில் விட்டுச் சென்றார் கக்ஷீவான்.

சாருமதியும் நேர்மையாகவே வாழ்ந்து வந்தாள். சாருமதியிடம் மோகம் கொண்ட ஒருவனும் அந்த இடத்தில் இருந்தான். அவளை அடைய நரிபோல சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

பூஜைக்கு மலர் பறிக்கும்போது அவள் பின்னே சென்று, “செளந்தர்யவதியே! உனக்கு ஈடாக எந்த அப்சரஸை சொல்ல முடியும்? சன்யாசிக்கு உன் அருமை தெரியவில்லை! தாடியை வளர்த்துக் கொண்டு தியானத்தில் கழிக்கிறான்!” என்று அவளைப் பலவாறு புகழ்ந்தான்.

ஆரம்பத்தில் இந்தப் பேச்சுக்களை சாரு புறக்கணித்தாள். ஆனால், அவன் அவள் அழகைப் புகழப் புகழ அவளுக்குப் பெருமையாய் இருந்தது. முதலில் அதை ரசித்தவள், பின் அவனை ரசித்தாள். இளமையும், தனிமையும் அவளை அவனோடு சேர வைத்தது.

இதையும் படியுங்கள்:
சிறுநீரகங்களை சீராக செயலாற்ற வைக்கும் உணவுகள்!
ஆன்மிகக் கதை: பூதனை

கக்ஷீவான் யாகம் முடித்து, கங்கையில் நீராடி ஆசிரமம் வந்தார். சாருமதியின் கண்களில் இருந்த மமதையைக் கண்டார். நடந்ததை ஞான திருஷ்டியில் பார்த்தார்.

“ஒழுக்கம் தவறிய நீ ராட்சசியாய் பிறந்து உழல்வாயாக!” என சபித்துவிட்டு ஷேத்திராடனம் சென்றுவிட்டார்.

கணவர் கோபப்படி பூதனையாய்ப் பிறந்த சாருமதி கம்சன் ஏவ, கண்ணனுக்குப் பால் கொடுக்க வந்தாள். ஸ்ரீகிருஷ்ணர்  அவள் பாபத்தையும் உறிஞ்சி அவளுக்கு மோட்சமளித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com