
குருவாயூரில் அப்போது திருவிழாக்காலம். கண்ணன் உத்ஸவ மூர்த்தியாகப் புறப்பட, பக்தர்களான நாராயண பட்டத்ரி நம்பூதிரியும், பூந்தானமும் அங்கே நின்று கொண்டிருந்தனர். பட்டத்ரியோ மகாமேதாவி. பூந்தானமோ படிப்பறிவற்றவர். பட்டத்ரி மனதில் எப்போதும் பூந்தானம் படிப்பறிவற்றவர் என்ற இளக்காரம் உண்டு. பட்டத்ரியின் செருக்கை தட்டிவைக்க கண்ணன் திருவுளம் கொண்டான். உத்ஸவ மூர்த்தி பல்லக்கு வெளியே வர, எங்கோ ஏதோ இடித்தது. யாருக்கும் எதுவும் தெரியவில்லை.
பூந்தானமோ திடீரென்று ஒரு வாக்கியத்தைச் சொன்னார். அதைக்கேட்டு எல்லோரும் திகைத்தார்கள். ஆனால், பட்டத்ரி மட்டும் ஏளனப் புன்னகையோடு பூந்தானத்தைப் பார்த்து சிரித்தார். எதையும் கவனியாமல் பூந்தானம் மீண்டும் அதே வாக்கியத்தைச் சொன்னார்.
மூலவர் விக்கிரகத்திற்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்த அர்ச்சகர் கண்களில் நீர் வழிய, உத்ஸவ விக்கிரகத்தை நோக்கி வந்து, தான் கண்ட காட்சியை விவரித்தார்.