ஆன்மிகக் கதை - புனித பந்தம்!

ஓவியம்; சேகர்
ஓவியம்; சேகர்

-ஆர். பொன்னம்மாள்

த்தாலகர், கஸ்யப ரிஷியின் புதல்வி மந்தஸ்மிதாவை மணந்து இல்லறம் நடத்தினார். அவர்களின் ஒரே புதல்வன் ஸ்வேதகேது. அவன் பிறந்த பின்னர் உத்தாலகருக்கு இல்லறத்தில் நாட்டமில்லை. தனித்திருந்தார். மந்தஸ்மிதா இளமைத் தவிப்பில் மெலிந்து நோவுற்றாள். இதனால் மூலிகை மருத்துவத்தில் தேர்ந்த தம் நண்பன் சோமகருக்கு செய்தி அனுப்பினார் உத்தாலகர். சோமகர், சுந்தர வடிவினர். அவர் மந்தஸ்மிதாவைப் பரிசோதித்து, 'புனர்நவா' என்ற பச்சிலைக் கொடியைப் பறித்து சாறெடுத்து நெய் சேர்த்துக் கொடுத்தார். மந்தஸ்மிதா உற்சாகத்துடன் நடமாடினாள். சோமகர் விடைபெற்றார்.

பத்து ஆண்டுகள் சென்றன. ஸ்வேதகேது 15 வயது இளைஞன் ஆனான். வேத, சாஸ்திரங்களைக் கற்றறிந்தான். இந்நேரம், அங்கே வந்த சோமகரிடம், ''ஏன் வாட்ட முற்றிருக்கிறாய் சோமகா?" எனப் பரிவுடன் கேட்டார் உத்தாலகர்.

''ரைவத ரிஷியின் மகள் வித்யுன்மாலாவை விவாகம் செய்தேன். ஆனால், கந்தர்வர்கள் அவளைக் கவர்ந்து சென்றனர். 'மனைவியைக் காக்க திராணி யில்லாதவன்' எனக் கூறி எவரும் எனக்கு பெண் கொடுக்க முன் வரவில்லை. புத்திரன் இன்மையால், 'புத்' என்ற நரகத்தில் உழலப்போகிறேன். என்னோடு சோமக வம்சமே நசிந்துவிடும். பித்ருக்கள் என்னை சபிப்பார்கள். அதை நினைத்தால் பசி, தூக்கம் எதுவும் வருவதில்லை" என்றார் சோமகர் சோகத்துடன்!

"அப்படியா? கற்புக்கரசி மதயந்தி, கணவன் உத்தரவுப்படி கர்க ரிஷி மூலம் சந்ததி விருத்தி செய்தாள். குந்தி தேவி, பாண்டவர்களைப் பெறவில்லையா? ஆரிஷ முறையில் அது ஒன்றும் தவறில்லையே? சந்ததி உருவான பின், என் மனைவி மந்தஸ்மிதாவோடு பத்தாண்டுகளாக தாம்பத்ய உறவு கிடையாது. அவள் இளமையை நான் வீணடித்து விட்டேன். நீ அவள் நோயைக் குணமாக்கி மறு உயிர் கொடுத்தவன். அவளை உனக்கு தத்தம் செய்கிறேன். நீ அவள் மூலம் புத்ர பாக்கியத்தை ஏற்படுத்திக்கொள்" என்றார் உத்தாலகர்.

அப்போது, ஆசிரமத்துக்குள் நுழைந்த மந்தஸ்மிதாவிடம், "உன் கணவர் உத்தாலகரின் இந்த ஏற்பாட்டில் உனக்கு சம்மதமா? நான் வைத்தியம் செய்ததற்குப் பிராயச்சித்தம் போலாகிவிட்டதே" எனத் தயங்கினார் ரிஷி சோமகர். அதற்கு மந்தஸ்மிதா, "என் புதல்வன் ஸ்வேதகேது, 'எனைத் தியாகம் செய்துவிட்டு நீங்கள் செல்லலாம்' என்கிறான். அதுதான் என் மனத்தைப் பிழிகிறது" என்று வருந்தினாள் மந்தஸ்மிதா.

பின் மனம் தேறிய அவள் கையைப் பிடித்தபடி, சோமகர் நடந்து சென்றார். ஸ்வேதகேது குறுக்கே மறித்து, "அதிதியே, என் அன்னையின் கையை விடு. இது குலத்துக்கே களங்கம். தாயே, இது என் மீதாணை" என நெருப்பாய்க் கொதித்தான். அங்கே விரைந்து வந்த உத்தாலகர், "எனக்கு சொந்தமானவளை எவருக்கும் தானம் செய்ய எனக்கு உரிமை உண்டு" என்று மகனை விலக்க, ஸ்வேதகேது அக்னி ஹோத்ர குண்டத்தை வலம் வந்து, 'விஸ்வானி அக்னேநய ஸுப்தாரயே! அஸ்மான், தேவவுயுனானி வித்வான்' என்ற மந்திரத்தைக் கூறி அங்கிருந்து சென்றான்.

இதையும் படியுங்கள்:
போட்டோக்ஸ் ஊசி போட்டுக்கப் போறீங்களா? அப்போ கட்டாயம் இதைத் தெரிஞ்சிக்கணும்!
ஓவியம்; சேகர்

'அக்னி தேவா! எவரையும் தவறான பாதைக்குச் செல்லாமல் நல்வழிக்குத் திருப்பு. உன்னை நமஸ்கரிக்கிறேன்' என, அக்னியை முன்னிட்டுச் சொன்னதால், மந்தஸ்மிதாவின் சக்தியை இழுத்துக் கொண்டான் அக்னிதேவன். மந்தஸ்மிதா சுருண்டு விழுந்தாள். சோமகர் நெற்றியில் அறைந்தபடி வெளியேறினார்.

சீடன் சிரிம்பிடனிடம் ஸ்வேதகேதுவைத் தேடி அழைத்து வருமாறு அனுப்பினார் உத்தாலகர். நைமிசா ரண்யத்தில் கஸ்யபர் தலைமையில் வருண யாகம் நடப்பதாகவும் அங்கே ஸ்வேதகேது இருப்பதாகவும் சொன்ன சிரிம்பிடன், உத்தாலகர் தம்பதிக்கான யாக அழைப்பு ஓலையை நீட்டினான். வேள்விக்கு வந்த உத்தாலகர், மகன் அக்னி முன் முழங்கியதைக் கேட்டு தலை குனிந்தார். "ரிஷி மரபில் ஆரிஷ முறையைத் திருத்த வேண்டும்" என்ற ஸ்வேதகேதுவின் கோரிக்கையை, கஸ்யபர், 'ததாஸ்து' என அங்கீகரித்தார். "தத்வமஸி,  ஸ்வேதகேதோ" என ரிஷிகள் ஆசிர்வதித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com