ஆன்மிகக் கதை: செருத்துணையால் மூக்கறுபட்ட பட்டத்தரசி!

ஆன்மிகக் கதை: செருத்துணையால் மூக்கறுபட்ட பட்டத்தரசி!
m.facebook.com

சோழ நாட்டின் ஒரு பகுதியாக விளங்கிய மருகல் நாட்டின் தஞ்சாவூரில் பிறந்தவர் செருத்துணையார். செரு என்பது போர் என்று பொருள் பெறும். மன்னர்களுக்கு போரில் துணை செய்யும் படையைக் கொண்டவர் என்பதால் இப்பெயரினைப் பெற்றார். இயல்பிலேயே சிவனிடமும் அவர் தம் அடியவர்களிடமும் பேரன்பு கொண்டவராக விளங்கினார். சிவாலயங்களுக்கு திருப்பணிகள் செய்வதை தமது கடமையாகக்கொண்டு செயல்பட்டார். திருக்கோயில்களில் வழிபாடுகள் நடைபெற தன்னால் இயன்றவரை உதவி செய்து வந்தார். சிவனடியார்களை காப்பதை துணிவோடு செய்தார். சிவனடியார்களுக்கு இடையூறு யாரேனும் செய்வாராயின் சிறிதும் அச்சமின்றி அதனைக்  கண்டித்து, சில நேரங்களில் தண்டிக்கவும் செய்தார்.

ஒருசமயம் செருத்துணையார் திருவாரூர் சென்று, அங்கு தங்கியிருந்து திருக்கோயிலுக்கு திருத்தொண்டுகள் மற்றும்  வழிபாட்டினை செய்து கொண்டிருந்தார். அச்சமயம்  பல்லவ அரசர் கழற்சிங்க நாயனார் தம்முடைய பட்டத்தரசியுடன் திருவாரூர் திருக்கோயிலுக்கு வழிபாடு செய்ய வருகை  புரிந்திருந்தார். திருவாரூர் திருக்கோயிலின் மலர் மண்டபத்தில் சிவபெருமானுக்கு மாலைகள் தொடுத்துக்கொண்டிருக்கும் பணியினை சிலர் செய்து கொண்டிருந்தனர். அப்போது அழகிய நறுமணம் கொண்ட மலர் ஒன்று கீழே விழுந்தது. அந்நேரம் அங்கு பல்லவ பட்டத்தரசி வந்தார்.  அம்மலரின் அழகு மற்றும் மணத்தால் கவரப்பட்டு மலரினை எடுத்து முகர்ந்தார்.

மலர் மண்டபத்தில் இருந்த செருத்துணையார் அரசியாரின் செயலைக் கண்டு கடும் சினம் கொண்டார். சிவனின் வழிபாட்டுக்கான மலரினை முகர்தல் என்பது மிகவும் பாவமானது. இச்செயல் சிறியதாயினும் குற்றம் உடையது. இதனை இப்போதே கண்டிக்க வேண்டும் என எண்ணினார். இல்லையேல்  இது வளர்ந்து பெரிய தவறாக மாறும்  என்று  கூறி  அங்கிருந்த தமது வாளினால் தவறு செய்த பல்லவ அரசியின் மூக்கினை வெட்டினார்.  வலியால் பல்லவ அரசி கதறினாள்.

இதையும் படியுங்கள்:
சிறந்த மனிதராக மாறுவதற்கான வழிகள்!
ஆன்மிகக் கதை: செருத்துணையால் மூக்கறுபட்ட பட்டத்தரசி!

அரசியின் கூக்குரலைக் கேட்டு அவ்விடத்திற்கு வந்த அரசர் கழற்சிங்க நாயனார் நடந்ததை அறியாது திகைத்தார்.  ‘சிவபெருமானின்  பூசைக்கான மலரினை முகர்ந்து குற்றம் செய்த இப்பெண்ணின் மூக்கினை நானே வெட்டினேன்’ என்று துணிவுடன் கூறினார் செருத்துணை நாயனார். இறைவனுக்காக செருத்துணையார்  செய்த செயலை கண்டு அரசன் வியந்தான். பின்னர் ‘மலரை எடுத்த கைதான் முதல் தவறு செய்தது. அதை அல்லவா முதலில் வெட்டியிருக்க  வேண்டும்’ எனக்கூறி அரசியின் கையினை தம் வாளினால் துண்டித்தார்.

மனைவியானாலும், அரசியானாலும் இறைவன்மீது கொண்ட பக்தியின் முன்பு பெரிதல்ல என்பது காட்டப்படுகிறது. இவர்களின் பக்தி நலனைக் கண்ட சிவபெருமான்  அரசன், அரசி மற்றும் அடியார்க்கு அருள்புரிந்து தமது பாதங்களை அடையும் பேறு அளித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com