ஆன்மிகக் கதை - நின்ற நாராயணன்!

ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி, ஜாம்பவதி ஆகிய நான்கு தேவியருடன் பெருமான்...
ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி, ஜாம்பவதி ஆகிய நான்கு தேவியருடன் பெருமான்...

ஸ்ரீமன் நாராயணனை தனித்தோ, பிராட்டியுடனோ மூலஸ்தானத்தில் தரிசித் திருப்போம். ஆனால், ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி, ஜாம்பவதி ஆகிய நான்கு தேவியருடன் பெருமான் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் திருத்தலம் திருத்தங்கல். இது, 1,300 ஆண்டுகள் பழைமையான ஒரு குடவரைக் கோயிலாகும். ஆலமரத்தைத் தலவிருட்சமாகக் கொண்டது.

பெருமாள் இங்கு கோயில் கொண்டது எவ்வாறு? பெருமாள் பாற்கடலில் யோக நித்திரையில் இருந்த சமயம் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி மூவருக்குள்ளும் ‘தம்மில் யார் பெரியவர்?’ என்ற சர்ச்சை ஏற்பட்டது. கோபித்த ஸ்ரீதேவி ‘தங்கால்மலை’ என்ற இத்திருத்தங்கல் மலையில் செங்கமல நாச்சியார் என்ற திருநாமத்துடன் தவம் இருந்தாள். தேவியின் தவத்தில் மகிழ்ந்த இறைவன் கருடன் மீது ஸ்ரீதேவிக்கு காட்சி தந்தார்.

பெருமான், “நீயே எனக்கு என்றும் பிரியமானவள். உன்னால்தான் நான் ஸ்ரீயப்பதியாக விளங்குகிறேன். நீயே பெரியபிராட்டி என்ற பெயருடன் விளங்குவாய்” என்று கூற, தேவியும் மனமகிழ்ந்து “தாங்கள் இம்மலையிலேயே என்னுடன் எப்போதும் எழுந்தருள வேண்டும்” என வேண்ட, நாரணரும், “நீ தவம் செய்த இவ்விடம் இனி ‘ஸ்ரீக்ஷேத்ரம்’ என விளங்கும்” எனக்கூறி, அங்கேயே எழுந்தருளினார்.

பகவானின் பின்னால் வந்த பூதேவியும், நீளா தேவியும் மகாலக்ஷ்மியிடம் மன்னிப்பு வேண்ட, தேவியும் அவர்களை ஏற்றுக் கொண்டாள். திருவாகிய லக்ஷ்மிதேவி இங்கு தங்கியதால் இத்தலம் திருத்தங்கல் என்றாயிற்று. கிருஷ்ணாவதார காலத்தில், ஜாம்பவதியை அவன் மணந்து கொண்டதும் இங்குதான் என்கிறது தலபுராணம். ஜாம்பவதி பெருமானுடன் இணைந்து காட்சி தரும் ஸ்தலம் இது மட்டுமே.

ஒருமுறை ஆதிசேஷனுக்கும், ஆலமரத்துக்கும் இடையே யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. இருவரும் பிரம்மாவிடம் சென்று கேட்க அவர், “ஆதிசேஷன் மீதுதான் பரமன் எப்பொழுதும் பள்ளி கொள்கிறார். யுகம் அழியும்போது மட்டுமே ஆலிலையில் பள்ளிகொள்வதால் ஆதிசேஷனே பெரியவர்” என்று சொல்ல, வருத்தமடைந்த ஆலமரம் கடும் தவம் செய்தது. மகிழ்ந்த விஷ்ணு ஆலமரத்தின் விருப்பத்தைக் கேட்க, “கீழே உதிரும் என் இலைகளின் மேல் தாங்கள் பள்ளிகொள்ள வேண்டும்” என வேண்டியது. அதற்கு பகவான், “ஸ்ரீதேவி தவம் செய்யும் திருத்தங்கலில் நீ மலையாக இருப்பாய். நான் திருமகளை மணம் செய்ய வரும்போது அங்கு உன்னடியில் நின்றும், பள்ளி கொண்டும் அருள்வேன்” என்றார். ஆலமரம் இங்கு மலை வடிவில் தங்கியதால், ‘தாங்கும் ஆல மலை’ என்ற பெயர் நாளடைவில் ‘தங்காலமலை’ என்றாயிற்றாம்.

ஸ்ரீமன் நாராயணன்
ஸ்ரீமன் நாராயணன்

இங்குள்ள பாபநாச தீர்த்தம் மிக விசேஷமானது.இந்தத் தீர்த்தத்தில் நீராடினால் பாபங்கள் நீங்கும். இக்குளக்கரையில் செய்யும் தேவ காரியங்கள் ஒரு கோடியாகப் பலன் பெறும். இதில் நீராடுவோர் முக்தி அடைவர்” என்று பகவானே அருளினார். அர்ச்சுனா நதியும் இவ்வாலய தீர்த்தமாகப் போற்றப்படுகிறது.

ஆலயத்துக்கு சில படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய வண்ணப் பதுமைகள் காட்சி தரும் முதல் கட்டில் அர்த்த மண்ட பத்தில் பெருமாள் போக சயனராக பள்ளிகொண்ட பெருமாளாக தேவியருடன் காட்சி தருகிறார்.

இரண்டாம் கட்டில் நான்கு கால் மண்டபம். வாகன அறைகள் உள்ளன. தாயார் செங்கமல நாச்சி யாரின் சன்னிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. நின்ற திருக்கோலத்தில், வலக்கையில் அபய முத்திரையும், இடக்கையைத் தொங்க விட்டும், நின்ற நிலையில் தரிசனம் தருவது அரியகாட்சி. திருமணம், பிள்ளைப்பேறு, வேலை என்று எதை பிரார்த்தித்தும் ஒன்பது கஜம் நூற்புடவை வாங்கிச் சாத்துவதாக நேர்ந்துக் கொண்டால் அவை விரைவில் நிறைவேறுமாம். இந்த நாச்சியாருக்கு தினமும் திருமஞ்சனம் உண்டு. தாயாருக்கு ஆராதனம் தொடங்கிய பின்பே பெருமாளுக்கு தொடங்கும்.

துவஜஸ்தம்பம் தாண்டி மகாமண்டபத்தில் பெருமாள் சன்னிதிக்கு எதிரில் கருட பகவான் நான்கு கரங்களுடன் நின்ற நிலையில் காட்சி தருகிறார். கீழிரு கரங்கள் கூப்பியும்,மேலிரு கைகளில் அமுத கலசமும், சர்ப்பமும் வைத்துக் கொண்டிருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
ஸ்மார்ட் போன்கள் இனி தேவையில்லை.. வந்துவிட்டது Rabbit தொழில்நுட்பம்! 
ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி, ஜாம்பவதி ஆகிய நான்கு தேவியருடன் பெருமான்...

சோமச்சந்திர விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கிக் காட்சி தரும் கருவறையில் பதினொரு திருவுருவங்களுடன் நின்ற கோலத்தில் சுதையாலான வாசுதேவப் பெருமாள் காட்சி தருகிறார். மூலவரின் வலப்பக்கம் ஸ்ரீதேவி, பூதேவி, மார்க்கண்டேய ரிஷி, கருடன், அருணன் ஆகியோர்; இடப்பக்கம் நீளாதேவி, ஜாம்பவதி, அநிருத்தன், உஷை மற்றும் பிருகு மகரிஷி!  நடுவே வலக்கரத்தால் தன் திருவடிகளைக் காட்டிக் கொண்டும், இடக்கரத்தை இடுப்பில் வைத்துக் கொண்டும் தரிசனமளிக்கிறார் பெருமாள். உற்சவர் திருத்தங்கலப்பன் எனப்படுகிறார். பெருமாளுக்கு விசேஷ நாட்களில் தைலக் காப்பு நடைபெறும். பிராகாரச் சுற்றில் ஆண்டாளும், நர்த்தனக் கண்ணனும் எழுந்தருளியுள்ளனர்.

அனுமனும், சக்கரத்தாழ்வாரும் தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். இத்தலம் பூதத்தாழ்வாராலும், திருமங்கை ஆழ்வாராலும் மங்களாசாசனம் செய்யப் பட்டது. சித்ரா பௌர்ணமி, வைகாசி வசந்தோத் சவம், ஆனி பிரம்மோத்சவம், ஆவணி பவித்ரோத்     சவம், புரட்டாசி கருட சேவை, பங்குனி திருக்கல்யாண உத்சவம் ஆகியவை விசேஷமானவை. தாம் விரும்பும் வண்ணம் வாழ்க்கைத் துணை அமையவும், தாம்பத்திய வாழ்க்கை இனிமையாய் விளங்கவும் இந்த வாசுதேவரை வழிபட்டால் நலமுண்டு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com