ஆன்மிகக் கதை: காணாமல் போன பதக்க சங்கிலி!

ஓவியம்; சேகர்
ஓவியம்; சேகர்

-ஆர். பொன்னம்மாள்

பீகாரிலே கௌரிபுரம் எனும் க்ஷேத்ரத்தில் கோயில் கொண்டிருக்கிறாள் சியாமளா தேவி. சோமேசர் என்கிற அந்தணருக்கு நெடுநாள் குழந்தை யில்லாமல் இருந்து, அம்பாளின் அருளால் ஒரு பிள்ளை பிறந்தான். அவனுக்குச் சியாமளன் என்று பெயர் சூட்டினார் சோமேசர். சியாமளருக்குப் பதினெட்டு வயதானபோது, பெற்றோர் தீர்த்த யாத்திரை புறப்பட்டனர். சியாமளர் உள்ளூர் அம்பாளை விட்டு வர மறுத்துவிட்டார். பகலில் வீட்டு வேலையும் வேதாந்த சர்ச்சையும் இருந்ததால் இரவில் தேவியை உபாசனை செய்தார் சியாமளர்.

அந்நாட்டு சேனாதிபதி திடீரென்று காலமானதால் அந்த இடத்தைப் பிடிக்க பலத்த போட்டி இருந்தது. அதிகன் என்ற வீரன், சியாமளா தேவியிடம், தனக்கு அப்பதவி கிடைத்தால் பத்து பவுன் நவரத்தின சங்கிலி சாத்துவதாக வேண்டிக்கொண்டான். போட்டிகளில் வெற்றி பெற்ற அதிகனுக்கே தளபதி பதவி கிடைத்தது. ஒரு பெளர்ணமியன்று அபிஷேக, ஆராதனை நடத்தி, பட்டுப் புடைவை சாத்தி, நவரத்தின சங்கிலியை தேவிக்கு அணிவித்தான். அன்றிரவே, யாராவது சங்கிலியைக் களவாடி விட்டால் என்ன செய்வது?' என்று அவன் கவலைப்பட, "கோயிலுக்குப் போய் பார்த்துட்டு வந்துடுங்க" என்றாள் அதிகனின் மனைவி ஆரணி.

கோயிலுக்கு வந்தபோது அங்கே சியாமளர் ஜபம் செய்துகொண்டிருக்கிறார். அம்பாள் கழுத்திலே சங்கிலியை காணவில்லை! சியாமளரிடம் கேட்க, "நான் வந்தபோதே அம்பாள் கழுத்தில் சங்கிலி இல்லையே” என்றார். அர்ச்சகரை வரவழைத்து விசாரித்தபோது 'தெரியாது' என்று அவர் கூற, 'பளார்' என்று சியாமளர் கன்னத்தில் அறைந்த அதிகன், அவருக்குத் தகுந்த தண்டனை பெற்றுத் தருவதென்று தீர்மானித்து, தனது மாளிகையில் ஒரு அறையில் அவரைப் பூட்டிவிட்டு தானும் உறங்கச் சென்றான். அதிகன் தூங்கியதும், அதிகனின் வடிவிலே வந்த அம்பாள், கதவைத் திறந்து சியாமளரின் கை, கால் கட்டுகளை அவிழ்த்து, "இங்கேயிருந்து போ" - என உத்தரவிட்டாள். சியாமளர் வீடு திரும்பினார்.

பொழுது விடிந்ததும் சியாமளரை அடைத்த அறையில், அதிகன் கை, கால்களில் விலங்குகளோடு அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் கத்திய கத்தலில் ஆரணியும், வேலைக்காரர்களும் வந்தனர். "யார் இப்படிச் செய்தது?" என்று ஆரணி கேட்க, முதலில் சுத்தியலைக் கொண்டு வா" என்றான் அதிகன். விலங்கை சுத்தியலால் அடித்தபோது அதிகனின் நரம்புகள் புடைத்தனவே ஒழிய, விலங்கு அவிழவில்லை. அதிகன் நடந்ததைக் கூற, ஆரணி "அவர் தேவி உபாஸகர் ஆயிற்றே! என்னை எழுப்பிக் கேட்டிருக்கலாம்" என்று முனகினாள்.

இதையும் படியுங்கள்:
“ஏடாகூடமா எதுவும் செய்யாதே!”
ஓவியம்; சேகர்

அதேசமயம் அரசர், அரசியிடம், மழையில்லாமல் நிலமெல்லாம் வறண்டு கிடப்பதாகவும், பகையரசன் போர் முரசு கொட்டுவதாகவும் கனவு கண்டதாகக் கூறுகிறார். அந்த நேரம் அமைச்சர், அதிகன் மாளிகையில் நடந்ததையும், அர்ச்சகர், கோயிலில் சியாமளா தேவி சிலை அதிர்வதாகவும் தெரிவித்தனர். அம்பாளை சாந்தப்படுத்த சுஹாஸினி பூஜை நடந்தது. அபிஷேக, ஆராதனைகள் செய்தும். விக்ரகத்தின் ஆட்டம் நிற்கவில்லை. அப்போது, முதல் நாள் உடுத்திய பட்டுப் புடைவையிலிருந்து பதக்க சங்கிலி கீழே விழுந்தது.

அர்ச்சகர் மூலம் அனைத்தும் அறிந்த அரசர், சியாமளர் பாதம் பணிந்தார். பதறிய சியாமளரிடம், "லோக மாதா தங்களுக்கு நேர்ந்த அபவாதம் கண்டு கொதித்திருக்கிறார். அம்பாளை தங்களால்தான் சாந்தப்படுத்த முடியும்" என்று வேண்டினார் அரசர். சியாமளர் அம்பாள் பாதத்தை நமஸ்கரித்து, அங்கிருந்து சிறிது குங்குமத்தை எடுத்துக்கொண்டு அதிகன் மாளிகைக்கு சென்றார். சியாமளரைக் கண்ட அதிகன், அவரது பாதங்களைப் பணிந்தான். பீஜாட்சர மந்திரத்தை ஜபித்தபடி அம்பாள் குங்குமத்தை அதிகன் நெற்றியிலிட்டு, விலங்குகளின் முடிச்சில் பூசினார் சியாமளர். விலங்குகள் தெறித்து விழுந்தன. ஆலயத்தில் விக்ரகத்தின் ஆட்டமும் நின்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com