
-பொன்னம்மாள்
ஸ்ரீ ராமபிரான், ராவணனைக் கொன்ற பாபம் தீர, அகஸ்தியர் சொற்படி அஸ்வமேத யாகம் செய்யத் தீர்மானித்தார். சத்ருக்கனன், பரதனின் மகன் புஷ் கலன், ஹனுமன் தலைமையில் யாகக் குதிரையை அனுப்பினார். வித்யுன்மாலி என்ற அரக்கன் கரும்புகை மூட்டம் போட்டு யாகக்குதிரையை கவர்ந்து சென்றான். படை வீரர்கள் அவனைக் கொன்று பயணத்தைத் தொடர்ந்தனர்.
வித்யுன்மாலியால் பிடித்துச் செல்லப்பட்ட யாகக் குதிரை, வால்மீகி மகரிஷி ஆசிரமத்துக்கருகே மேய்ந்து கொண்டிருந்தது. லவன், அதன் மேலிருக்கும் பட்டயத்தைப் படித்து, 'இந்த க்ஷத்ரியன் சுய புராணம் பாடியிருக்கிறான். தனது வீர, தீர, பிரதாபங்களை வெளியிட வேறு இடமா கிடைக்கவில்லை?' என எண்ணி, குதிரையை கட்டி வைத்துவிட்டான்.
குதிரையைத் தேடிவந்த வீரர்கள் குதிரையைக் கண்டு, 'இதைக் கட்டியது யார்?' என்று சுற்றுமுற்றும் பார்த்தனர். லவன், "குதிரையைக் கட்டியது நானே!'' என்று மார்தட்டி நின்றான். குதிரையை விடுவிக்கச் சென்றவர்கள் கை அறுபட்டு ஓடினர்.