
உத்தங்க மகரிஷி வனாந்தரத்தில் நடந்து கொண்டு இருந்தார். தாகம் அவரை வாட்டியது. கண்ணன் சோதிக்கிறானா? முனிவர்தான். யாரேனும் அடியார்கள் உச்சரித்தால் கனியும் பாலும் சாப்பிடுவார். மற்றபடி நீராகாரம் தான். தாகம் பொறுக்காமல் உட்கார்ந்து விட்டார். "கண்ணா என் உணர்வுகளை வென்றுவிட்டேன் என்று மமதை கொண்டேன். தாகம் உயிரே போய்விடும் போல் இருக்கிறது. என் கதறல் உன் செவிகளை எட்டவில்லையா?" என்று கதறினார்.
பாரதப் போரின் போது கண்ணன் தனக்கு வழங்கிய வாக்குறுதி உத்தங்க ரிஷிக்கு நினைவு வந்தது. அதன்படி கண்ணன் அவருக்குத் தண்ணீர் தந்தாக வேண்டும். உத்தங்கர் திகைத்தார். அவர் மனத்தில் பழைய நினைவுகள் படமாக விரிந்தன.
பாரதப்போர் முடிந்து கண்ணன் துவாரகை திரும்பும் வழியில் உத்தங்க முனியைக் கண்டார். தவத்திலேயே இருந்த ரிஷிக்கு ஒன்றும் தெரியாது. அதனால், "எல்லோரும் நலமா" என கேட்க கண்ணன் அனைத்தையும் கூறினார். கௌரவர்கள், கர்ணன் கொல்லப்பட்டு தர்ம புத்திரரின் அரசு ஸ்தாபிக்கப்பட்டது என்றார்.