ஆன்மிகக் கதை – உபதேசம்!

ஓவியம்; சேகர்
ஓவியம்; சேகர்

குரு தமது சீடர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். "குரு என்பவர் பிரம்மா, விஷ்ணு, சிவனுக்கு சமமானவர். அவர் உபதேசத்தை
வேதவாக்காக எடுத்துக்கொள்ள வேண்டும். சாஸ்திரங்கள் குருவை, 'கடவுளுக்கு மேலானவர்' என்று புகழ்ந்து கூறுகின்றன" எனப் பலவாறாக உபதேசித்தார். சீடர்களும் அதைக்கேட்டு, அதன்படி நடப்போம் என்று குருவிடம் கூறினர்.

ஒரு நாள் குருகுலத்தின் அருகில் உள்ள ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றைத் தாண்டித்தான் சீடர்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டும். குரு, "சீடர்களே, வெள்ளம் குறைந்தபிறகு செல்லலாம்" என்றார். சீடர்களோ, "குருவே, எங்களுக்காக பெற்றோர்கள் காத்துக்கொண்டு இருப்பார்கள், ஆகையால், நாங்கள் வீட்டுக்குப் போக வேண்டும்" என்று எதையோ முணுமுணுத்தபடி, கண்களை மூடிக்கொண்டு தண்ணீரில்
காலை வைக்க, என்ன ஆச்சரியம். அவர்கள் தண்ணீரின் மீது நடந்து அக்கரைக்குப் போய்விட்டனர்!

இதைப் பார்த்துக்கொண்டிருந்த குருவுக்கு தனது கண்களையே நம்ப முடியவில்லை. அடுத்த நாளும் சீடர்கள் தண்ணீரின் மீதே நடந்து குருகுலத்துக்கு வந்தார்கள். குரு, "சீடர்களே என்ன மந்திரம் சொல்லி உங்களால் தண்ணீரின் மேல் நடக்க முடிந்தது? என்றார்.

"குருவே, தங்களின் உபதேசங்களையே நினைத்து கொண்டும், உங்களின் பெருமையைப் பேசிக்கொண்டும், தாங்களே எங்களின் தெய்வம், ஆகையால், எங்களை எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள் என்ற முழு நம்பிக்கையுடன் "நாங்கள் தண்ணீரின் மீது காலை வைத்தோம். எங்களாலேயே நம்ப முடியவில்லை. தங்களின் மீது வைத்த நம்பிக்கையால் எங்களால் நீரின் மீது நடக்க முடிந்தது" என்றார்கள்.

குருவுக்கு பெருமை பிடிபடவில்லை. 'ஆஹா. இத்தனை நாளாக எனது அருமையை நானே தெரிந்து கொள்ளவில்லையே. எனது சீடர்களை தண்ணீரின் மீது என்னால் நடக்க வைக்க முடிந்ததே. என்னே எனது கீர்த்தி' என்று நினைத்து தனக்குத்தானே வியந்தார். சீடர்கள் வீட்டுக்குக் கிளம்பியவுடன், தண்ணீரில் நடந்து பார்க்க அவருக்கும் ஆசை ஏற்பட்டது. ஆற்றில் நடக்க ஆசைப்பட்டு காலை தண்ணீரின் மீது வைத்த உடனே, அவர் அந்த வெள்ள நீரில் மூழ்கிப் போனார். ''ஐயோ... காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்" என்ற குருவின் அபயக் குரல் கேட்டு சீடர்கள் ஓடிவந்து அவரைக் காப்பாற்றினார்கள்.

இதையும் படியுங்கள்:
தூக்கம் கண்களைத் தழுவ மருந்தாகும் சில தைல, எண்ணெய்கள்!
ஓவியம்; சேகர்

தம்மை சுதாரித்துக்கொண்டு குரு சொன்னார், "சீடர்களே, நீங்கள் என் உபதேசத்தை நன்றாக கடைபிடித்தீர்கள். ஆகையால் உங்களால் நீரின் மீது நடந்து ஆற்றைக் கடக்கமுடிந்தது. ஆனால் நானோ, எனது குருவை மறந்து, அவரின் உபதேசத்தை மறந்து, எனது பெருமையை மட்டுமே நினைத்து, நீரில் இறங்கியதால் மூழ்கினேன். சீடர்களான உங்களுக்கு உபதேசித்த நான், எனது குரு எனக்கு உபதேசித்ததை மறந்துவிட்டேன்" என்று கூறி வருந்தினார்.

- வி.கணபதி,  சென்னை

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com