ஆன்மிகக் கதை - வசிஷ்டர் வேண்டிய பலகை!

ஓவியம்; சேகர்
ஓவியம்; சேகர்

சிஷ்டர் கண் மூடியிருந்தார். ஸ்ரீராமரின் அவதார காரணம், ராவண வதத்தோடு முடிந்துபோயிற்று. இனி, மனித வாழ்வின் இலக்கணத்தை நடத்திக் காட்ட வேண்டும். அதற்கு, புத்திர பாக்கியம் வேண்டும். அதற்கான யாகத்தை உடனே ஆரம்பிக்க வேண்டும். ஆனால், ஸ்ரீராமனுக்கோ நேரமில்லை. அயோத்தியில் தீக்குளிக்க காத்துக்கொண்டு இருக்கிறான் பரதன். அவனை உரிய நேரத்தில் சென்று காப்பாற்ற வேண்டும். அப்படியாயின், ராமபிரான் இங்கு தங்கும் கொஞ்ச நேரத்திலேயே யாகம் செய்து முடிக்கப்பட வேண்டும். வசிஷ்டர் ஒரு முடிவுக்கு வந்தார். பத்து நாட்கள் செய்த யாகப் பலனை சிறிது நேரத்திலேயே பெற வேண்டுமாயின், அதற்கேற்ற பலகையின் மீது நின்று ஸ்ரீராமன் பூஜிக்க வேண்டும். அப்போதுதான், ராமபிரான் உச்சரிக்கும் மந்திரங்களின் பலனை பூமி வாங்காது, முழுப்பலனும் ஸ்ரீராமனுக்கே சேரும். இதை மாருதியிடம்தான் கூறவேண்டும் என நினைத்து அவனை அழைத்தார்.

மாருதி, குருவின் குரல் கேட்டு எழுந்தோடி வந்து வினயம் காட்டினார். "மாருதி, காணாமல் பூப்பது, கண்டு காய்ப்பது, களிப்புறக் கனிவது, மனித இனத்தைப்போல. அது மட்டுமல்ல. பூமியின் ஆகர்ஷணத்தைத் தாங்கி மிதக்க வேண்டும். அப்படிப்பட்ட மரத்தின் பலகை வேண்டும். அதன் மீது நின்றுதான் ஸ்ரீராமன் மந்திரங்கள் உச்சரிக்க வேண்டும். போ,போய்  உடனே அதனைக் கொண்டு வா" என்று சொன்னவர்- மறுபடியும் கண்களை மூடி நிஷ்டையில் ஆழ்ந்து, போனார்.

மரத்தின் பெயரைக் கூறாமல், குறிப்புகளால் அல்லவா மரத்தை உணர்த்தி இருக்கிறார் மாமுனி அது என்ன மரம்? குழம்பிப் போனான் மாருதி சுற்றியிருந்த மற்ற சீடர்களும் குழப்பம் விலகாது, பரிதாபத்தோடு ஆஞ்சநேயனை அளவிட்டனர்.

ஹனுமன் தன்னைச் சுற்றிலும் பார்த்தான். வசிஷ்டர் குறித்த இடம் பூமியின் காந்த சக்தியும், புனிதக் காவேரியும் கூடுமிடம். புத்திர காமேஷ்டி யாகம் பண்ண மிகச் சரியான இடமே தேர்வாகியிருக்கிறது. யாகத்துக்கு வேண்டிய பொருட்களும் தயாராகவே உள்ளன. ஆனால்,  பலகை? அதுவும் குரு சொன்ன இலக்கணங்களுடன். அதை எங்கே கண்டுபிடிப்பது?  யாரிடம் கேட்பது?  பூமியின் சக்தியை எதிர்த்து மிதக்கக்கூடிய மரம் எதுவென தேட வேண்டும். அது என்ன மரம் என அறிய வேண்டும்.

ஹனுமன் விழிகளை மூடி தியானித்தான். மூடிய விழிகளில் மலர்ந்தது ஒரு முகம். வில்லேந்திய கரங்கள். விழி மூடி இராத முகம். சிந்திய இளநகையோடு, "என்ன வேண்டும் மாருதி?" என்றான் இளவல் கனிவாக.

"ஐயனே! யாகத்துக்குப் பலகை வேண்டும். அது பூமியின் ஆகர்ஷணத்தை எதிர்த்து மிதக்கும் பலகை யாம். குரு சொல்கிறார். அது எந்த மரத்தைக் குறிக்கிறதென எனக்கு விளங்கவில்லை" என்றான்.

அவன் முடிக்குமுன் பதில் வருகிறது லக்ஷ்மணனிடமிருந்து, "அத்தி.''

மாருதி முகம் மலர்ந்தான். நல்லகாலம் இவரிடம் கேட்டேன். பாற்கடலில் மிதந்து பகவானை தாங்குபவன் அறியாத மரங்களும் இருக்க முடியுமா? இனி, மரத்தைத் தேடுவோம் என நகர முற்பட, "மாருதி" என மறுபடியும் அழைத்தது லக்ஷ்மணன் குரல். "தமையனாருக்கு அதிகம் தாமதிக்க நேரமில்லை புரிகிறதல்லவா? விரைந்து முடி” என்றான்.

இதையும் படியுங்கள்:
அற்புதமான சுவையில் ஆலு மட்டார் செய்யலாம் வாங்க! 
ஓவியம்; சேகர்

ஹனுமன் காவிரிக்கரையோரம் சிந்தித்தவாறே சென்றபொழுது. ஆறடிக்கும் அகலமான அடி மரத்துடன் காற்றில் சலசலத்த அத்தி மரத்தைக் கண்டான். மகிழ்ச்சியுடன் தன் வாலால் அதனை சுற்றி, சுழற்றி பெயர்க்கலானான். தமது நகங்களால் ஸ்ரீ ராமர், சீதை வடிவங்களை வரைந்து, வடிவமைத்து ஓரங்களை சமன் செய்து சீர்படுத்தி பலகையை யாக மேடைக்கு எடுத்து வந்தான். சரியாக நாற்பத்தெட்டு நாழிகை ஆகி இருந்தது. ஐயன் வரும் நேரந்தான்! கண் விழித்துப் பார்த்த வசிஷ்டர் முகம் மலர்ந்தார். 'மாருதி கெட்டிக்காரன்! செய்வன திருந்தச் செய்பவன்' என மகிழ்ந்தார்.

அதேநேரத்தில் புஷ்பக விமானம் வந்திறங்க, அதிலிருந்து ஜானகி சமேதனாய் ஸ்ரீராமன் இறங்கி வர, "தொடங்கட்டும் யாகம்" என்று வசிஷ்டர் குரல் கொடுக்க, மந்திர கோஷங்கள் முழங்க யாகம் தொடங்கிற்று.

- மல்லிகா குரு, சென்னை

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com