ஸ்ரீ அன்னமாச்சாரியார் ஜெயந்தி!

ஸ்ரீ அன்னமாச்சாரியார் ஜெயந்தி!
Published on

ஸ்ரீ அன்னமாச்சாரியார் ஆந்திராவில் தாள்ளபாக்கம் என்னும் ஊரில் சூரி - அக்கலாம்பா தம்பதியினரின் மகனாக ஒரு தெலுங்கு அந்தண குடும்பத்தில்  மே 9ஆம் தேதி 1408 இல் பிறந்தார். திருமலை திருவேங்கட முடையான் கோவிலுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த இவர் ஏழுமலையான் மேல் இயற்றிப் பாடிய பாடல்கள் சங்கீர்த்தனைகள் என்று புகழ் பெற்றவை. தென்னிந்திய இசையின் மரபுகள் பல அன்னமாச்சாரியாரால்தான் தோற்றுவிக்கப்பட்டது. ஒரு பாடலை பல்லவி, அனுபல்லவி, சரணம் என்று பிரித்துப் பாடும் மரபு இவராலேயே தோற்றுவிக்கப்பட்டது என்று கருதப்படுகிறது. பின் வந்தவர்களால் இந்த மரபுகள்  வளர்க்கப்பட்டு விருத்தியடைந்தன.

திருமலைக் கோவிலில் இவர் பாடும்போது சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ புரந்தரதாஸரை சந்தித்ததாகக் கூறப்படுகிறது.  ஸ்ரீ அன்னமாச்சார்யா ஆச்சாரியராக மட்டுமில்லாமல் மிகச்சிறந்த அறிஞராகவும் விளங்கினார். தன் காலத்திற்கு முன்பிருந்த பாடல்களை ஆராய்ந்து அவற்றுக்கு உரை எழுதியுள்ளார்.

சாதீய வேற்றுமைகளை எதிர்த்த இவர் 'ப்ரம்மம் ஒகடே' என்னும் பாடல் மூலம் இறைவன் ஒருவனே அவனுக்கு மனிதர்களிடத்து எந்த வேற்றுமையும் கிடையாது. எல்லோரும் சமம் தான் என்று உணர்த்தினார். மிகவும் புகழ் பெற்ற பாடலான 'ப்ரம்மம் ஒகடே' இன்றளவும் பாடகர்களால் கச்சேரிகளில் பாடப்பட்டு ரசிகர்களால் மிகவும் விரும்பி கேட்கப்படுகிறது. அதைத் தவிரவும் இவரின் 'ஸ்ரீமன் நாராயணா', 'நாநாடி பதுகு நாடகமு' போன்ற பாடல்களும் பிரபலமானவை.  முக்கியமாக இசையரசி திருமதி எம். எஸ்.சுப்புலட்சுமி அவர்களால் தான் ஸ்ரீ அன்னமாச்சார்யாவின் கீர்த்தனைகள் பாடப்பட்டு பிரபலபடுத்தப்பட்டன.

இவரின் மனைவி 'திம்மக்கா' வும் புகழ் பெற்ற கவி. தெலுங்கு இலக்கியத்தின் முதல் பெண் புலவராகக் கருதப்படும் இவர் தெலுங்கில் 'சுபத்ரா கல்யாணம்' என்னும் நூலை இயற்றியிருக்கிறார். இவர்களது பிள்ளை திருமலாச்சாரியர், பேரன் சின்னய்யா ஆகியோரும் தென்னிந்திய சங்கீத உலகில் புகழ் பெற்றவர்கள்.

ஸ்ரீ அன்னமாச்சார்யாவின் வாழ்க்கையை மையமாக வைத்து 'அன்னமய்யா' என்னு, தெலுங்கு திரைப்படம் எடுக்கப்பட்டு மிகவும் புகழ் பெற்றது.  இந்த திரைப்படத்தில் ஸ்ரீ அன்னமாச்சார்யாவின் கீர்த்தனைகள் பல பாடப்பட்டன.

தென்னிந்திய சங்கீத பாரம்பரியத்தின் முக்கிய சின்னமாகக் போற்றப்படும் கவிஞர், அறிஞர், ஆச்சார்யா, அன்னய்யா என்றெல்லாம் போற்றப்படுபவருமான ஸ்ரீ அன்னமாச்சார்யா தனது 95 ஆவது வயதில் 1503 ஆவது ஆண்டில் மறைந்தார்.  இந்த மாதம் 9ஆம் தேதி (இன்று) ஸ்ரீ அன்னமாச்சார்யாவின் ஜெயந்தித் திருநாள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com