விஷ பயம் நீக்கும் ஸ்ரீஜெயங்கொண்டீஸ்வரர்!

விஷ பயம் நீக்கும் ஸ்ரீஜெயங்கொண்டீஸ்வரர்!
Published on

‘நம்பினார்க்கு நடராசன்’ என்கிற முதுமொழி என்றும் பொய்க்காது. அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பதற்கு ஓர் உதாரணத் தலமாக திகழ்கிறது நத்தக்காடையூர் ஸ்ரீ ஜெயங்கொண்டீஸ்வரர் ஆலயம். கொங்கு நாட்டில் சோழர்களின் ஆட்சி பல காலம் நீடித்தது. சோழர்களது ஈடு இணையில்லா சிவ பக்தியின் காரணமாக இந்த கொங்கு தேசத்தில் 27 சிவாலயங்களை சோழர்கள் ஸ்தாபித்துள்ளனர். இதன் காரணமாக இந்த 27 சிவாலயங்களிலும் சிவபெருமான், ‘ஸ்ரீ சோளீஸ்வரர்’ என்றே அழைக்கப்படுகின்றார். ராஜராஜ சோழனின் பல்வேறு பட்டப் பெயர்களுள் ஒன்று, ‘ஜெயங்கொண்டான்.’ ராஜராஜ சோழன் இந்த நத்தக்காடையூர் திருத்தலத்தில் நிறுவிய சிவபெருமான் இவரது பட்டப்பெயரால்
ஸ்ரீ ஜெயங்கொண்டீஸ்வரர் என்று போற்றப்படுகின்றார்.

காங்கேயன் என்கிற குறுநில மன்னன் சோழர்களின் கட்டுப்பாட்டில் இப்பகுதியை ஆண்டு வந்தான். இதனால் இப்பகுதி, ‘காங்கேய நாடு’ என்று அழைக்கப்பட்டது. இந்த காங்கேய நாட்டுக்கு உட்பட்டதாக நத்தக்காடையூர் திகழ்ந்துள்ளது. பின்னர் 1708ம் ஆண்டில் இந்தக் காங்கேய நாட்டை ஆட்சி செய்தார் கொன்றைவேல் சர்க்கரை மன்றாடியார். இவர் ஆட்சிக் காலத்தில் இங்குள்ள ஜெயங்கொண்டீஸ்வரர் ஆலயத்தைத் திருப்பணி செய்து, கும்பாபிஷேகம் நடத்தினார். சிறந்த சிவ பக்தரான இவர், இந்தச் சிவாலய திருப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, வேலையாள் ஒருவன் தண்ணீர் எடுத்து வரச் சென்றபோது அவனைப் பாம்பு கடித்து விட்டது. அவன் அலறிக்கொண்டே ஓடி வந்து, கோயிலின் முன்னே மயங்கி விழுந்தான். அவன் வாயில் நுரை தள்ளியது.

விஷயம் அறிந்து, அங்கு ஓடி வந்தார் கொன்றவேல் சர்க்கரை மன்றாடியார். சிவாலயத் திருப்பணிக்கு என்ன தடையோ? என்று பயந்தார். உடனே ஆலயத்துக்குள் சென்று ஒரு கைப்பிடியளவு விபூதியை எடுத்து வந்து, "ஜெயங்கொண்ட நாதரே! நமச்சிவாய… பயம் கொண்ட பாம்பு விஷம் இறங்கவே! சிவ சிவ ... என்று சொல்லியபடியே அவனது உடம்பு முழுவதும் பூசி விட்டார். 28 முறை இவ்வாறு ஜபித்தபடியே விபூதியைப் பூசினார். என்ன ஆச்சரியம், பாம்பு கடித்து இறந்து கிடந்தவன், உடம்பில் உயிர் வந்தது. கண் விழித்துப் பார்த்தான். அவனது உடம்பில் ஏறிய பாம்பின் விஷம் முழுவதும் இறங்கியது. தூங்கி எழுந்தவன் போல் எழுந்து நின்றான். பலரும் இந்த அற்புத நிகழ்வைக் கண்டு அதிசயித்து நின்றனர். மன்றாடியாரோ ஆண்டவனை வணங்கி பேரானந்தம் அடைந்தார்.

நெடுஞ்சாலைக்கு மேற்கே ஆலயம் அழகுற அமைந்துள்ளது. ஆலயத்துக்கு வெளியே பிரம்மாண்டமான இரண்டு தீப ஸ்தம்பங்கள் நிற்கின்றன. இதன் கீழே ராஜராஜ சோழனது திருவுருவம் வடிக்கப்பட்டுள்ளது. கோயிலில் ராஜகோபுரம் காணப்படவில்லை. உள்ளே பலிபீடம், கொடிமரம் மற்றும் நந்தி மண்டபம் உள்ளன. நேராக சில படிகள் ஏறிச் சென்றால், இறைவன் சன்னிதியை அடையலாம். கருவறையுள் கருணாதயாளராய் அருட்காட்சி அளிக்கின்றார் ஸ்ரீ ஜெயங்கொண்டீஸ்வரர். சுவாமி சன்னிதிக்கு இடப்பக்கம் அம்பாள் சன்னிதியும், பக்கத்தில் ஸ்ரீதேவி - பூதேவி உடனுறை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் சன்னிதியும் அடுத்தடுத்து அமைந்துள்ளன. அம்பிகை ஸ்ரீ சௌந்தரநாயகி நின்ற கோலத்தில் அருள்புரிகின்றாள்.

தென்மேற்கில் கணபதி சன்னிதியும், வடமேற்கில் பாலசுப்ரமணியர் சன்னிதியும் அமைந்துள்ளன. வடபாகத்தில் தெற்கு நோக்கிய அனுமன் சன்னிதியும், ஈசான பாகத்தில் ஸ்ரீ பைரவரும் சன்னிதி கொண்டுள்ளனர். நவக்கிரகங்களும் உடனுள்ளன.

பழையகோட்டை மன்றாடியார் நிர்வாகத்துக்கு உட்பட்ட இந்தக் கோயிலில் அனைத்து முக்கியமான சிவாலய விசேஷங்களும் சிறப்புடன் நடைபெறுகின்றன. இரண்டு கால பூஜைகள் நடைபெறும இக்கோயில் தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7.30 மணி வரையும் திறந்திருக்கிறது. இத்தல ஈசனை வழிபட, விஷத்தால் உண்டான வியாதிகள் குணமடையும். தொழிலில் ஏற்படுகின்ற தடைகள் நீங்கும். தடைபட்ட மங்கல நிகழ்ச்சிகள் மீண்டும் தடை நீங்கி நடைபெறும்.

அமைவிடம்: திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் இருந்து அரச்சலூர் வழியாக ஈரோடு செல்லும் சாலையில் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நத்தக்காடையூர் சிவாலயம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com