தாயாருடன் இணைந்து அருளும் பெருமாளை வணக்குவது சிறப்பு. பலவிதமான காரணங்களால் ஏற்படும் திருமணத் தடைகளை நீக்கவும், குடும்ப ஒற்றுமை நிலைக்கவும் ஸ்ரீ லக்ஷ்மியோடு சேர்ந்து அருளும் நாராயணப் பெருமாளை வணங்கி பலன் பெறலாம். செங்கற்பட்டு நகரத்திலிருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த ஊர் அம்மணம்பாக்கம். இந்த கிராமத்தில் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழைமையான ஸ்ரீ லஷ்மி நாராயணப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.
கிழக்கு நோக்கி அமைந்துள்ள இத்தலம், ராஜகோபுரமின்றி காட்சி தருகிறது. கோயிலுக்குள் நுழைந்ததும் விளக்குத் தூண், பலிபீடம் காட்சி தருகின்றன. சுற்றுப்பிராகாரத்தில் சக்கரத்தாழ்வார் காட்சி தருகிறார். சக்கரத்தாழ்வாரை வணங்கிக் கடந்தால் பின்புறத்தில் வில்வ மரத்தின் கீழ் நாகர் சிற்பங்களும் மற்றொரு புறத்தில் சிறிய திருவடி தனிச்சன்னிதி ஒன்றில் நின்ற திருக்கோலத்தில் அருளுகிறார்.
முன்மண்டபத்தில் பெரிய திருவடி காட்சி தர, உள்ளே நுழைந்தால் அர்த்த மண்டபத்தில் கருவறைக்கு முன்னால் ஒருபுறத்தில் ஸ்ரீ பெருந்தேவித் தாயாரும் மற்றொரு புறத்தில் ஸ்ரீ ஆண்டாளும் ஒரு சிறிய சன்னிதியில் அமைந்து பக்தர்களுக்கு வேண்டுவனவற்றைத் தந்து அருளுகிறார்கள். ஸ்ரீஆண்டாளுக்கு அருகில் ஸ்ரீ பத்மாவதித் தாயாரும் ஸ்ரீ சீனிவாசப் பெருமாளும் தனித்தனியே சிறிய சன்னிதியில் காட்சி தருகிறார்கள். அருகில் ஒரு சிறிய மண்டபத்தில் விஷ்வக்சேனர், நம்மாழ்வார், பாஷ்யகாரர், ஸ்ரீ வேதாந்த தேசிகன் முதலான ஆச்சார்யார்கள் அமர்ந்த கோலத்தில் ஒருசேரக் காட்சி தருவது சிறப்பு.
கருவறையில் ஸ்ரீ லஷ்மி நாராயணப் பெருமாள் தாயாரை இடது தொடை மீது அமர்த்தி, தனது இடது திருக்கரத்தால் அணைத்த கோலத்தில் சதுர்புஜனாக அழகுற காட்சி தருகிறார். தாயாரும் பெருமாளும் கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில் அருளுகிறார்கள். மூலவருக்கு முன்பு உத்ஸவர்களாக ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப்பெருமாள், பெருந்தேவித் தாயார், ஆண்டாள் ஆகியோர் அமைந்துள்ளார்கள். அருகில் சுதர்சனச் சக்கரம் காணப்படுகிறது. கோட்டங்களில் ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ வராஹர், ஸ்ரீ ஹயக்ரிவர் முதலான மகாவிஷ்ணுவின் பல ரூபங்களை அழகிய திருக்கோலத்தில் தரிசிப்பது மனதுக்கு நிறைவு தருகிறது.
பாஞ்சராத்ர ஆகமம் கடைபிடிக்கப்படும் இத்தலத்தின் தல விருட்சம் வில்வ மரமாகும். புஷ்கரணி கோயிலுக்கு சற்று தொலைவில் அமைந்துள்ளது. இத்தலத்தின் சம்ப்ரோஷண வைபவம் கடந்த 2022ம் வருடம் பிப்ரவரி மாதம் 06ம் தேதி நடைபெற்றுள்ளது. இக்கோயிலில் ஆடிப்பூரத்தன்று திருமஞ்சன வைபவம், வைகுண்ட ஏகாதசி, பிப்ரவரி 6 அன்று சம்ப்ரோஷண வைபவ உத்ஸவம், புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை அன்று விசேஷ வழிபாடுகள் முதலான வைபவங்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன.
தாயாருடன் இணைந்து அருளும் இத்தலப் பெருமாளை வணங்கி வழிபட்டால் திருமணத் தடைகள் அனைத்தும் அகலும் என்பது ஐதீகம். மேலும் இத்தலத்துப் பெருமாளை தம்பதி சமேதராக வணங்கினால் குடும்பங்களில் நிலவும் மன வேற்றுமைகள் நீங்கி அமைதியான வாழ்க்கை அமையும் என்பதும் ஐதீகம்.
காலை 10 முதல் பகல் 11 மணி வரை மட்டுமே திறந்து ஒருகால பூஜை மட்டுமே நடைபெறும் இக்கோயிலுக்கு செங்கற்பட்டிலிருந்து அஞ்சூர் செல்லும் T2 என்ற அரசுப் பேருந்தில் பயணித்து அம்மணம்பாக்கத்தில் இறங்கி சற்று தொலைவில் அமைந்துள்ள இத்தலத்தை அடையலாம். மேலும், செங்கற்பட்டு ராட்டிணம் கிணறு பகுதியிலிருந்து ஆட்டோ மூலம் இக்கோயிலை சுலபமாக அடையலாம். செங்கற்பட்டை அடுத்து அமைந்துள்ள மகேந்திராசிட்டி வழியாகப் பயணித்தும் குன்னவாக்கம் அடுத்துள்ள அம்மணம்பாக்கத்தை அடையலாம்.