அட்சய திருதியையில் ஸ்ரீ நிதீஸ்வரர் வழிபாடு!

அட்சய திருதியையில்
ஸ்ரீ நிதீஸ்வரர் வழிபாடு!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் – புதுச்சேரி சாலையில் அமைந்துள்ளது அன்னம்புத்தூர் அருள்மிகு ஶ்ரீ நிதீஸ்வரர் திருக்கோயில். குபேரன் தனக்கு நிதி வேண்டி வணங்கிய தலங்களில் இதுவும் ஒன்று என்பதும், அனைவரின் தலையெழுத்தையும் எழுதும் பிரம்மனின் தலையெழுத்தையே மாற்றி எழுதிய சிவனார் வீற்றிருக்கும் திருத்தலம் என்பதும் இத்தலத்தின் சிறப்பு.

நிதிகளுக்கெல்லாம் தலைவரான குபேரனுக்கு அருளியதால் இத்தல ஈசன் ஸ்ரீ நிதீஸ்வரர் என்னும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். பதும நிதி, மகா பதும நிதி, மகா நிதி, கச்சப நிதி, முகுந்த நிதி, குந்த நிதி, நீல நிதி, சங்க நிதி ஆகிய எட்டு வகையான நிதிச் செல்வங்களுக்கும் தலைவன் குபேரன். எனவே அவனுக்கு, ‘நிதிபதி' என்கிற பெயரும் உண்டு. குபேரன் வழிபட்டு வரம் பெற்றதாலே அன்னம்புத்தூர் கிராமத்தில் அருளும் ஈசனுக்கு, ‘ஸ்ரீ நிதீஸ்வர்' என்ற பெயர் ஏற்பட்டது. பிரம்மாண்டமான லிங்கத் திருமேனியராகக் காட்சி தருகிறார் இத்தல ஈசன். இவரை வழிபட பிரம்மஹத்தி தோஷம் உள்ளிட்ட கொடிய தோஷங்கள் யாவும் நீங்கும். இல்லத்தில் வறுமை நீங்கி, செல்வம் கொழிக்கும்.

பிரம்மாவும் மகாவிஷ்ணுவும் சிவனாரின் முடி, அடியைத் தேடிச் சென்றனர். அப்போது முடி தேடிச் சென்று தோற்றுப்போன பிரம்மன், ‘முடியைக் கண்டேன்’ என்று பொய் சொன்னார். அன்னமூர்த்தி, அன்ன வாகனன் என்றெல்லாம் புகழப்பட்ட பிரம்மனுக்கு பொய் சொன்னதால் இழுக்கு ஏற்பட்டதுதான் மிச்சம். இதனால் வேதனையுற்ற பிரம்மன், இந்தத் தலத்து இறைவனுக்கு கைநிறைய மலர்களை அள்ளிச் சூட்டி மனம் கனிந்து வணங்க, இழுக்கினால் நேர்ந்த துன்பங்கள் யாவும் விலகியதாம். அதனால் இந்த ஊருக்கு அன்னம்புத்தூர் என்று பெயர் அமைந்ததாகச் சொல்லப்படுகிறது.

மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய இந்தக் கோயில், திருவண்ணாமலைக்கு நிகரான தலமாகக் கருதப்படுகிறது. ஸ்ரீ நிதீஸ்வரருக்கு ராஜராஜ சோழ மன்னன் திருப்பணி செய்ததைத் தெரிவிக்கிற கல்வெட்டுகளும் இந்தக் கோயிலில் உள்ளன. நிதியதிபதியான குபேரனுக்கும் பிரம்மாவுக்கும் அருளிய பரமேஸ்வரனாம் நிதீஸ்வரரை அட்சய திருதியை தினத்தில் தரிசித்து வறுமை நீங்கி வளமோடு வாழ்வோம்.

அமைவிடம்: திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி செல்லும் சாலையில் வரகுப்பட்டு என்னும் கிராமத்தை அடுத்து வரும் சாலையில் வலது பக்கம் உள்ள சாலை வழியாக 4 கி.மீ. பயணித்தால் திருக்கோயிலை அடையலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com