தமிழ் நாட்டின் கோயமுத்தூர் மாவட்டத்தில், பேரூரில் அமைந்துள்ள இந்து சைவ சமய கோவில் தான் பட்டீசுவரர் ஆலயம். நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் இந்த கோவில் கோயமுத்தூரிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
திருஞான சம்மந்தர், திருவாசகர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்றத் தலம் . இந்த கோவிலின் புராதனப் பெயர் பிப்பலாரண்யம் (பிப்பலம் = அரச மரம்; ஆரண்யம் = காடு) என்பதாகும். மேலும், காமதேனுபுரி, பட்டிபுரி, ஆதிபுரி, தட்சிண கயிலாயம், தவசித்திபுரம், ஞானபுரம், சுகலமாபுரம், கல்யாணபுரம், பிறவா நெறித்தலம், பசுபதிபுரம், மேலை சிதம்பரம் போன்ற மற்ற பெயர்களும் இந்த ஆலயத்திற்கு வழங்கப்படுகின்றன. இரண்டாம் நூற்றாண்டு காலகட்டத்தில் கரிகால சோழனால் இந்த கோவில் கட்டப்பட்டது. அதற்கு முன்னர் ஒன்பதாம் நூற்றாண்டில் சுந்தரர் இக்கோயிலுக்கு வருகை புரிந்து தேவாரப் பாடல்கள் பாடியிருக்கிறார். பிற்காலத்தில் சோழ பேரரசன் முதலாம் இராஜராஜ சோழன் ஆட்சி காலத்தில் இக்கோயிலில் அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபம் ஆகியவை கட்டப்பட்டு, கோயிலுக்கு பல்வேறு நன்கொடைகள் வழங்கப்பட்டுள்ளன. பின்னர் பதினேழாம் நூற்றாண்டு வரை கொங்கு சோழர்கள், போசளப் பேரரசு, விஜயநகரப் பேரரசு மற்றும் நாயக்க மன்னர்கள் ஆட்சியின் கீழ் பல்வேறு நன்கொடைகள் இக்கோயிலுக்கு அளிக்கப்பட்டு வந்துள்ளன. இதற்கான அனைத்து சான்றுகளும் அங்குள்ள சுவர்களில் ஆவணப்படுத்தப்பட்டன.
இந்த திருக்கோவிலின் கனக சபை பதினேழாம் நூற்றாண்டில் அழகாத்ரி நாயக்கரால் கட்டப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில் 63 நாயன்மார்களைக் கொண்ட மண்டபம் கட்டப்பட்டது. இருபதாம் நூற்றாண்டில் கல்யாண மண்டபம் மற்றும் முன் மண்டபம் ஆகியவை கட்டப்பட்டு விமானமும் செப்பனிடப்பட்டது.
இங்கு எழுந்தருளியிருக்கும் லிங்கம் சுயம்புவாக உருவானது என்று நம்பப்படுகிறது. இங்கு சிவபெருமான் பட்டீசுவரர் என்ற பெயருடன் பச்சை நாயகி அம்மன் துணையுடன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
இக்கோயிலில் பல்வேறு கோபுரங்களும் மண்டபங்களும் உள்ளன. மண்டபத்தின் தூண்களில் அழகிய சிற்பங்களும் அதன் மேற்கூரையில் கல்லால் ஆன சங்கிலியும் அமைந்துள்ளது.
தமிழ் உழவர்கள் இன்றுவரை கைவிடாது கொண்டாடிவரும் சடங்குகளில் ஒன்று தான் நாற்று நடவுத் திருவிழா. இந்திர விழாச் சடங்குகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்பட்டாலும், நாற்று நடவுத் திருவிழா தமிழர் திருவிழாவாகும். திருப்பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் ஆண்டுக்கொருமுறை இந்த நாற்று நடும் விழா ஆனி மாதத்தில் கிருத்திகை தொடங்கி பூராட நட்சத்திரத்தில் நாற்று நடவும், உத்திரத்தில் திருமஞ்சனமும் கோலாகலமாய் நடந்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம் விழா சிறப்பாக நடைபெறும். விழாவின்போது கோயில் தேர் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு வீதியில் உலா வரும். இந்த தேரில் பட்டீசுவரர் - பச்சைநாயகி அம்மன் இருவரும் வலம் வந்து அருள் பாலிப்பர். மள்ளர் என்னும் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் நான்கு வம்ச பட்டகாரர்கள் தேரை வடம் பிடித்து தொடங்கி வைப்பார்கள்.
வழிபாட்டு நேரங்கள்: காலை : 05:30 முதல் 01:00 வரை. மாலை : 04:00 முதல் 09:00 வரை. அனைத்து நாட்களிலும் செல்லலாம்.