ஸ்ரீராம நவமி: கர்ப்போத்ஸவம் முதல் ஜன்மோத்ஸவம் வரை!

ஸ்ரீராம நவமி: கர்ப்போத்ஸவம் முதல் ஜன்மோத்ஸவம் வரை!

Published on

‘சித்திரையின் நவமியிலே அவதரித்தாயே;

புனர்பூசம் புகழ் பயக்க உதித்தாயே;

கௌசலை தன் மணிவயிறு வாய்க்கப்பெற்றாயே;

கனபுரத் தென் கருமணியே காத்தருள்வாயே’

மேற்கூறிய பாடல் ஸ்ரீராமர் பிறப்பு குறித்ததாகும். ஸ்ரீராம நவமி தினம் இதுவேயாகும். ஸ்ரீராம நவமி தினம் நாளை (30.3.2023) அன்று கொண்டாடப்பட உள்ளது.

ராமாயணம் படித்தல்: ராமாயணத்தை பத்து நாட்களுக்கு முன்பே படிக்க ஆரம்பித்து, ஸ்ரீராம நவமியன்று பட்டாபிஷேகத்துடன் முடிப்பது வழக்கம். பல இடங்களில் இப்பத்து நாட்களும் பஜனைகள் நடைபெறும்.

பார்வதி அவதார தினம்: பார்வதி தேவி அஷ்டமியும், நவமியும் கலந்த தினத்தில் அவதரித்த காரணம், தேவி உபாசகர்கள் தேவி பூஜையைச் செய்து முடிவில் ஸ்ரீராம நவமி உத்ஸவத்தை நடத்துவதுண்டு.

கானகமும், பானகமும்: ஸ்ரீராமர் விஸ்வாமித்திர முனிவருடன் இருந்தபோதும், பதினான்கு ஆண்டுகள் வனவாசம் சமயம் காட்டில் வசித்தபோதும், நீர் மோரையும் பானகத்தையும் அருந்தினாராம். அதன் நினைவாகவே நீர்மோரும், பானகமும் ஸ்ரீராம நவமியன்று நிவேதனப் பொருட்களாகப் படைக்கப்படுகின்றன. தவிர, பருப்பு வடை, பாயசம், கோசுமல்லி ஆகியவைகளையும் நிவேதனம் செய்து பிரசாதமாக அனைவருக்கும் வழங்குவதுண்டு.

தர்மத்தின் வடிவம்: ஸ்ரீராமர் தர்மத்தின் வடிவமென வால்மீகி முனிவர் கூறுகிறார். காரணம், உலகத்தில் அறநெறி தவறாத வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டுமென ஸ்ரீராமபிரான் வாழ்ந்து காட்டியிருக்கிறார். எப்படியென்றால், ‘தர்ம நெறிப்படி வாழுகின்ற ஒருவன் எந்தப் பொருள் மீதும் ஆசைப்படக் கூடாது. அதே மாதிரி ஒருவனிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறதோ, அதைக் கடமையாகச் செய்ய வேண்டும். பிறருக்குத் தனது உடமைகளைத் தானமாக மகிழ்வுடன் வழங்க முன்வர வேண்டும். தர்மத்தைக் காப்பாற்றுகிற, கடமை வீரனாக ஸ்ரீராமபிரான் வாழ்ந்த காரணத்தால், நாடு முழுவதும் மக்கள் அவரைக் கோயில் கட்டி பூஜிக்கின்றனர்.

கர்ப்போத்ஸவமும் ஜன்மோத்ஸவமும்: அசுரர்களின் கொடுமையிலிருந்து உலகைக் காக்க மகாவிஷ்ணு ஸ்ரீராமராக அவதாரம் செய்யப்போகிறார் என்பதை அறிந்த தேவர்களும், முனிவர்களும், ஸ்ரீராமபிரானின் கர்ப்ப வாசத்தை உற்சாகமாகக் கொண்டாடிய காரணம் கர்ப்போத்ஸவம் எனப்பட்டது. ஸ்ரீராமர் பிறந்த தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட நிகழ்ச்சி ஜன்மோத்ஸவம் ஆகும்.

கர்ப்போத்ஸவத்தைக் கொண்டாடும் வகையில் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் ராமாயணப் பாராயணம் செய்த பின், ஜன்மோத்ஸவத்தைச் சிறப்பிக்கும் வகையில் நவமி முதல் அடுத்து ஒன்பது நாட்களும் ராமாவதாரச் சர்க்க பாராயணம், பானக பூஜை, ஜபம், தியானம் போன்றவற்றைச் செய்வதை மரபாகக் கொண்டுள்ளனர்.

காயத்ரி மந்திரமும் ராமாயணம்: காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களின் விரிவே ராமாயணம் எனப்படுகிறது. ஸ்ரீ ராமாயணம் ஒரு அட்சரத்துக்கு ஆயிரம் ஸ்லோகங்கள் வீதம் 24 ஆயிரம் ஸ்லோகங்களைக் கொண்டதாகும். இதை சரணாகதி சாஸ்திரம் எனப் பெரியோர்கள் கூறுகின்றனர். நம்மாழ்வார் ஒரு வரியில் கூறிய, ‘கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?’ என்பது போல, ‘ராமபிரானுடைய அற்புத குணங்களை மனதில் பதிய வைத்து போற்றி அதன்படி நடக்க வேண்டும். ஸ்ரீராம பிரானிடம் சரணாகதி அடைந்து வாழ்வை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்’ என்பதாகும்.

அஷ்டமி, நவமி, தசமி திதி காரணம்: பதினாறு திதிகளில் நவமி, தசமி, அஷ்டமி திதிகள் நல்ல காரியங்களுக்குத் தங்களை எவரும் தேர்ந்தெடுப்பது இல்லை என பெருமாளிடம் முறையிட, திதிகள் விரும்பியவாறு, நவமி, தசமி திதிகளில் ராமாவதாரமும் அஷ்டமி திதியில் ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரமும் நிகழ்ந்தன.

ஸ்ரீ ராம பக்தன் ஆஞ்சனேயர்: எங்கெங்கு ரகுநாத கீர்த்தனமோ, அங்கங்கு சிரம் மேல் கரம் குவித்து மனமுருகி கண்களில் நீர்ச் சொறிந்து ஆனந்தத்தில் மூழ்கி கேட்கும் பரிபூரண பக்தன் ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு ஸ்ரீராம நவமி தினத்தில் வடைமாலை மற்றும் வெற்றிலை மாலை சாத்தி வழிபடுவது வழக்கம்.

logo
Kalki Online
kalkionline.com