

சாய்ராம் சுவாமியின் (Sri Sathya Sai Baba) இந்த நூறாவது பிறந்த புண்ணியத்தினத்தில் அவரின் பாதங்களுக்கு எனது வணக்கங்கள். எனது பெயர் அருள் வடிவேல். வயது 46. கோபிசெட்டிபாளையம் அருகே டி என் பாளையம் என்ற ஊரில் வசித்து வருகிறேன். எனக்கு ஒரு மகன். அவன் பெயர் சாய் ஹரி. காலம் சென்ற எனது தந்தையார் 1970 வாக்கிலேயே புட்டபர்த்தி சென்று சுவாமியின் பக்தரானார்.
இந்த அற்புதம் 2020ஆம் ஆண்டு நடந்தது. அப்போது எனது மகன் பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதினான். கோவிட் காலம். எனக்கு சுவாமியின் கல்லூரியில் அவன் படிக்க வேண்டும் என்ற ஆசை. எனவே, ஆன்லைனில் சுவாமியின் கல்லூரிக்கு பயோ சயின்ஸ் அப்ளை செய்தோம். சில நாட்களுக்குப் பிறகு சுவாமி எனது கனவில் தோன்றி எனது மகனுக்கு அவரது கல்லூரியில் இடம் அளிப்பதாக உறுதி கூறினார். எங்கள் குடும்பமே மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். எனது மகனின் தேர்வு12ம் வகுப்பு முடிவுகள் வந்தது.
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 'பகவான் பாபா' புத்தகத்தை வாங்க கீழே உள்ள Link-கை கிளிக் செய்யவும்!
நாங்கள் சுவாமி கல்லூரியில் படிக்கப் போவதால் எனது மகனுக்கு பொறியியல் கவுன்சிலிங் அப்ளை செய்யவில்லை. சில நாட்களுக்குப் பிறகு சுவாமி கல்லூரியில் இருந்து ஆன்லைன் நுழைவுத் தேர்வு எழுத மகனுக்கு அனுமதி வந்தது. நுழைவுத் தேர்வு நாளும் வந்தது. எனது மகன் முதல் சுற்றிலேயே எழுத்துத் தேர்வில் தோல்வியடைந்து வெளியேறினான். நாங்கள் மிகுந்த துயரம் அடைந்தோம். சுவாமியின் மேல் கோபம் மற்றும் வெறுப்பு வந்தது.
பின் வேறுவழியின்றி, எங்கள் ஊரில் உள்ள பன்னாரி அம்மன் பொறியியல் கல்லூரியில் மேனேஜ்மென்ட் கோட்டாவில் பயோடெக்னாலஜி சேர்த்தோம். நான்கு ஆண்டு முடித்தபின் எனது மகனுக்கு கேம்பஸ் இன்டர்வியூவில் சென்னையில் பணி கிடைத்தது.
ஆனால், அவன் எம்பிஏ படிக்க விரும்புவதாக என்னிடம் கூறினான். அதுவும் சுவாமி கல்லூரியில் அப்ளை செய்யலாம் என்றான். எனக்கு குழப்பம். வேறு வழியின்றி இந்த முறை புட்டபர்த்திக்குச் சென்று அப்ளை செய்யலாம் என்று முடிவு செய்து, எனது மகனும் நானும் புட்டபர்த்திக்குச் சென்றோம். அங்கிருந்த ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் ஆன்லைனில் அப்ளை செய்தோம்.
பின்பு சுவாமி தரிசனத்திற்காக சாய்குல்வந் ஹால் சென்றோம். அங்கு ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது எம்பிஏ முடித்த மாணவர்கள் தங்களது அனுபவங்களை மேடையில் பேசினர். அதில் ஒரு மாணவர் தமிழில் பேசினார். ‘அவருக்கு சுவாமி கனவில் வந்து கூறியதால் யூ ஜி அப்ளை செய்ததாகவும் அது கிடைக்கவில்லை. பின்பு எம்பிஏ அப்ளை செய்தபோது இடம் கிடைத்து, தற்போது படிப்பை முடித்து செல்கிறேன். நன்றி சுவாமி’ என்று அவர் அனுபவத்தைக் கூறினார்.
அப்போது சுவாமியே எங்களுக்குப் பதில் சொல்லியதுபோல் இருந்தது. பின் ஊர் வந்து சேர்ந்தோம். 20 நாட்களுக்குப் பிறகு நுழைவுத் தேர்வு வந்தது. எனது மகன் எழுத்து தேர்வு மற்றும் கலந்துரையாடல். இன்டர்வியூ போன்ற மூன்று சுற்றிலும் தேர்ச்சி பெற்று இடம் கிடைக்கப் பெற்றான். எங்கள் குடும்பமே மகிழ்ச்சி அடைந்தது. அவனுக்கு ஒயிட் பீல்டு கல்லூரியில் இடம் உறுதி செய்யப்பட்டது.
கல்லூரி செல்லும் நாளும் வந்தது. நாங்கள் புட்டபர்த்திக்குச் சென்று சாமி தரிசனம் பெற்று வைட் பீல்ட் கல்லூரி வரலாம் என்று முடிவு செய்தோம். முன்னதாக எனது மகனின் உடைமைகளைப் பார்சலில் வைட் பீல்டு விடுதிக்கு அனுப்பி வைக்க சத்தியமங்கலம் சென்று அனுப்பிவிட்டு எங்கள் ஊர் திரும்பினோம்.
அப்போது எங்கள் வீட்டின் அருகே ஒரு கார் நின்றது. அதன் பின்புறக் கண்ணாடியில் பகவானின் ஆசிர்வாதத்தோடு கூடிய புகைப்படம் இருந்தது. எனக்கு மெய் சிலிர்த்து. என் மகனிடம் கூறினேன். ‘சுவாமி உன்னை அழைத்துச் செல்ல வந்துவிட்டார்’ என்று...
இன்றும் பகவான் உண்மையான பிரார்த்தனைகளுக்குச் செவிமடுக்கிறார். அவரின் வாக்கு எப்போதும் பொய்க்காது. அதற்கு நமக்குத் தேவை பொறுமையும் பக்தியும் மட்டுமே.
- அருள் வடிவேல்