
ஷீரடிக்கு இழுக்கப்பட்ட சிட்டுக்குருவி 1 - ஹேமத்பந்த்
- ரேவதி பாலு
ஷீரடிக்கு இழுக்கப்பட்ட மிக முக்கியமான சிட்டுக்குருவி பாபாவால் 'ஹேமத்பந்த்' என்று அன்போடு அழைக்கப் பட்ட ஸ்ரீ கோவிந்த ரகுநாத தபோல்கர் ஆவார்.
இவர் பாபாவைப் பற்றி தன் நெருங்கிய நண்பர்கள் காகாசாஹேப் தீக்ஷித், நானா சாஹேப் சாந்தோர்கர் ஆகியோர் மூலம் கேள்விப்பட்டிருந்தார். ஷீரடிக்குச் செல்ல வேண்டும் என்று மிக்க ஆவலோடு இருந்தார். பாபாவுக்கும் இவரால் மிக முக்கியமான காரியம் ஒன்று ஆக வேண்டியிருந்தது.
இன்று ஷீரடி சாயி பக்தர்கள் அனைவரும் பொக்கிஷமாக நினைத்து பக்தியோடு படித்துப் பாராயணம் செய்யும் ஸ்ரீ சாயி சத்சரித்திரம் நமக்குக் கிடைக்கக் காரணமாக இருந்தவர் இவர். லோனாவாலாவில் இருந்த இவரை ஷீரடிக்கு இழுத்தார் பாபா.
இவர் ஷீரடிக்குச் செல்ல தீர்மானித்த தினத்தன்று நடந்த நிகழ்ச்சியால் அவருடைய தீர்மானத்தைக் கை விட நேர்ந்தது. அவருடைய நெருங்கிய நண்பரொருவரின் ஒரே மகனுக்கு கடுமையான ஜுரம் வந்து படுத்த படுக்கையாகி விட்டான். மனிதர்களுக்குத் தெரிந்த சகல வைத்தியங்கள், நிவாரணங்கள், பரிகாரங்கள் எல்லாம் செய்யப்பட்டு கடைசியாக நண்பனுடைய குருவே அழைக்கப்பட்டு, நோயாளிக்கருகே உட்கார வைக்கப் பட்டார். ஒன்றும் பலனளிக்காமல் நண்பரின் மகன் உயிர் பிரிந்தது. இது தபோல்கருக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தன் சிஷ்யனின் ஒரே மகனைக் காப்பாற்ற முடியாத குருவால் என்ன பிரயோஜனம்? அவர் மனதில் குருமார்களைப் பற்றிய சந்தேகம் எழ ஆரம்பித்தது. ஷீரடியில் இருப்பவரும் ஒரு குருதானே? அங்கே போவதால் என்ன லாபம் என்ற எண்ணம் தோன்றி அலைக்கழிக்க ஆரம்பித்தது.
ஆனால், நானா சாஹேப் சாந்தோர்கர் அவரை விடவில்லை. திரும்பவும் வற்புறுத்தி ஷீரடிக்குப் போக வைத்தார். ஷீரடிக்குச் சென்று பாபாவை தரிசித்த அந்தக் கணமே அவருடைய புலன்களெல்லாம் திருப்தியடைந்து அவர் மெய் மறந்து போனார். சாயி தரிசனத்தின் அற்புதம் இதுவே. அவருடைய தரிசனம் ஒன்றே மனிதர்களுடைய வாழ்க்கையில் ஒழுக்கத்தையும், நடத்தையில் முழுமையான மாற்றத்தையும் கொண்டு வரும் வல்லமை படைத்தது. தன்னை இடைவிடாமல் தூண்டி சாயி பாபாவின் தரிசனத்தைப் பெற வைத்த அனைவருக்கும், தான் கடைமைப்பட்டதாக நன்றியோடு நினைத்துக் கொண்டார் தபோல்கர். வாழ்க்கையில் நம் ஆன்மிக வளர்ச்சிக்கு உதவுபவர்களே உண்மையில் நம் உற்றார் உறவினரென்று புரிந்து கொண்டார்.
ஷீரடிக்கு இவர் வந்து சேர்ந்த தினத்தன்றே இவருக்கும் பாலாசாஹேப் பாடேவுக்கும் சாதேவின் வாடாவில் (தங்குமிடம்) , "குரு உண்மையில் தேவையா?" என்ற விவாதம் நிகழ்ந்தது. எப்போதும் வாதப் பிரதிவாதங்கள், சர்ச்சைகளில் ஈடுபடுவது தபோல்கருக்கு வழக்கம்.
"ஒவ்வொருவனுக்கும் வேண்டியது சுயமுயற்சியே. விரலைக் கூட அசைக்காமல் சோம்பேறித்தனமாக முடங்கிக் கிடக்கும் சுயமுயற்சியே இல்லாத ஒருவனுக்கு குரு என்ன செய்து விட முடியும்?" என்று தபோல்கர் விவாதம் செய்தார்.
பிறகு பக்தர்களுடன் தபோல்கரும் மசூதிக்குச் சென்றபோது, "வாடாவில் என்ன வாக்குவாதம்? இந்த ஹேமத்பந்த் என்ன சொன்னார்?" என்றார் பாபா. பாபா சர்வவியாபியாகவும் சகலமும் அறிந்தவருமாகவும் இருப்பதால் தான் மசூதியில் அமர்ந்துகொண்டே, சாதேயின் வாடாவில் நடைபெற்ற விவாதத்தை அறிந்துகொள்ள முடிந்தது என்பதை உணர்ந்து கொண்ட தபோல்கருக்கு பாபாவின் மேல் மதிப்பும் மரியாதையும் அதிகரித்தது. ஆனால், தன்னை ஏன் 'ஹேமத்பந்த்' என்ற பெயரிட்டு அழைத்தார்?
'ஹேமத்பந்த்' என்பவர் யாதவ அரசவம்சத்தைச் சேர்ந்த ராமதேவ், மஹாதேவ் என்ற தேவகிரி அரசர்களின் பிரசித்தி பெற்ற மந்திரியாவார். இவர் 'சதுர்வர்க்க சிந்தாமணி' மற்றும் 'தர்ம சாஸ்திரம்' என்னும் மராத்திய நூல்களை எழுதியவர். கணக்குப் பேரேடுகளில் புதியமுறைகளை வழிமுறைக்குக் கொண்டு வந்தவர். மராத்தியச் சுருக்கெழுத்தும் இவர் கண்ட பிடிப்பே. அந்த ஹேமத்பந்தோடு தன்னை பாபா ஒப்பிட்டு அதே பெயரிட்டு ஏன் அழைத்தார் என்று தபோல்கர் யோசித்தார். தன்னுடைய விவாதம் புரியும் திறமை பற்றிய கர்வத்தை ஒழித்து, பணிவுடன் வாழ வேண்டு மென்பதை, தான் இறுதி நாள் வரை மறந்து விடக்கூடாது என்பதற்காகவே பாபா தன்னை இந்தப் பட்டப் பெயரிட்டு அழைக்கிறார் என்பதை தபோல்கர் புரிந்து கொண்டார்.
ஹேமத்பந்த் ஷீரடிக்கு வந்த சிறிது நாட்களிலேயே ஒரு அற்புதம் நிகழ்ந்தது. ஒரு நாள் காலையில் கை கால், முகம், சுத்தம் செய்து விட்டு வந்த பாபா மசூதியில் அமர்ந்து கோதுமை அரைக்க ஆரம்பித்தார். ஒரு காலி சாக்குப் பையை தரையில் போட்டு அதன் மீது இயந்திரத்தை வைத்தார். பின்பு முறத்தில் கொஞ்சம் கோதுமையை எடுத்து ஒரு டப்பாவினால் கோதுமையை அளந்து திருகைக் குழியில் இட்டார். தன் அங்கியின் கைகளை மடக்கி விட்டுக் கொண்டு மாவு திரிக்கும் இயந்திரத்தை சுற்றி அரைக்கத் தொடங்கினார். இதைப் பார்த்த ஹேமத்பந்த் மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனார்.
அதற்குள் பாபா மாவரைக்கும் செய்தி ஊருக்குள் பரவி ஆண்களும் பெண்களும் கூட்டமாக மசூதிக்கு ஓடி வந்தனர். அந்தக் கூட்டத்தில் தைரியம் வாய்ந்த நான்கு பெண்கள் அவரருகே வந்து அவர் கைகளை வலியப் பற்றி ஒதுக்கி விட்டு திருகையின் கைப்பிடியை பற்றி பாபாவின் லீலைகளைப் பாடியவாறே மாவரைக்கத் தொடங்கினர். முதலில் பாபா அவர்கள் மேல் கடுங்கோபம் கொண்டாலும் அந்தப் பெண்களின் ஆத்மார்த்த அன்பையும் பக்தியையும் கண்டு மிகவும் சந்தோஷம் கொண்டு புன்னகை பூத்த முகத்துடன் வீற்றிருந்தார்.
நான்கு சேர் கோதுமையும் முழுமையாக அரைக்கப் பட்டது. இப்போது அந்தப் பெண்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். "பாபாவுக்கு வீடோ, குடும்பமோ இல்லை. அவர் தமக்காக ரொட்டி செய்து கொள்வதும் இல்லை. வீட்டுக்கு வீடு சென்று பிச்சை எடுத்து உண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கு எதற்காக இவ்வளவு கோதுமை மாவு?" என்றாள் ஒருத்தி. இயந்திரத்தை ஓரமாக நகர்த்தி வைத்து விட்டு கோதுமை மாவை நான்கு பங்காகப் பிரித்து முறங்களில் போட்டு ஆளுக்கு ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ளத் தொடங்கினார்கள்.
இதுவரை அமைதியாக அமர்ந்திருந்த பாபாவுக்கு இப்போது கடுங்கோபம் வந்தது. "பெண்களே! உங்களுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா என்ன? இது என்ன உங்கள் அப்பன் வீட்டுச் சொத்தா நீங்கள் இஷ்டப்படி எடுத்துப் போக? இப்போது இந்த மாவை எடுத்துச் சென்று கிராம எல்லையில் கொட்டி விட்டு வாருங்கள்!" என்றார்.
இந்த வார்த்தைகளைக் கேட்டதும் பெரிதும் வெட்க மடைந்து போன அந்த நான்கு பெண்களும் மறு பேச்சின்றி மௌனமாகச் சென்று பாபா சொன்னபடியே ஷீரடி கிராம எல்லையில் அந்த மாவைக் கொட்டிப் பரப்பி விட்டு வந்தார்கள். ஷீரடிக்குப் புதிதாக வந்திருந்த ஹேமத்பந்திற்கு ஒன்றும் புரியவில்லை. கிராம மக்களை இதற்கெல்லாம் பொருளென்ன என்று வினவினார். "பாபா அரைத்தது வெறும் கோதுமையையல்ல. இப்போது காலரா நோய் கிராமத்தில் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. காலராவே அரைக்கப்பட்டு கிராமத்திற்கு வெளியில் கொட்டப்பட்டது." என்று அவர்கள் விளக்கம் அளித்தார்கள். இந்நிகழ்ச்சியின் பின் காலரா மறைந்து கிராம மக்கள் மகிழ்ச்சியுற்றனர்.
ஹேமத்பந்த் பிரமித்துப் போனார். 'கோதுமைக்கும் காலராவுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?' அந்த நொடியில் அவர் மனதில் பாபாவின் லீலைகளை, தான் கட்டாயம் எழுத வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது.
ஹேமத்பந்திற்கு பாபாவின் சரிதத்தை எழுத வேண்டு மென்ற அவா இருந்த போதிலும் அவருக்கு பாபா போன்ற ஒரு மகானின் சரிதத்தை தன்னால் எழுத முடியுமா? ஏழ்கடலின் ஆழத்தை ஒருவன் அளக்கலாம். ஆகாயத்தைக் கூட ஜோடித்து அலங்கரிக்கலாம். ஆனால், ஞானியின் வரலாற்றை எழுதுவதென்பது மிகக் கடினமான காரியமாயிற்றே? தனக்கு அந்தத் தகுதியிருக்கிறதா என்ற ஐயமும், கூடவே பயமும் எழுந்தது. பாபா அனுமதித்து விட்டால் தன்னால் எழுத முடியும் என்கிற தைரியமும் ஒரு பக்கம் மனதில் எழுந்தது.
இதைப் பற்றியே அவர் நினைத்து நினைத்து, பாபாவின் மிக நெருங்கிய அணுக்கத் தொண்டரான மாதவ்ராவ் தேஷ்பாண்டே என்கிற ஷாமாவிடம் தனக்காக அவரிடம் வேண்டிக் கேட்கும்படி விண்ணப்பித்துக் கொண்டார். ஷாமாவும் அவர் விருப்பத்தை பாபாவிடம் தெரிவித்து அனுமதி கோரியபோது, சாயிபாபா ஹேமத்பந்திற்கு உதி என்னும் திருநீறையளித்து அவர் சிரசில் கை வைத்து "இவர் இங்கே காணும் நிகழ்ச்சிகள், அனுபவங்கள் எல்லாவற்றையும் குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளட்டும். நான் இவருக்கு உதவி செய்வேன்" என்று ஆசிர்வாதம் செய்தார். பிறகு சொன்னார். "அவர் ஒரு கருவி மாத்திரமே. என்னுடைய வரலாற்றை நானே எழுதி என் அடியவர் களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். 'நான்' என்னும் அவருடைய அகங்காரத்தை அறவே களைந்து என் பாதங்களில் சமர்ப்பிக்கட்டும். அவர் இவ்வாறு செய்தால் அவருள் புகுந்து என் சரிதத்தை நானே எழுதிக் கொள்வேன்." எத்தகைய அருமையான அழகான வார்த்தைகள்? இது ஹேமத்பந்திற்கு மட்டுமல்ல. பாபாவின் சரிதத்தை எழுத முயலும் எவருக்குமே பொருந்தும்.
ஹேமத்பந்த் என்று பாபாவால் அன்பாக அழைக்கப்பட்ட திரு கோவிந்த்ராவ் ரகுநாத் தபோல்கரால் மராத்தியில் எழுதப்பட்ட நூல் தான் ஸ்ரீ சாயி சத்சரித்திரம். பாபா வாழ்ந்த காலத்தில் அவர் கூடவே இருந்த அதிர்ஷ்ட சாலியான பக்தர்களில் ஒருவரான தபோல்கர், பாபா நிகழ்த்திய அற்புதங்களை நேரடியாகப் பார்க்கும் வாய்ப்புப் பெற்றார். பாபாவின் அனுமதியுடன் அந்தச் சம்பவங்களை தொகுத்து எழுதினார்.
பாபாவின் லீலைகளை எழுதிய ஹேமத்பந்த் தான் எழுதிய நூல் அச்சிடப்படும் முன்பே துரதிர்ஷ்டவசமாக மறைந்து விட்டார். பாபாவின் ஆசி பெற்ற தாணேவைச் சேர்ந்த மற்றொரு சிறந்த பக்தரான திரு பி.வி.தேவ் அவர்களால் ஹேமத்பந்தின் கையெழுத்துப் பிரதி தொகுக்கப்பட்டு ஹேமத்பந்தின் மறைவுக்குப் பிறகு 1930 நவம்பர் 26ஆம் நாள் ஸ்ரீ சாயி சத்சரித்திரம் என்ற பெயரில் ஸ்ரீ சாயி பாபா சன்ஸ்தானால் வெளியிடப்பட்டது.
ஷீரடிக்கு இந்த லோனாவாலா சிட்டுக்குருவி பாபாவால் இழுக்கப்பட்டதால்தான் 'ஸ்ரீ சாயி சத்சரித்திரம்' என்னும் மகத்தான நூல் பாபா பக்தர்களுக்குக் கிடைத்தது.
ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தில் மூழ்கி முத்தெடுத்தோமானால் அற்புதமான அறிவுரைகள் கதை ரூபத்தில் கிடைத்து நம் வாழ்வில் நம்பிக்கை ஒளியூட்டுகின்றன.
(தொடரும்)