செகந்திராபாத்தில் ஸ்கந்தகிரி தலம் - முருகனுக்கு முடிப்பு கட்டு - என்னது, முருகனுக்கு முடிப்பு கட்டறதா?

ஆலய தரிசனம்!
Sri Subrahmanyaswamy Devalayam
Sri Subrahmanyaswamy Devalayam
Published on

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று சொல்வார்கள். அது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, பிற மாநிலங்களுக்கும் பொருந்தும். அந்த வகையில், தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் ஸ்கந்தகிரி என்ற தலத்தில் கோயில் கொண்டிருக்கிறார், சுப்ரமணியர். 

உயரம் குறைந்த ஆனால், அழகான ராஜகோபுர வாசல் வழியாக உள்ளே நுழைந்தால் நேரெதிரே பெரிய தேர் நிற்கிறது. இடது பக்கமாகத் திரும்பி குழாய் நீரில் கை, கால்களை சுத்தம் செய்து கொண்டு படியேற வேண்டும்.

குழாயடிக்குப் பக்கத்திலேயே ஓர் அறிவிப்பு - ‘எலுமிச்சம் பழத்தை இங்குதான் பிழிய வேண்டும்.’ எதற்காக இந்த அறிவிப்பு? துர்க்கை சந்நதியில் எலுமிச்சை மூடி விளக்கேற்றுபவர்கள் அங்கேயே பழத்தை இரண்டாக நறுக்கி, பிழிந்து மூடியை விளக்காக்கி, தரையை எலுமிச்சை சாற்றால் சேதப்படுத்துவதைத் தவிர்ப்பதற்காகத்தான். இது, கோயில் வெகு நேர்த்தியாக, சுத்தமாகப் பராமரிக்கப்பட்டு வருவதன் பல முறைகளில் ஒன்று.

46 படிகள் ஏறி மேலே சென்றால், முதலில் நமக்கு சுந்தர விநாயகர் தரிசனம் தருகிறார். அவருக்கு வலது பக்க சுவரை ஒட்டி அகஸ்தியர், அருணகிரிநாதர் என்று துவங்கி, வீரசூரன், ஜெயவீரமார்த்தாண்டன், வீரபத்மன், நால்வர் என்று அடுத்தடுத்து அழகுச் சிலைகள் அணிவகுக்கின்றன.

சுந்தர விநாயகர் சிறப்பு அலங்காரத்துடன் அழகாக கொலுவீற்றிருக்கிறார். அந்தப் பகுதி மட்டுமல்லாமல், சுற்றுவட்டார பக்தர்களையும் ஈர்த்தவர் இவர். கண்களில் கருணையை மட்டும் தேக்கி, அதை பக்தர்கள் மீது பிரவகிக்கும் ஆனந்தத் தோற்றம் கொண்டிருக்கிறார் விநாயகர். வேண்டுதல் நிறைவேறியதற்காகவும், பக்தியை மேலும் பெருக்கிக் கொள்ளவும் மட்டுமல்லாமல், என்னவோ இவரை தரிசித்தால் தம் தோளை அரவணைத்தபடி நல்வழியில் நடத்திச் செல்லக்கூடியவர் என்ற நட்புணர்வாகவும் பக்தர்கள் திரும்பத் திரும்ப வந்து தரிசனம் செய்கிறார்கள். 

ஆடிக் கிருத்திகை லட்சார்ச்சனை கமிட்டி என்ற ஓர் அமைப்பின் சீரிய முயற்சியால் உருவாகியிருக்கும் இக்கோயிலில், விநாயகரை வலமாக வந்தால், ஒரு மண்டபத்துக்குள் உற்சவ தெய்வச் சிலைகளை காணலாம். அவற்றில் வெள்ளியாலான காமாட்சி அம்மன் சிலை அழகு மிக்கது. லிங்க ரூபமான இறைவனைத் தழுவிய தோற்றம்! 

இங்குள்ள நடராஜர் சந்நதி சிதம்பரத்துக்கு ஒப்பானது என்கிறார்கள். சிதம்பரம் தலத்தில் நடைபெறுவது போலவே எல்லா அபிஷேகங்களும், ஆராதனை முறைகளும் இங்கும் மேற்கொள்ளப்படுகின்றன. 

ஸ்ரீதேவி-பூதேவி சமேத வரதராஜப் பெருமாள், அப்படியே காஞ்சி வரதராஜரை நினைவுபடுத்துகிறார். இவருக்கான வழிபாடெல்லாம் காஞ்சியைப் போலவே நடைபெறுகின்றன. அஷ்டாக்ஷர ஸ்வரூபியான இவருடைய சந்நதி எண்கோண அமைப்பில் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

ஷட்கோணத் தாடங்கத்துடன் ஜெயதுர்க்கா அருள்பாலிக்கிறார். அன்னையின் சந்நதிக்கு முன்னால், இருபுறமும் லட்சுமியும், சரஸ்வதியும் அழகுச் சிலைகளாக அமர்ந்திருக்கிறார்கள். 

ஏகாம்பரேஸ்வரர் சந்நதி கஜபிருஷ்டம் மாதிரியான விருத்தாகார அமைப்பில் உருவாகியிருக்கிறது. அந்த லிங்கத் திருமேனி, சந்திரர்-சூரியர், வில்வ மாலை, ருத்ராட்ச மாலை அலங்காரத்தால் வைரமாய் ஜொலிக்கிறது. ஈசனுக்கு இடப்புறம் தரிசனம் தரும் காமாட்சி அம்மனின் சந்நதி, பல்லவர் பாணி கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது. அன்னையின் கழுத்தில் ஸ்ரீசக்கரம் மாலையாகத் தொங்குகிறது. அன்னையை தரிசிக்கும் போது, ஸ்ரீசக்கரமும் நம் கண்களில் பட, நம் மனதில் நெகிழ்ச்சி பரவுகிறது.

இதையும் படியுங்கள்:
கும்பகர்ணன் ஏன் ஆறு மாதம் தூங்கிக் கொண்டே இருந்தார் தெரியுமா?
Sri Subrahmanyaswamy Devalayam

சுப்ரமணியர், வள்ளி - தேவசேனா சமேதராக அலங்காரத் தோற்றத்துடன் அருள்பாலிக்கிறார். பார்க்கப் பார்க்கப் பரவசமூட்டுகிறார் இந்த ஸ்கந்தகிரி நாயகன். 

‘முடிப்பு கட்டுதல்’ என்று ஒரு பிரார்த்தனையை இங்கே பக்தர்கள் மேற்கொள்கிறார்கள். திருமணம் கைகூடாமல் தவிக்கும் கன்னியர் பிரார்த்தனை மேற்கொண்ட சில நாட்களிலேயே மனம் போல மாங்கல்யம் கிடைக்கப் பெறுகிறார்கள். அதேபோல மகப்பேறுக்காக ஏங்கி நிற்கும் தாய்மார்கள் தொட்டில் கட்டுவதாகப் பிரார்த்தனை செய்துகொண்டு, அந்த பாக்கியம் கிடைக்கப் பெற்றபின் நன்றியுடன் கட்டி வைத்திருக்கும் தொட்டில்கள் ஏராளமாகத் தொங்குகின்றன. 

கோயிலுக்குள் சிறு தேர் ஒன்றும் உள்ளது. தேர் இழுப்பதாகப் பிரார்த்தனை செய்து கொள்பவர்களுக்காக கோயிலுக்குள்ளேயே இறைவனைத் தாங்கி, சுற்றி வருகிறது இந்தத் தேர். ஏற்கெனவே கோபுரத்தின் கீழே பார்த்த பெரிய தேர், உற்சவங்களின்போது, சுவாமியை சுமந்துகொண்டு ஊருக்குள் வலம் வருகிறது.  

ஸ்கந்தகிரி முருகன் பக்தர்கள் அனைவருக்கும் சகல சம்பத்தும் அருள்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com