விவேகானந்தருக்கு ஞான ஒளி தந்த ஸ்ரீபாத பாறை!

விவேகானந்தருக்கு ஞான ஒளி தந்த ஸ்ரீபாத பாறை!
Published on

குமரி முனையின் கிழக்கே உள்ள கடலில் இரண்டு அழகிய பாறைகள் உள்ளன. அதில் ஓரிடத்தில் பாதம் போன்ற ஓர் அடையாளம் காணப்படுகிறது. இதை, ‘தேவியின் திருப்பாதம்’ என்று கூறுவர். எனவே இது, ‘ஸ்ரீபாத பாறை’ என்று அழைக்கப்படுகிறது. முன்னாளில் இப்பாறை கரையோடு இணைந்திருந்ததாகவும் குமரி தேவியின் கோயில் இந்தப் பாறையில் அமைந்திருந்ததாகவும் கூறுவர். ஒரு சமயம் பாறையையும் கோயிலையும் கடல் சூழ்ந்துகொள்ளவே, பாறைக்கும் கரைக்கும் இடையில் உள்ள நிலம் நீரில் மூழ்கியது. எனவே, குமரி அன்னைக்கு கரையில் புதிதாக ஒரு கோயில் கட்டப்பட்டது. அதுதான் இப்போதிருக்கும் குமரி அன்னை திருக்கோயில்.

1892ல் சுவாமி விவேகானந்தர் இமாலயத்திலிருந்து தொடங்கிய தமது இந்திய சுற்றுப் பயணத்தின் இறுதிக் கட்டமாக கன்னியாகுமரி வந்து சேர்ந்தார். தேவியை வணங்கிய பின் தொலைவில் தெரிந்த இப்பாறையைக் கண்டு கடலில் நீந்திச் சென்ற அதில் தியானத்தில் ஆழ்ந்தார். அங்கேதான் தமது இந்திய சகோதரர்களின் ஏழ்மை காரணங்களையும் அவர்களின் ஆன்மிக வீழ்ச்சியையும் பற்றி ஆழ்ந்து யோசித்தார். அவர்களின் விடுதலைக்கான வழிவகைகளைக் குறித்து ஆராய்ந்தார். இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இங்குதான் சுவாமிஜிக்கு பிறந்தது. அதன் பின் மனத் தெளிவு பெற்ற சுவாமிஜி, பின்னர் அமெரிக்கா சென்று உலக சமய மாநாட்டில் இடி முழக்கமென சொற்பொழிவாற்றினார். சுவாமிஜி ஞான ஒளி பெற்ற இடமாதலால் இப்பாறை, ‘விவேகானந்தர் பாறை’ என அழைக்கப்படலாயிற்று.

இந்தப் பாறையின் மீது சுவாமி விவேகானந்தருக்கு அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன்கூடிய ஒரு நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இம்மண்டபத்தின் கிழக்குப் பக்கம் ஒரு தியான மண்டபம் உள்ளது. பக்தர்கள் அமர்ந்து சிந்தையை ஒருமுகப்படுத்தி தியானம் செய்யும் வகையில் அமைதியும் அழகும் தூய்மையும் நிறைந்து விளங்குகிறது இந்த மண்டபம்.

தேவியின் திருப்பாத அடையாளம் இருந்த இடத்தில் ஸ்ரீபாத மண்டபம் என்ற ஓர் அழகிய மண்டபம் கட்டப்பட்டுள்ளது. சுவாமி விவேகானந்தரின் உருவச் சிலை ஸ்ரீ பாத மண்டபத்தை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவு மண்டபத்தை 1970 செப்டம்பர் 2ம் தேதி இந்திய ஜனாதிபதி ஸ்ரீ வி.வி.கிரி அவர்கள் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com